தமிழக சட்டப்பேரவை இன்று (ஜனவரி 11) கடைசி நாளாக கூடியது. ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதான விவாதத்தில் முதல்வர் ஸ்டாலின் பதிலுரை ஆற்றினார்.
அப்போது, ஆளுநருக்கு கண்டனம் தெரிவித்து பேசிய முதல்வர் ஸ்டாலின், “2011 முதல் 2021 வரை பாதாளத்தில் இருந்த தமிழகத்தை மீட்டெடுத்திருக்கிறோம்.
இன்னொரு பக்கம் ஒன்றிய அரசு தமிழகத்தை வஞ்சித்து வருகிறது. மாநில அரசுகளுக்கு எதிரான கொள்கைகளை விதித்து அரசு திட்டத்தை செயல்படுத்துவதில் சிரமங்களை உண்டாக்குகிறது. அந்தத் திட்டங்கள் முடங்குகிற சூழ்நிலையையும் உருவாக்கி வைத்திருக்கிறது ஒன்றிய அரசு.
கடந்தாணடு மிக்ஜாம் புயல் காரணமாக தென் மாவட்டங்களில் கன மழை பெய்தது. இந்த ஆண்டு பெஞ்சல் புயல் பாதிப்பை ஏற்படுத்தியது.
இரண்டு பேரிடர்கள் தாக்கிய பிறகும் மிக சொற்பமாக 276 கோடி ரூபாயை மிக தாமதமாக ஒன்றிய அரசு வழங்கியது.
மாநில அரசு கோரிய 37,906 கோடி ரூபாயில் ஒரு சதவிகிதம் கூட இது இல்லை” என்று கூறினார்.
“மீண்டும் மீண்டும் டங்ஸ்டன் விவகாரத்தை பற்றி பேசி மதுரை மக்களை குழப்ப பார்க்கிறார்கள், கனிம வளங்கள் விஷயத்தில் மாநில உரிமையை ஒன்றிய அரசு பறிக்கிற சட்டத்தை ஆதரித்து டங்ஸ்டன் சுரங்க ஏலத்துக்கு வழி வகுத்தது அதிமுக தான். ஆனால் நாங்கள் இந்த சட்டத்தை நாடாளுமன்றத்திலேயே எதிர்த்தோம்” என்று முதல்வர் ஸ்டாலின் பேசிக் கொண்டிருந்தபோதே, இருக்கையில் இருந்து எழுந்த அதிமுக எம்எல்ஏக்கள், எதிர்ப்பு தெரிவித்து கோஷம் எழுப்பத் தொடங்கினர்.
அப்போது முதல்வர் ஸ்டாலின் நான் பேசி முடித்ததும் நீங்கள் பேசுங்கள் என்று சொல்ல சபாநாயகர் அப்பாவு முதல்வர் பேசி முடித்ததும் அனுமதி தருகிறேன் ப்ளீஸ் உட்காருங்கள் என்று கேட்டுக்கொண்டார்.
தொடர்ந்து பேசிய முதல்வர் ஸ்டாலின், “டங்ஸ்டன் வந்தால் நான் முதல்வராக இருக்க மாட்டேன் என்று சட்டமன்றத்திலும் சொல்லி இருக்கிறேன். இதற்குப் பிறகும் மக்களை குழப்பி குளிர் காய வேண்டாம். குளிர் காய நினைப்பவர்களுக்காக மட்டுமே இதை சொல்கிறேன்” என்று குறிப்பிட்டார்
எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட அதிமுக எம்எல்ஏக்கள் சட்டப்பேரவைக்கு கருப்பு சட்டை அணிந்து வந்தது பற்றி பேசிய ஸ்டாலின், “அவர்கள் கருப்பு சட்டை அணிந்து வந்த போது எனக்கு கோபம் வரவில்லை. சிரிப்புதான் வந்தது. இப்படியாவது கருப்பு சட்டை போடுகிறார்களே என்று மகிழ்ந்து கொண்டேன். கருப்பு சட்டை போடுவது உங்களுடைய உரிமை அதில் நான் தலையிடவில்லை.
என்னுடைய கேள்வி எல்லாம், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு மாநில சட்டமன்றத்தையே மதிக்காமல் ஆளுநர் நடந்து கொள்கிறார்.
அவரைக் கண்டித்து கருப்பு சட்டை அணியும் துணிச்சல் உங்களுக்கு ஏன் இல்லை என்பதுதான் என்னுடைய கேள்வி.
இயற்கை பேரிடரால் நிவாரண நிதி கூட தர மறுத்து இரக்கம் இல்லாமல் நடந்துகிற ஒன்றிய அரசை பார்த்து கருப்பு சட்டை அணிந்து இருந்தால் உங்களை வாழ்த்தியிருப்பேன் மகிழ்ச்சி அடைந்திருப்பேன்.
தேசிய கல்விக் கொள்கை மூலமாக பள்ளி கல்வியையும் யுஜிசி மூலமாக உயர் கல்வியையும் சிதைக்க நினைக்கிற பாசிச கல்விக் கொள்கையை கண்டித்து கருப்பு சட்டையை அணிந்திருந்தால் மனதார பாராட்டி இருப்பேன்.
ஆட்சியில் இருந்த காலம் முதல் பாஜகவுக்கு நீங்கள் துணையாக நின்று இருக்கிறீர்கள். இருட்டு அரசியல் செய்கிறவர்களுக்கு கருப்பு சட்டை அணிய எந்த தார்மீக உரிமையும் இல்லை” என்று குறிப்பிட்டார்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
பிரியா
அண்ணாமலையாகிய நானும் சொல்கிறேன்… இந்தி குறித்த கேள்விக்கு பதில்!