மூன்றாவது அணி: யாருக்குச் சாதகம்?

Published On:

| By Balaji

நீண்ட இழுபறிக்குப்பின்னர், மக்கள் நலக் கூட்டணியில் தேமுதிக இணைந்துள்ளது. விஜயகாந்த் இணைந்ததால், மக்கள் நலக் கூட்டணி இனி, ‘கேப்டன் விஜயகாந்த் அணி’ என்று அழைக்கப்படும் என்று ஒருங்கிணைப்பாளர் வைகோ மகிழ்ச்சியாக அறிவித்தார்.

இதனால், தமிழகத் தேர்தல் வரலாற்றில் 3வது முறையாக குறிப்பிடும்படியிலான, 3வது அணி களத்தில் உள்ளது. திமுக, அதிமுக என இரண்டு கட்சிகளில் ஒன்றை மட்டுமே தேர்ந்தெடுக்க வேண்டும் என்ற தமிழக அரசியல் சூழ்நிலையில், இந்த 3வது அணி ஏதோ ஒருவகையில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆனால் 3வது அணியானது, மக்கள் நம்பிக்கை பெற்று தனித்து ஆட்சியமைக்கும்விதமாக உருவெடுத்ததில்லை.

இந்தத் தேர்தலின் சிறப்பாக, இந்தமுறை பலமுனைப் போட்டி உருவாகியுள்ளது. பல முதல்வர் வேட்பாளர்களும் உள்ளனர். திமுக, அதிமுக, 3வது அணி தவிர, அன்புமணியை முதலமைச்சர் வேட்பாளராக முன்னிறுத்தி பாமக-வும், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியும் களத்தில் உள்ளன.

தமிழக வரலாற்றில் கடந்த 1989ம் ஆண்டு திமுக, அதிமுக கட்சிகளுக்கு மாற்றாக முதன்முறையாக சொல்லிக்கொள்ளும்விதமாக 3வது அணி களம் கண்டது. அந்த ஆண்டு அதிமுக, ஜானகி தலைமையிலும், ஜெயலலிதா தலைமையிலும் இரண்டாக உடைந்து தேர்தலைச் சந்தித்தது. அந்தத் தேர்தலில் காங்கிரஸ் தனித்துப் போட்டியிட்டது. அதற்கு முந்தைய தேர்தல்களில், காங்கிரஸ் ஏதாவது ஒரு திராவிடக் கட்சியுடன் கூட்டணி அமைத்தே தேர்தலைச் சந்தித்துவந்தது.

இந்தக் குழப்பத்தால், பிரிந்துபோன அதிமுக வாக்காளர்களும், நடுநிலை வாக்காளர்களும் போட்ட வாக்குகளால், 13 ஆண்டுகளுக்குப் பிறகு திமுக மீண்டும் ஆட்சிக்கு வந்தது. திமுக கூட்டணி, தோல்வியைத் தழுவிய 1984ம் ஆண்டு தேர்தலில்பெற்ற வாக்குச் சதவிகிதத்தைவிட, இந்தமுறை 37.9 வாக்கு சதவிகிதத்தைப் பெற்றிருந்தது. அப்போது, 3வது அணி 21.8 சதவிகிதம் வாக்குகளைப் பெற்றது.

1996ம் ஆண்டு மூன்றாவது அணி உருவானது. அப்போது மதிமுக, மார்க்சிஸ்ட் கட்சியுடன் கூட்டணி அமைத்துப் போட்டியிட்டது. இந்தத் தேர்தலில், அதிமுக கூட்டணி 27 சதவிகித வாக்குகள் மட்டுமே பெற்று, ஆட்சியை இழந்தது. இந்தத் தேர்தலில் 3வது அணி 4.9 சதவிகித வாக்குகளை மட்டுமே பெற்றது. இந்தத் தேர்தலில், 52 சதவிகித வாக்குகளைப் பெற்று திமுக ஆட்சி அமைத்தது.

1989 மற்றும் 1996ம் ஆண்டு தேர்தல்களில் திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி மற்றும் 3வது அணி பெற்ற வாக்கு விகிதங்களை இந்த வரைபடம் காட்டுகிறது.

இந்தமுறை திமுக, அதிமுக கட்சிகளுக்கு மாற்றாக, தமிழகத்தை ஆட்சி செய்ய தேமுதிக தலைமையிலான 3வது அணியும், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியும் களத்தில் உள்ளன. பாமக-வும் தனியாக களத்தில் உள்ளது. கட்சி சாராத வாக்காளர்களும், முதன்முறை வாக்காளர்களுமே தேர்தல் வெற்றியைத் தீர்மானிப்பவர்களாக இருக்கப் போகிறார்கள்.

பலமுனைப் போட்டி உருவாகியுள்ள தமிழக தேர்தல் களத்தில் இம்முறை யார் வெல்லப் போகிறார்கள் . இது தொடர்பாக அலசுகிறது இந்த புள்ளி விபரக் கட்டுரை.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share