உலகம், இந்தியா, தமிழ்நாடு: 2025 ஆண்டு இறுதியில் எழும் சிந்தனைகள்!

Published On:

| By Minnambalam Desk

இருபத்தோராம் நூற்றாண்டின் முதல் காற்பகுதி நிறைவடைந்துவிட்டது. இந்த கால் நூற்றாண்டு காலத்தில் ஏராளமான மாற்றங்கள் மானுட வாழ்க்கையில் நடந்துள்ளன. அவற்றில் மிக முக்கியமானது தகவல் தொடர்பில் ஏற்பட்டுள்ள மகத்தான மாறுதல். சமூக ஊடகங்கள் எனப்படும் புதிய இணைய பொது மன்றத்தின் பிரம்மாண்டமான வலைப்பின்னல்கள், செயற்கை நுண்ணறிவின் அதிரடிப் பிரவேசம், அறிவியலில் தொடர்ந்து ஏற்பட்டுவரும் மகத்தான பாய்ச்சல்கள் பிரமிப்பூட்டுகின்றன.

என்ன வேடிக்கை என்றால், இவை அனைத்தும் மானுட வாழ்வை மேம்படுத்துகின்றனவா என்ற குழப்பம் தொடர்வதுதான். முதல் பிரச்சினை வன்முறை பெருக்கம். அதனுடன் தொடர்புடைய மிகப்பெரிய பிரச்சினை சூழலியல் சீரழிவு. ஒட்டுமொத்த மானுட த்தின் எதிர்காலத்தையும் கேள்விக்கு உள்ளாக்கும் ஆற்றலுடன்தான் அணு ஆயுதப் போரின் சாத்தியமும், புவிக்கோளம் மானுட வாழ்வினை ஆதரிக்கும் சுற்றுச் சூழலை இழந்துவிடும் சாத்தியமும் விளங்குகின்றன.

ADVERTISEMENT

மனிதர்கள் தங்கள் வரலாற்றை உருவாக்கிக் கொள்வதைத்தான் அரசியல் என்று கூறுகிறோம். அரசு என்பது வாழ்வின் நிலைத்தன்மை குறித்தது. ஆங்கிலத்தில் அதனால்தான் அதனை ஸ்டேட் என்று கூறுகிறோம். முன்னெப்போதும் இல்லாத அளவு இப்போது அறிவுப் பரவல் சாத்தியமாகியுள்ளது. கையில் செல்பேசி இருந்தால் நீங்கள் அனைத்து அறிவையும் உடனடியாகப் பெறலாம். எந்த சொற்களை உள்ளீடு செய்ய வேண்டும், என்ன கேள்வி கேட்க வேண்டும் என்று தெரிந்தால் போதும். ஆனால் அதனைப் பயன்படுத்தி மனித குலத்தால் தன்னை காத்துக்கொள்ள முடியுமா என்பதே பெரியதொரு கேள்வியாக உள்ளது.

சூழலியல் சார்ந்த அறிவியல் உண்மை என்ன கூறுகிறது என்றால் புவியின் வெப்பம் அதிகரித்துக்கொண்டே செல்கிறது என்பதைத்தான். இது ஒரு கட்டத்திற்கு மேல் அதிகரித்தால் இப்போதுள்ள மானுடம் உட்பட பல உயிரினங்கள் அழிந்துவிடும் என்பதுதான் ஆபத்து.

ADVERTISEMENT

அது ஒரே நாளில் நடக்காது. வெள்ளப் பெருக்கு, சூறாவளி, காட்டுத்தீ என பல இயற்கைப் பேரிடர்கள் அதிகரித்து, பல்வேறு உயிரின ங்கள் அழிவுற்று, புதிய தொற்று நோய்க்கிருமிகள் தோன்றி பலவிதமான வாழ்வியல் சிதைவுகள் ஏற்பட்டபின்னரே ஒட்டுமொத்தமாக மானுட அழிவு என்பது ஏற்படும்.

