தனது பேச்சு தமிழிசை சவுந்தரராஜனை காயப்படுத்தியிருந்தால் அதற்காக வருத்தம் தெரிவித்துக்கொள்கிறேன் என்று விசிக தலைவர் திருமாவளவன் இன்று (அக்டோபர் 4) தெரிவித்துள்ளார்.
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மகளிரணி சார்பில், கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையில் கடந்த அக்டோபர் 2-ஆம் தேதி மது மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு மாநாடு நடைபெற்றது.
இந்த மாநாட்டில் கலந்து கொள்வதற்கு முன்பாக சென்னை கிண்டி காந்தி மண்டபத்தில் காந்தி சிலைக்கு மரியாதை செலுத்துவதற்காக திருமாவளவன் சென்றார். ஆளுநர் மரியாதை செலுத்திய பின்பு தான் மற்றவர்களுக்கு அனுமதி அளிக்கப்படும் என்று சொன்னதால் காமராஜர் நினைவிடத்தில் மட்டும் மரியாதை செலுத்திவிட்டு அங்கிருந்து திருமா கள்ளக்குறிச்சி சென்றார்.
இந்தநிலையில், அன்றைய தினம் செய்தியாளர்களிடம் பேசிய தமிழிசை சவுந்தரராஜன், “மது ஒழிப்பு மாநாட்டிற்கு விசிக கட்சி தொண்டர்களே ஆதரவு தெரிவிக்கவில்லை. மது ஒழிப்பு மாநாடு நடத்துகிறோம். ஆனால், அதனை நடைமுறைப்படுத்தவில்லையே என்ற குற்ற உணர்ச்சியால் காந்தி சிலைக்கு திருமா மரியாதை செலுத்தாமல் சென்றிருக்கலாம்” என்றார்.
தமிழிசையின் இந்த கருத்துக்கு உளுந்தூர்பேட்டை மாநாட்டில் பதிலளித்த திருமாவளவன், “காந்தியின் கொள்கைக்கு நான் எதிரானவன், அதாவது தினமும் மது அருந்துவேன் என்று தமிழிசை பேசியதாக தெரிகிறது. தமிழிசை குடிக்க மாட்டார் என்று நம்புகிறேன். அவரைப் போல எனக்கும் அந்த பழக்கம் இல்லை” என்று தெரிவித்திருந்தார்.
திருமாவளவனின் இந்த பேச்சு சர்ச்சையானது. பாஜக தரப்பிலிருந்து திருமாவளவன் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று அக்கட்சியின் செய்தி தொடர்பாளர் ஏ.என்.எஸ்.பிரசாத்தும், விசிக தரப்பிலிருந்து தமிழிசை மன்னிப்பு கேட்க வேண்டும் என்று அக்கட்சியின் பொதுச்செயலாளர் சிந்தனை செல்வனும் நேற்று (அக்டோபர் 3) அறிக்கை வெளியிட்டிருந்தனர்.
இதற்கிடையில், “திருமாவளவன் நாகரிகமான ஒரு அரசியல்வாதி என்று நினைத்துக்கொண்டிருந்தேன். ஆனால், அவர் தரம் தாழ்ந்து மிகவும் மோசமாக கருத்து தெரிவித்து வருகிறார். அவரிடம் நான் இதை எதிர்பார்க்கவில்லை. அவரது அரசியல் வாழ்வில் இது ஒரு கரும்புள்ளி” என்று தமிழிசை காட்டமாக விமர்சித்திருந்தார்.
இந்தநிலையில், தனது பேச்சுக்கு திருமாவளவன் வருத்தம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் அளித்துள்ள பேட்டியில், “காந்தி கொள்கையில் எனக்கு முரண்பாடு, குற்றவுணர்வு அதனால் காந்தி சிலைக்கு மரியாதை செலுத்தவில்லை என்று தமிழிசை பேசியிருக்கிறார். இதை பொதுமக்கள் எப்படி புரிந்துகொள்வார்கள்? அதனால் தான் உங்களை போல் நானும் குடிக்க மாட்டேன் என்று சொன்னேன். இதில் என்ன தரம் தாழ்ந்து பேசியிருக்கிறேன்.
தமிழிசை எனக்கு நீண்ட காலம் பழக்கம். அவர் கணவர் மீது மிகுந்த மரியாதை இருக்கிறது. அவருடைய தந்தை இந்த மாநாட்டிற்காக இரண்டு பக்கம் வாழ்த்து செய்தி அனுப்பியிருக்கிறார். அதை கூட நேரமின்மையால் மாநாட்டில் வாசிக்க முடியவில்லை. அப்படி நாங்கள் பெரிதும் மதிக்கக்கூடிய ஒரு குடும்பத்தை சேர்ந்தவர் தான் தமிழிசை. எனது பேச்சு அவரை காயப்படுத்தியிருந்தால் அதற்காக வருந்துகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.
செல்வம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
‘வேட்டையன்’ படத்தில் நடிக்க ரஜினிகாந்த் வாங்கிய சம்பளம் எவ்வளவு? அமிதாப்புக்கு இவ்வளவு தானா?
சென்னை மெட்ரோ 2: மத்திய அரசு 63,246 கோடி ஒதுக்கியதா? – தமிழக அரசு விளக்கம்!
Comments are closed.