ஏதோ ஒரு தருணத்தில், ஏதோ ஒரு பிரச்னைக்காக அல்லது தேவைக்காக ரத்தப் பரிசோதனை (Blood Test) மேற்கொள்ள வேண்டிய அவசியம் நம்மில் பலருக்கும் நிச்சயம் வரும். அப்படி ரத்தப் பரிசோதனை செய்துகொள்வதற்கு முன் சில அடிப்படை விஷயங்களை கவனத்தில் கொள்வது சிறந்தது என்கிறார்கள் நோய்க்குறியியல் மருத்துவர்கள். அவை… Things to consider before taking blood test
முதல் நாள் இரவு எட்டு மணி நேரம் நன்றாகத் தூங்கியிருக்க வேண்டும்.
ரத்தப் பரிசோதனை செய்யும்போது, சில நேரங்களில் நரம்பு கிடைக்காமல், வேறு வேறு இடங்களில் குத்திக் குத்தி ரத்தம் எடுக்க முயற்சி செய்வதைப் பார்த்திருப்பீர்கள். அதற்கு காரணம், உடலில் நீர்ச்சத்து இல்லாததுதான். எனவே, ரத்தப் பரிசோதனை செய்யப் போவதற்கு முன்பு, நிறைய தண்ணீர் குடிக்க வேண்டும்.
பெரும்பாலும் முழங்கையின் உள்புறத்தில் ரத்தம் எடுப்பார்கள். அந்த இடத்தைச் சுத்தமாக வைத்திருக்க வேண்டியது அவசியம்.
அந்த இடத்தை மறைக்கும்படியோ, இறுக்கும்படியோ உடை அணிய வேண்டாம். தளர்வான உடை அணிந்து செல்ல வேண்டியது முக்கியம். ரத்தம் எடுப்பதற்கும் அதுதான் வசதியாக இருக்கும்.
பிளட் டெஸ்ட்டுக்கு 5-6 மணி நேரத்துக்கு முன்பாக, உடலை வருத்தும் படியான, கடுமையான வொர்க் அவுட் செய்வதையும் தவிர்க்க வேண்டும்.
ரத்தப் பரிசோதனை கொடுக்க மருத்துவமனைக்கோ, லேபுக்கோ போகும்போது கைவசம் ஒன்றிரண்டு சாக்லேட், பழ ஜூஸ் போன்றவற்றை எடுத்துச் செல்வது பாதுகாப்பானது.
திடீரென மயக்கம், தலைச்சுற்றல், வேறு ஏதேனும் அசௌகர்யங்களை உணர்ந்தால் சட்டென அவற்றைச் சாப்பிடலாம்.
ரத்தப் பரிசோதனைக்குச் செல்வதற்கு முன் கண்டிப்பாக ஆல்கஹால் அருந்தியிருக்கக்கூடாது. காபி, கொழுப்பு நிறைந்த உணவுகளையும் தவிர்க்க வேண்டும். குறிப்பாக, ரத்தப் பரிசோதனைக்கு 6 மணி நேரத்துக்கு முன்பிலிருந்து இதைக் கடைப்பிடிக்க வேண்டும்.
சிலருக்கு மருத்துவமனை, பரிசோதனை என்றாலே ஒருவித பதற்றம் ஒட்டிக்கொள்ளும். அது தேவையில்லை. உடலையும் மனதையும் ரிலாக்ஸ்டாக வைத்திருக்க வேண்டியது அவசியம். உடலை இறுக்கமாக வைத்துக்கொள்ளாமல் தளர்வாக வைத்திருக்க வேண்டும்.
ரத்தப் பரிசோதனைக்கு முன், டெஸ்ட் எடுப்பவரிடம் அல்லது மருத்துவரிடம் உங்கள் உடல்நிலை, எடுத்துக்கொள்ளும் மருந்துகள், மருந்து அலர்ஜி போன்ற தகவல்களை முன்கூட்டியே சொல்லிவிடுவது அவசியம்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
இனி விளையாடிக் கொண்டே வேலை தேடலாம்!