இவ்வாறு நிகழ்வதை தடுக்க முடியுமா என்று தெரியவில்லை. அப்படி தடுப்பதற்கான அரசியல் விருப்புறுதி மானுட த்திற்கு இருக்கிறதா என்பது அடுத்த கேள்வி. எனவேதான் நாம் உலக அரசியல், இந்திய அரசியல், தமிழ்நாட்டு அரசியல் ஆகிய மூன்று தளங்களில் அரசியலில் என்ன நடக்கிறது என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். ஏனெனில் மக்களாட்சி அரசியல் வழியாக உருவாகும் தன்னுணர்வு மேம்பட்டால்தான் மானுட த்தால் தன்னை ஒட்டுமொத்த அழிவிலிருந்து காத்துக்கொள்ள முடியும் எனலாம்.

ADVERTISEMENT

இன்றைய உலகம் பூதாகார முதலீட்டிய சக்திகளால் இயக்கப்படுகிறது. இந்த முதலீட்டிய சக்திகள் இயற்கையை முற்றிலும் உறிஞ்சியெடுத்து துய்ப்பதையே வளர்ச்சி என்று கருதுகின்றன. உதாரணமாக ஆரவல்லி மலைத்தொடரை மலைத்தொடரே இல்லையென்று சொல்லி, தகர்த்து எடுத்து அதிலுள்ள கனிமங்களை சூறையாடலாம் என்று நினைக்கின்றன. மேலும் முதலீட்டியக் குவிப்பு சமூக ஏற்றத்தாழ்வுகளை வேகமாக அதிகரித்து வருகிறது.

மக்களாட்சி என்பது சிறப்பாகச் செயல்பட்டால் அனைத்து மக்களும் இந்த நிலையின் தீவிரத்தை உணர்ந்து, முதலீட்டிய சக்திகளை கட்டுப்படுத்தி, மானுட வாழ்வின் அடிப்படைகளை வாழ்வாதாரங்களை காப்பாற்ற வேண்டும். அதற்கான அரசியல் தன்னுணர்வு அதிகரிக்க வேண்டும்.

கெடுவாய்ப்பாக உலக அரசியல் தன்னுணர்வு என்பது மிக மோசமான கற்கால வன்முறை நோக்கி செல்வதையே பல்வேறு மட்டங்களிலும் காண முடிகிறது. ஒரு நாயக பிம்பத்தை காண்பதற்காக கூட்ட நெரிசலில் தங்கள் குழந்தைகளை பலிகொடுக்கும் அவலம் தன்னுணர்வின் வறுமையினை பறைசாற்றுகிறது. பல்வேறு தளங்களிலும் அரசியல் எப்படி செயல்படுகிறது என்பதை நாம் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

தமிழ்நாட்டு அரசியலில் தன்னுணர்வை மேம்படுத்தும் இயக்கமாக நூறாண்டுகாலமாக செயல்படும் திராவிட இயக்கத்தை, அதன் வரலாற்று விளைபொருளான, அரசியல் கட்சி வடிவமான திராவிட முன்னேற்றக் கழகத்தின் முக்கியத்துவத்தை நாம் இந்த விரிவான பின்னணியில் சிந்திக்க வேண்டும். திராவிட-தமிழர் தன்னுணர்வு இந்திய அரசியலில் முக்கிய தாக்கத்தை ஏற்படுத்துவதும், அதன் மூலம் உலக அரசியலுக்கும் பங்களிப்பு செய்ய வேண்டும் என்பதுமே தமிழ் சிந்தனையின் விருப்பமாக இருக்க முடியும்.

நம் அக்கறைகள் ஒட்டுமொத்த மானுடம் தழுவியவையாக இருக்க வேண்டும். உலகளாவிய சிந்தனை- உள்ளூர் செயல்பாடு (Think Globally, Act Locally) என்ற ஒரு சூழலியல் சார்ந்த முழக்கம் உண்டு. அது போல உள்ளூர் அரசியல் தன்னுணர்விலிருந்துதான் உலகப் பிரச்சினைகளை புரிந்துகொள்ள முடியும். எனவே உலக அரசியல், இந்திய அரசியல், தமிழ்நாட்டு அரசியல் என்ற மூன்று பகுதிகளில் 2025-ஆம் ஆண்டு நிகழ்வுகளைத் தொகுத்துக்கொள்வோம்.

