சிபிஐ அலுவலகத்தில் பணம் இல்லாததால் மேஜை, பீரோ அவ்வளவு ஏன் ஜன்னல்களை கூட கொள்ளையர்கள் கழற்றி சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திரிபுரா தலைநகர் அகர்தலாவில் பாதுகாப்பு மிகுந்த ஷியாமளி பகுதியில் திரிபுரா மாநில சி.பி.ஐ. முகாம் அலுவலகம்அமைந்துள்ளது. எப்போதாவதுதான் இந்த அலுவலகத்துக்கு சி.பி.ஐ. அதிகாரிகள் வருவார்கள். கடந்த 5 மாதங்களாக இந்த அலுவலகத்துக்கு எந்த அதிகாரிகளும் வரவில்லை. இதனால், அலுவலகம் மூடி கிடந்துள்ளது.
இதனை கண்காணித்த கொள்ளையர்கள் கடந்த 11 ஆம் தேதி அலுவலகத்துக்குள் புகுந்தனர். அலுவலகத்தில் இருந்த மேஜை, பீரோ, அலமாரி, கம்யூட்டர் உள்ளிட்ட பொருட்களை கொள்ளையடித்தனர். ஜன்னல்களை கூட கழற்றி எடுத்து சென்று விட்டனர்.
இது தொடர்பாக சி.பி.ஐ இன்ஸ்பெக்டர் அனுராக் போலீசில் புகார் அளித்தார். தொடர்ந்து, போலீசார் ஷியாமளி பகுதியை சேர்ந்த பிப்லாப் தெப்பர்மா, ராஜு பொம்விக் ஆகிய இருவரை முதல்கட்டமாக கைது செய்தனர். இவர்களிடத்தில் நடத்திய விசாரணைக்கு பிறகு மேலும் நான்கு பேர் பிடிபட்டனர்.
கொள்ளையர்களிடத்தில் இருந்து 8 இரும்பு அலமாரிகள், 7 மர சேர்கள், 4 பிளாஸ்டிக் சேர்கள், 4 ஜன்னல்கள் , 1 கீசர் ஆகியவை மீட்கப்பட்டது.
பிடிபட்டவர்களிடத்தில் தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.