முத்துராமலிங்க தேவர் தேசியமும் தெய்வீகமும் தனது இரு கண்களாகக் கொண்டு செயல்பட்டவர் என்று எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி இன்று(அக்டோபர் 30) தெரிவித்துள்ளார்.
ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 30ஆம் தேதி பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் பிறந்தநாள் தேவர் ஜெயந்தி என்ற பெயரில் கொண்டாடப்படுகிறது. இன்று 117-ஆவது ஜெயந்தி விழா, 62-ஆவது குரு பூஜை விழா ஆகும்.
இதனை முன்னிட்டு முதலமைச்சர் ஸ்டாலின், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை உள்ளிட்டோர் அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
தமிழக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமியும் ராமநாதபுரம் பசும்பொன்னில் இருக்கும், முத்துராமலிங்க தேவரின் நினைவகத்திற்குச் சென்றார்.
அங்கு தேவரின் உருவச்சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்பு பத்திரிகையாளர்களிடம் பேசிய அவர் ” தேசியமும் தெய்வீகமும் தனது இரு கண்களாகக் கொண்டு செயல்பட்டவர் முத்துராமலிங்க தேவர். தமிழகத்தின் முன்னாள் முதல்வர் எம்ஜிஆரின் ஆட்சி காலகட்டத்தில்தான் தமிழக அரசின் சார்பாக முத்துராமலிங்க தேவரின் பிறந்தநாள், ‘தேவர் ஜெயந்தி’ விழாவாக கொண்டாடப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
எம்ஜிஆர் தான் 1980 ஆம் ஆண்டு தமிழகச் சட்டமன்றத்தில் முத்துராமலிங்க தேவரின் முழு உருவச்சிலையைத் திறந்துவைத்தார். முன்னாள் முதல்வர் ஜெயலலிதா 1994 ஆம் ஆண்டு சென்னை நந்தனத்தில் வெண்கலத்திலான முத்துராமலிங்க தேவரின் முழு உருவச்சிலையைத் திறந்து வைத்தார்.
அதே ஆண்டில் பசும்பொன் நினைவகத்தில் இருக்கும் அவரது சிலைக்கு 13.5 கிலோ தங்கத்திலான கவசம் அணிவித்தார் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா.
இந்திய விடுதலை போராட்டத்தில் முத்துராமலிங்க தேவர் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸுடன் இணைந்து செயல்பட்டார். மேலும் குற்றப் பரம்பரை சட்டத்திற்கு எதிராகப் போராடி, அதைத் தகர்த்தெரிந்தவர் முத்துராமலிங்க தேவர்.
அவர் மேடையில் சொற்பொழிவு ஆற்றுவதில் மிகப்பெரிய வல்லமை பெற்றவர். அதனால் ஆங்கிலேயர்கள் அவரது பேச்சைத் தடுப்பதற்காக வாய்ப்பூட்டுச் சட்டத்தைக் கொண்டுவந்தார்கள்.
வீரம், விவேகம், தன்னடக்கம், எளிமை போன்ற பண்புகளுக்குச் சொந்தக்காரர் அவர். தன்னுடைய நிலங்களை தாழ்த்தப்பட்டவர்களுக்கும், பல்வேறு சமுதாயத்தில் உள்ள ஏழை மக்களுக்கும் பிரித்துக்கொடுத்து அவர்களின் வாழ்க்கையில் ஒளியேற்றியவர். 1952 ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலிலும் சட்டமன்ற தேர்தலிலும் ஒரே நேரத்தில் வெற்றிபெற்று மக்கள் செல்வாக்கை நிரூபித்தார்” என்று கூறினார்.
எடப்பாடி பழனிசாமியுடன் முன்னாள் அமைச்சர்கள் ஆர்.பி.உதயகுமார், செல்லூர் ராஜு மற்றும் கட்சி நிர்வாகிகள் உடன் இருந்தனர்.
முன்னதாக முத்துராமலிங்க தேவருக்காக திமுக அரசு என்னென்ன செய்தது என முதல்வர் ஸ்டாலின் பட்டியலிட்ட நிலையில் எடப்பாடி பழனிசாமி இவ்வாறு கூறியுள்ளார்.
–அப்துல் ரஹ்மான்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….
இன்ஸ்டா பக்கத்தில் கடைசி சமந்தா படத்தையும் நீக்கிய நாகசைதன்யா
தேவரை போற்றக்கூடிய திட்டங்களை தொடர்ந்து செயல்படுத்துவோம்: ஸ்டாலின் பேட்டி!