உலகின் பல முக்கிய நாடுகளிலும் எதேச்சதிகாரத் தலைவர்கள், சக்தி வாய்ந்த முதலீட்டிய குறுங்குழுக்கள் (oligarchy – ஓலிகார்க்கி) ஆகியோரிடமே அரசியல் அதிகாரம் குவிந்திருக்கிறது. உதாரணமாக கடந்த கால் நூற்றாண்டுக் காலமுமே ரஷ்யாவில் கோலோச்சுபவர் விளாடிமீர் புடின். அங்கே தேர்தல் என்றெல்லாம் பெயருக்கு ஏதோ நடந்தாலும், புடின் அவரது வாழ்நாள் முழுவதும் அதிபராகத் தொடர்வார் என்றுதான் தோன்றுகிறது. இதே நிலைதான் சீனாவின் ஷி ஜின்பிங் பொறுத்தவரையும். அவரும் வாழ்நாள் அதிபராகத் தொடர்வார் எனலாம். கிட்டத்தட்ட நவீன மன்னராட்சி. 

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் உள்நாட்டில் மக்களாட்சி விழுமியங்களையும். சர்வதேச உறவுகளில் மனித நேய விழுமியங்களையும் தகர்த்து நொறுக்கிவிட்டார் என்றே சொல்லலாம். வல்லான் வகுத்ததே வாய்க்கால் என்ற தத்துவத்தை அவர் வெளிப்படையாகவே பிரசாரமும் செய்கிறார். அவருக்கு எதிராக “மன்னர் வேண்டாம்” என்ற இயக்கம் பேரணிகள் நட த்தியபோது, அவர் ஒரு கார்ட்டூன் பட த்தை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டார். அதில் ஒரு தனி விமானத்தில் பறக்கும் அவர் கழிக்கும் மலம் பேரணியின் மீது விழுந்து அவர்களை மூழ்கடிப்பது போல சித்தரித்திருந்தார்.

இஸ்ரேல் பிரதமர் நெடன்யாஹு, துருக்கி அதிபர் எர்டோகன் என பல உலக நாடுகளின் தலைவர்கள் மக்கள் எதிர்ப்பினை அடக்குமுறையால் எதிர்கொண்டு எதேச்சதிகார ஆட்சி செய்கின்றனர். ஐரோப்பிய நாடுகளிலும் தொழிலாளர் போராட்டங்கள் ஒடுக்கப்படுகின்றன. வலதுசாரி, இனவெறி அரசியல் சக்திகள் செல்வாக்கு பெருகின்றன.

உலகம் முழுவதும் பொருளாதார ஏற்றத்தாழ்வு அதிகரித்து வருகிறது. பொருளாதார அறிஞர், ஆய்வாளர் தாமஸ் பிக்கெட்டி இருபதாம் நூற்றாண்டின் மத்தியில் குறையத் தொடங்கியிருந்த பொருளாதார ஏற்றத்தாழ்வு இருபதாம் நூற்றாண்டின் இறுதியில் சோவியத் யூனியன் வீழ்ச்சிக்குப் பிறகு கடுமையாக அதிகரிக்கத் துவங்கியுள்ளது என்று கூறுகிறார்.

ஒரு சதவீத மக்களிடம் பெரும் சொத்துக்கள் குவிந்திருப்பது பத்து சதவீத மக்களே மொத்த வருமானத்தின் பெரும்பகுதியை ஈட்டுவது, ஐம்பது சதவீத மக்கள் மிக க் குறைந்த வருமானத்தையே பகிர்ந்துகொள்வது என்று திட்டவட்டமான ஏற்றத்தாழ்வு மிக்க பிரமிட் வடிவ சமூக அமைப்பே உலகெங்கும் நிலவுகிறது. சமத்துவம் குறைவது மட்டுமன்றி, சம வாய்ப்பும் குறைவது நிதர்சனமாகிறது.

