டெல்லியை கைப்பற்றிய பாஜக… இண்டியா கூட்டணி மீது திருமா ஆதங்கம்!

Published On:

| By christopher

thiruma accuse congress for bjp win

டெல்லியில் பாஜக ஆட்சி அமைப்பதற்கு ஆம் ஆத்மி – காங்கிரஸ் இடையே ஒற்றுமை இல்லை என்பதே முதன்மையான காரணம் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் குற்றஞ்சாட்டியுள்ளார். thiruma accuse congress for bjp win

ஆம் ஆத்மி அரசை பாஜக முடக்கியது!

இதுதொடர்பாக அவர் இன்று (பிப்ரவரி 9) வெளியிட்டுள்ள அறிக்கையில், “டெல்லியில் ஆட்சி நடத்தி வந்த ஆம் ஆத்மியை அதிகாரத்திலிருந்து இறக்குவதற்காக பாஜக தனது அத்தனை பலத்தையும் பயன்படுத்தியது. முதலமைச்சராக இருந்த அர்விந்த் கெஜ்ரிவால் உள்ளிட்டவர்கள் மீதும் அமைச்சர்கள் மீதும் வழக்குகள் போடப்பட்டு சிறைப்படுத்தப்பட்டனர்.

அதிகாரிகள் நியமனம், அன்றாட நிர்வாகம் ஆகியவற்றைச் செய்வதற்கு டெல்லி அரசுக்கு அதிகாரம் உள்ளது என்று உச்ச நீதிமன்றத்தின் 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு அளித்தத் தீர்ப்பை ரத்து செய்வதற்காக நாடாளுமன்றத்தைப் பயன்படுத்தி உடனடியாக சட்டத்திருத்தத்தை பாஜக அரசு கொண்டு வந்தது. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆம் ஆத்மி அரசை செயல்படவிடாமல் முடக்கியது. இந்த அடாவடிகளுக்கு இந்தியா கூட்டணியின் தலைமைப் பொறுப்பில் இருக்கும் காங்கிரஸ் கட்சி பெரிதாக எதிர்ப்பு எதுவும் தெரிவிக்கவில்லை.

ஆம் ஆத்மியின் தோல்விக்கு காங்கிரஸ் காரணம்!

காங்கிரஸ் கட்சி தனக்கு போட்டியாக ஆம் ஆத்மியைப் பார்த்ததும், காங்கிரஸ் கட்சி பலவீனமாவது தனக்கு சாதகம் என ஆம் ஆத்மி கருதியதுமே இதற்குக் காரணம். இந்தியா கூட்டணியில் ஆம் ஆத்மி இடம் பெற்ற போதும் அது பொருந்தாக் கூட்டணியாகவே இருந்தது. டெல்லியில் இப்போது பாஜக ஆட்சி அமைப்பதற்கு ஆம் ஆத்மி- காங்கிரஸ் கட்சிகள் இடையே ஒற்றுமை இல்லை என்பதே முதன்மையான காரணம் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சி கருதுகிறது.

டெல்லி தேர்தலில் ஆம் ஆத்மியை விட சுமார் இரண்டு சதவீத வாக்குகளையே பாஜக கூடுதலாகப் பெற்றிருக்கிறது. அங்கு தனியாகப் போட்டியிட்ட காங்கிரஸ் கட்சி சுமார் ஏழு சதவீத வாக்குகளைப் பெற்றிருக்கிறது. அர்விந்த் கெஜ்ரிவால் போட்டியிட்ட தொகுதி உட்பட 13 தொகுதிகளில் ஆம் ஆத்மியின் தோல்விக்கு காங்கிரஸ் பெற்ற வாக்குகளே காரணமாகியுள்ளன.

டெல்லி தேர்தலில் ஆம் ஆத்மி கட்சிக்கு இந்தியா கூட்டணியில் இருக்கும் சமாஜ்வாதி, சரத் பவாரின் தேசியவாத காங்கிரஸ், ராஷ்ட்ரிய ஜனதா தளம் உள்ளிட்ட சில கட்சிகள் ஆதரவு தெரிவித்தன. ஆதரவு தெரிவித்த அந்தக் கட்சிகளுக்கு டெல்லியில் வாக்கு வங்கி எதுவும் இல்லை. எனவே அது காங்கிரஸ் அல்லாத அணி ஒன்றை உருவாக்கும் முயற்சியாகவே பார்க்கப்பட்டது.

இந்தியா கூட்டணி கூட்டம் அவசியம்! thiruma accuse congress for bjp win

டெல்லி தேர்தலில் பாஜக வெற்றி பெறுவதற்கு காங்கிரஸ் எப்படி காரணமாக அமைந்துவிட்டதோ, அப்படி இந்தியா கூட்டணியில் இருந்த பிற கட்சிகளின் இந்த அணுகுமுறையும் ஒருவிதத்தில் காரணமாகியுள்ளன.

நாடாளுமன்றத் தேர்தல் முடிந்ததற்குப் பிறகு இந்தியா கூட்டணி கூட்டத்தைக் கூட்டுவதில் காங்கிரஸ் கட்சி அக்கறை காட்டவில்லை. நாடாளுமன்றத் தேர்தலில் பாஜகவுக்குப் பெரும்பான்மை கிடைப்பதைத் தடுத்த போதிலும் அதன் பிறகு நடைபெற்ற மாநிலத் தேர்தல்களில் பாஜக வெற்றி பெறுவதற்கு இந்தியா கூட்டணியே வழி வகுத்தது என்பதே கசப்பான உண்மையாகும்.

மக்கள் நலனை விடத் தத்தமது கட்சிகளின் வெற்றியையே இந்தியா கூட்டணி கட்சிகள் முதன்மையாகக் கருதுகின்றன என்பதையே இது காட்டுகிறது. இதே நிலை நீடித்தால் அடுத்தடுத்து பீகாரிலும் உத்தரப்பிரதேசத்திலும் நடைபெறவிருக்கும் தேர்தல்களிலும் இந்தியா கூட்டணி வெற்றி பெறுவது சாத்தியமில்லாமல் ஆகிவிடும். மக்களும்கூட நம்பிக்கை இழந்து விடுவார்கள்.

எனவே டெல்லி தேர்தல் முடிவுகளை இந்தியா கூட்டணி கட்சிகள் ஒரு படிப்பினையாக எடுத்துக்கொள்ள வேண்டும். இந்தியா கூட்டணியின் கலந்தாய்வுக் கூட்டத்தைக் கூட்டுவதற்கு காங்கிரஸ் கட்சி உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறோம்” என திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share