தமிழ்நாட்டின் கீழடி (Keezhadi) அகழாய்வு தொடர்பான அறிக்கைகளில் குறைகள் இருக்கின்றன; இந்த அறிக்கையை வெளியிடுவதில் கால தாமதம் செய்யும் நோக்கம் எதுவும் இல்லை என்று மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.
மக்களவையில் கீழடி அகழாய்வு தொடர்பாக திமுக நாடாளுமன்ற குழுத் தலைவர் கனிமொழி எம்பி கேள்வி எழுப்பி இருந்தார்.
- தமிழ்நாட்டில் உள்ள கீழடி தொல்லியல் தளத்தின் அகழ்வாராய்ச்சி அறிக்கையை வெளியிடுவதில் ஏற்பட்டிருக்கும் தாமதத்திற்கான காரணங்கள் என்ன?
- ஜனவரி 2023 இல் தயாரிக்கப்பட்டு இந்திய தொல்பொருள் ஆய்வு மையத்திற்கு (ASI) சமர்ப்பிக்கப்பட்ட கீழடி வரைவு அகழ்வாராய்ச்சி அறிக்கையை அரசாங்கம் பெற்றதா? அதை ஏற்றுக்கொண்டதா? அப்படியானால், அதன் விவரங்கள் என்ன?
- இல்லையென்றால், அதற்கான காரணங்கள் என்ன? இந்த வரைவு அறிக்கை மீது ஒன்றிய அரசாங்கத்தால் அல்லது ASI ஆல் அதிகாரப்பூர்வமாக ஆட்சேபனைகள் ஏதும் எழுப்பப்பட்டதா?
- கீழடி அகழ்வாராய்ச்சி பற்றி தாக்கல் செய்யப்பட்ட அசல் அறிக்கையை மதிப்பாய்வு செய்ய அல்லது மாற்றியமைப்பதற்காக தற்போது ஒப்படைக்கப்பட்டுள்ள அதிகாரி அல்லது அதிகாரிகள் பற்றிய விவரங்கள் என்ன?
- கீழடி குறித்த இறுதி அறிக்கையை பொதுவில் வெளியிடுவதற்கும் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்வதற்கும் அரசு ஏதும் காலக்கெடு வைத்துள்ளதா?
- கிமு 580 க்கு முந்தைய மிகவும் மேம்பட்ட நாகரிகத்தை சுட்டிக்காட்டும் பல அகழ்வாராய்ச்சி தளங்கள் மற்றும் கண்டுபிடிப்புகள் இருக்கும் நிலையில், கீழடியை தேசிய முக்கியத்துவம் வாய்ந்த இடமாக அரசாங்கம் அதிகாரப்பூர்வமாக அங்கீகரித்துள்ளதா? அப்படியானால், அதன் விவரங்கள் என்ன? இல்லையென்றால், அதற்கான காரணங்கள் என்ன?” என கேள்விகளை எழுப்பியிருந்தார்.
இதற்கு மக்களவையில் மத்திய கலாச்சாரத்துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத் அளித்த பதில்: தமிழ்நாட்டில் கீழடியில் கடந்த 2014-15 மற்றும் 2015-16-ம் ஆண்டுகளில் நடத்தப்பட்ட அகழ்வாராய்ச்சி குறித்த அறிக்கை கடந்த 2023-ம் ஆண்டு ஜனவரி மாதம் இந்திய தொல்லியல் துறை வாயிலாக பெறப்பட்டுள்ளது.
இந்த அறிக்கை துறை சார்ந்த நிபுணர்களின் பரிசீலனையில் உள்ளது. இந்த அகழ்வாராய்ச்சி அறிக்கை குறித்த பரிசீலனை நடைமுறைகள் அதன் பணிசார்ந்த ஒருங்கிணைப்பை உறுதி செய்ய வேண்டியது அவசியமானது. இந்த ஆராய்ச்சிகளின் மூலம் கண்டறியப்பட்ட குறிப்பிடத்தக்க முடிவுகள் தொடர்பாக குறை காண்பதற்கோ, அல்லது அந்த அறிக்கையை வெளியிடுவதில் காலதாமதம் செய்யும் நோக்கமோ இல்லை.
முதல் இரண்டு கட்டங்களாக நடத்தப்பட்ட இந்த அகழ்வாராய்ச்சி குறித்த அறிக்கைகள் நிபுணர்களின் பரிசீலனையில் உள்ளன.
- அகழ்வாராய்ச்சி நடத்தப்பட்ட முறைகள்
- காலவரிசை
- விளக்கம்,
- முன்னிலைப்படுத்துதல்
- விரிவான பகுப்பாய்வுகள்
போன்ற அம்சங்களில் குறைபாடுகள் காணப்படுகின்றன.
இது தொடர்பான விவரங்கள் அகழாய்வில் ஈடுபட்டுள்ள குழுவின் தலைமைக்கு தெரிவிக்கப்பட்டுள்ளன.
2014 முதல் 2017-ம் ஆண்டுகளுக்கிடையே இந்தப் பகுதியில் தொல்லியல் சார்ந்த பொருட்கள் இருப்பதற்கான வாய்ப்புகளைக் கருத்தில் கொண்டு இந்திய தொல்லியல் துறை அகழாய்வுப் பணிகளை மேற்கொண்டது. 2018-ம் ஆண்டு முதல் தமிழ்நாட்டைச் சேர்ந்த தொல்லியல் துறை தொடர்ந்து இந்தப் பகுதியில் அகழாய்வுப் பணிகளை மேற்கொண்டு வந்தது.
இந்த அகழாய்வுப் பணிகள் தொடர்பான இறுதி அறிக்கை மாநில அரசிடம் இருந்து இதுவரை வெளியிடப்படவில்லை. இவ்வாறு மத்திய அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத் தெரிவித்தார்.