இரண்டு நபர்களைக் குறித்து அறிவது இன்றைய உலகின் நிலையை எடுத்துரைக்கும். ஒருவர் எலான் மஸ்க்.. உலக தனவந்தர்களில் முதலிடம் வகிக்கும் இவர், அமெரிக்க அதிபர் தேர்தலில் டொனால்ட் டிரம்பிற்கு பெரும் நிதியளித்தார். டிரம்ப் பதவியேற்றதும் அரசாங்கத் திறன் மேம்பாட்டுத் துறை என்று ஒன்றை உருவாக்கி அதற்கு எலான் மஸ்க்கை தலைவராக்கினார்.

அமெரிக்க அரசின் அனைத்துத் துறைகளையும் எலான் மஸ்க் மேற்பார்வை பார்த்தது மட்டுமன்றி, கட்டமைப்புகளையே முற்றிலும் மாற்றியமைக்கத் துவங்கினார். அமைச்சரவை கூட்ட த்தில் யாரேனும் எலான் மஸ்க்கை எதிர்த்துப் பேசினால் அவர்கள் பதவி நீக்கம் செய்யப்படுவார்கள் என்று கூறினார் டிரம்ப். மக்களால் தேர்ந்தெடுக்கப்படாத ஒரு பெரும் பணக்காரர் அரசைத் தன் நேரடிக் கட்டுப்பாட்டில் கொண்டுவரலாம் என்பதை நிகழ்த்திக் காட்டினார் எலான் மஸ்க்.

எலான் மஸ்க் மனித நேயம், அரசியல் சரித்தன்மை என்பது போன்ற உணர்ச்சிகளுக்கு இடம் கொடுப்பவர் அல்ல. வலியதே வெல்லும், அதுவே தர்மம் என்ற சிந்தனை கொண்டவர். விண்வெளியை ஆக்கிரமித்தல், செயற்கை நுண்ணறிவு, தகவல் தொடர்பு கட்டமைப்பு என தீவிர அறிவியல் தொழில்நுட்ப புரட்சிகள் மூலம் மானுட வாழ்வை முற்றிலும் மாற்றியமைக்கும் விழைவினைக் கொண்டவர். இருபத்தோராம் நூற்றாண்டின் மானுட வல்லாதிக்க கனவுகளின் ஆகச் சிறந்த உருவகமாக விளங்குகிறார்.

இன்னொரு மனிதர் ஜெஃப்ரி எப்ஸ்டைன் (1953-2019). தொழில் ரீதியாக இவர் ஒரு நிதி ஆலோசகர். வேறு வகையில் சொன்னால் பெருந்தனவந்தர்கள் வரி ஏய்ப்பு செய்ய ஆலோசனை வழங்குபவர். வரிவிலக்கு பகுதிகளான சில தீவுகளில் கம்பெனி அமைத்துக்கொண்டு, அந்த கம்பெனி மூலம் சர்வதேச பண பரிவர்த்தனைகள் செய்து வரி ஏய்ப்பு, சர்வதேச கருப்புப் பண பொருளாதாரம் ஆகியவற்றை செயல்படுத்தி வந்த நிபுணர்.

தனி விமானங்கள், தனித்தீவு, கடற்கரை மாளிகை, சிறுமிகளுடன் பாலியல் வல்லுறவு, பல சக்திவாய்ந்த மனிதர்களின் பாலியல் இச்சைகளை பூர்த்தி செய்வது. ரகசிய காமிராக்கள் மூலம் படம் எடுத்து பிளாக் மெய்ல் செய்வது என்று இவர் புனைகதைகளையும் விஞ்சும் நிழல் உலக செயல்பாட்டாளராக இருந்துள்ளார்.

முதல்முறை 2005-ஆம் ஆண்டும், இரண்டாம் முறை 2019-ஆம் ஆண்டு கைது செய்யப்பட்ட இவர் சிறையில் மர்ம மரணம் அடைந்தார். இந்த ஆண்டு அவர் வழக்கு தொடர்பான ஆவணங்கள் பொதுவெளிக்கு வந்ததாலும், அதிபர் டொனால்ட் டிரம்ப், முன்னாள் அதிபர் பில் கிளிண்ட்டன் ஆகியோருக்கு அவருடன் இருந்த தொடர்பாலும் அவர் தொடர்பான சர்ச்சை பொதுவெளியில் வெடித்துள்ளது.

