நெல்லையில் திருட வந்த வீட்டில் ஒரு ரூபாய் கூட இல்ல.. ஆனால் எதற்கு இத்தனை கேமரா வைத்துள்ளீர்கள் என்று திருடன் கடிதம் எழுதி வைத்து சென்றுள்ள சம்பவம் அதிர்ச்சியையும், சுவாரசியத்தையும் ஏற்படுத்தி உள்ளது.
நெல்லை பழைய பேட்டை பகுதியைச் சேர்ந்த ஜேம்ஸ் பாண்ட். இவர் தனது மகளை பார்ப்பதற்காக தனது வீட்டை பூட்டி விட்டு, மதுரைக்கு குடும்பத்தோடு சென்றுள்ளார். அப்போது வீட்டை உடைத்து வீட்டிற்குள் வந்த மர்ம நபர்கள் வீட்டிலிருந்த பீரோ மற்றும் பொருட்களை உடைத்து நகைகள் மற்றும் பணம் கொள்ளையடிக்கும் நோக்கில் தேடிப் பார்த்துள்ளார்கள்.
திருடர்கள் எவ்வளவு தேடியும் அங்கு எதுவும் கிடைக்கவில்லை.அப்போது அந்த வீட்டில் இருந்த ஒரே ஒரு உண்டியல் மட்டும் கண்ணில் பட்டுள்ளது. இதனால் வேறு வழியின்றி உண்டியலை திருடி சென்றுள்ளனர்.
கடைசியாக வீட்டு உரிமையாளருக்கு திருடன் ஒரு நான்கு பக்கங்களை கொண்ட கடிதம் ஒன்றையும் எழுதி வைத்து விட்டு சென்றுள்ளார்.
வீடு திரும்பிய ஜேம்ஸ் பாண்ட் வீட்டில் இருந்த பொருட்கள் சிதறி கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். அப்போது வீட்டில் திருடன் எழுதி வைத்து விட்டு சென்ற கடிதம் ஒன்று இருந்தது.
அந்த கடிதத்தில், வீட்டில் ஒரு ரூபாய் கூட இல்லை.. அடுத்த தடவை என்னை மாதிரி யாராவது திருட வந்தால் யாரும் ஏமாற வேண்டாம். காசு வைக்கவும் “எதற்கு இத்தனை கேமரா போங்கடா வெண்ணைகளா.. என்னை மன்னித்து விடுங்கள். இப்படிக்கு திருடன் என எழுதி வைத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
மேலும் வீட்டில் இருந்த சிசிடிவி கேமராவில் ஹார்ட் டிஸ்கையும் திருடன் திருடிச் சென்றுள்ளார். இந்த சம்பவம் குறித்து பேட்டை காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.
திருட வந்த வீட்டில் நகை, பணம் இல்லாதததால் தன் ஆதங்கத்தை வெளிப்படுத்தியதோடு வீட்டின் உரிமையாளருக்கு ஒரு வேண்டுகோளையும் வைத்துவிட்டு சென்றுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
