நீயா நானா நிகழ்ச்சி மூலம் பிரபலமான பிரணவ் என்ற இளைஞர் உட்பட 4 பேர் ரயில் தண்டவாளத்தை கடக்க முயன்றபோது ரயிலில் அடிபட்டு பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
விஜய் தொலைக்காட்சியில் கடந்த பிப்ரவரி மாதம் ஒளிப்பரப்பான நீயா நானா நிகழ்ச்சியில் தோசை பற்றிய விவாதம் நடைபெற்றது.
அதில், சிட்லபாக்கம் பகுதியைச் சேர்ந்த பிரணவ் (வயது 22) என்ற இளைஞர் தனது அம்மா, சகோதரியுடன் கலந்துகொண்டார்.
அப்போது, “என் பையன் 20 தோசை சாப்பிடுவான். நானும் சலிக்காமல் ஊத்தி குடுப்பேன். அதை விட எனக்கு என்ன வேலை இருக்கு”னு பிரணவ்வின் அம்மா சொல்ல, அதற்கு அவரும், ”ஆமாம், நான் 20 தோசை வரை டிசைன் டிசைனாக சாப்பிடுவேன்” என்று சொல்வார்.
இதை கேட்ட அவரது சகோதரி அரங்கிலேயே செல்ல கோபத்துடன் பிரணவ்வை கிண்டல் செய்வார். இந்த வீடியோ இணையத்தில் அதிகளவில் பகிரப்பட்டு கவனம் பெற்றது.
இந்த நிலையில் கடந்த 3ஆம் தேதி இரவு 10.30 மணியளவில் தனியார் நிறுவனத்தில் பணிபுரியும் பிரணவ் மற்றும் சதீஷ் (வயது 41) இருவரும் வேலை முடிந்து குரோம்பேட்டை ரயில் நிலையத்திற்கு வந்தனர்.
மின்சார ரயிலில் இருந்து இறங்கிய அவர்கள் பைக் பார்க்கிங்கில் நிறுத்தி வைத்துள்ள தங்கள் பைக்கை எடுப்பதற்காக நடைபாதையில் செல்லாமல் தண்டவாளத்தின் குறுக்காக கடந்து செல்ல முடிவு செய்தனர்.
அப்போது செல்போனில் பேசியபடியே சென்ற இருவர் மீதும் தின்சுகியா எக்ஸ்பிரஸ் ரயில் வேகமாக மோதியுள்ளது. இதில் படுகாயமடைந்த பிரணவ் மற்றும் சதீஷ் சம்பவ இடத்திலேயே பலியாகினர்.
விபத்தை தொடர்ந்து தாம்பரம் ரயில்வே போலீஸார் சடலத்தை மீட்டு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
அதே நாளில், திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி ரயில் நிலையத்தில் தண்டவாளத்தை கடக்க முயன்ற சேலத்தை சேர்ந்த கட்டுமான தொழிலாளர்கள் சந்திரசேகர் (50), சுப்ரமணி (47) ஆகியோர் மீது டாடா நகர் எக்ஸ்பிரஸ் ரயில் மோதியதில் பலியாகினர்.
இதற்கிடையே சமூகவலைதளத்தில் திடீரென டிரெண்டிங்கான பிரணவ், அடுத்த 2 வாரத்தில் ரயில் மோதி பலியான சம்பவம் பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.
இதனையடுத்து சமூகவலைதளங்களில் சிலர், பிரணவ் தோசை சாப்பிடுவது குறித்து பொதுவெளியில் பகிர்ந்ததால் கண் திருஷ்டி ஏற்பட்டு இருக்கும் என்றும் கண் திருஷ்டி பொல்லாதது என்றும் கருத்து பதிவிட்டு பிரணவ் குடும்பத்திற்கு ஆறுதல் தெரிவித்து வருகின்றனர்.
உண்மையில், ரயில் நிலையங்களில் தண்டவாளங்களை கடந்து செல்லக்கூடாது. அதற்கென அமைக்கப்பட்டுள்ள நடைபாலத்தையோ அல்லது சுரங்கப்பாதையோ பயன்படுத்த வேண்டும்.
இதில் கவனக்குறைவு ஏற்படும் பட்சத்தில் அங்கு யார் சென்றாலும் இதுபோன்று விபத்து நேர்வது தொடர் நிகழ்வாகி வருகிறது.
இதுகுறித்து ரயில்வே கோட்ட அதிகாரி ஒருவர் கூறுகையில், ”சென்னை-கூடூர் பிரிவில் மணிக்கு 130 கிமீ வேகத்தில் ரயில்கள் இயக்கத் தொடங்கிய பிறகு, அத்துமீறல்கள் அதிகம் உள்ள பகுதிகளில் வேலி அமைக்கப்பட்டது.
ஆனால் அதையும் மீறி நடை பாலங்கள் மற்றும் சுரங்கப்பாதைகள் இருந்தாலும், பயணிகள் இன்னும் ரயில்வே தண்டவாளங்களைக் ஆபத்தான முறையிலேயே கடக்கிறார்கள் என்று ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிறிஸ்டோபர் ஜெமா
முதலில் ஓபிஎஸ் வழக்கு… பிறகு பொன்முடி வழக்கு…” : நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் உத்தரவு!
அமைச்சர் அனிதா மீது ஆவுடையப்பன் புகார்! சாதிச் சண்டையாகிறதா நெல்லை தேர்தல் களம்?