பல சர்வதேச அரசியல் விவகாரங்களிலும் எப்ஸ்டைன் திரை மறைவு பேச்சுவார்த்தைகள், தரகு வேலைகள் பார்த்துள்ளார். எப்ஸ்டைன் புனைகதை கதாபாத்திரங்களையும் மிஞ்சும் நிழல் மனிதராக வாழ்ந்துள்ளார் என்பதும், சகல விதமான மனிதர்களுடனும் அவர் நெருங்கிய தொடர்பு வைத்துள்ளார் என்பதும், அவரது தனி விமான ங்களில் பயணம் செய்தவர்கள், அவருடைய தனித்தீவிற்கு சென்றவர்கள், ஃபுளோரிடா மாளிகைக்கு சென்றவர்கள், நேரில் சந்தித்தவர்கள், மின்னஞ்சல் தொடர்பு கொண்டவர்களின் பிரமிக்கத்தக்க பட்டியலும் இருபத்தோராம் நூற்றாண்டு சர்வதேச அரசியலின் பெரும் நிழல் பரப்பை சுட்டிக் காட்டுகின்றன.

Thoughts arising at the end of 2025

இந்தியக் குடியரசு காந்தி, நேரு, அம்பேத்கர்  போன்ற பெரும் தலைவர்களின் விழுமியங்களால் வடிவமைக்கப்பட்டது. காந்தி மத நல்லிணக்கத்தையும், நேரு மதச்சார்பின்மையையும் குடியரசின் அடிப்படைகளாக மாற்றினர். காந்தி கிராமிய பொருளாதார தன்னிறைவையும், நேரு பொதுத்துறை சார்ந்த பொருளாதார, தொழில் வளர்ச்சியையும் முன்னிறுத்தினார்கள்.அம்பேத்கர் சமத்துவ சமூகத்தை உருவாக்கும் அடிப்படைகளை வகுத்தளித்தார். இவையெல்லாம் இந்தியாவின் எளிய மக்களின் வாழ்க்கையை மேம்படுத்தும் நோக்கம் கொண்டவையாக இருந்தன.  

வேறு பல கருத்து மாறுபாடுகள் இருந்தாலும் இந்திய இடதுசாரிகள், மாநில வெகுஜன கட்சிகள் பலவும் இந்த குடியரசு விழுமியங்களை பகிர்ந்துகொண்டன. மக்களாட்சியில் அனைத்து மக்களூம் பங்கேற்பதன் மூலம் சமூக, பொருளாதார ஏற்றத்தாழ்வுகளை கூடியவரை களைந்து அனைத்து மக்களும் பொருளாதார வளர்ச்சியில் பங்கேற்று சம வாய்ப்புகள் பெற வேண்டும் என்ற நோக்குடன் அரசியல் களங்கள் கட்டமைக்கப் பட்டன.

இருபதாம் நூற்றாண்டின் இறுதியில் உருவான பெருமுதலீட்டிய எழுச்சி இந்திய அரசியலிலும் மாறுதல்களைக் கொண்டுவந்தது. பார்ப்பன-பனியா சக்திகளின் நெடுநாள் தகவமைப்பான பாரதீய ஜனதா கட்சி இந்திய அரசியலில் ஆதிக்கம் பெறத்துவங்கியது. சிறுபான்மையினரான முஸ்லீம்கள், கிறிஸ்துவர்களுக்கு எதிராக பெரும்பான்மை இந்து அடையாளத்தை கட்டமைத்து வெறுப்பரசியல் செய்வதன் மூலம் பாசிசத் தன்மை கொண்ட எதேச்சதிகார அரசை நரேந்திர மோடி தலைமையில் உருவாக்குவதில் பாரதீய ஜனதா கட்சி 2014-ஆம் ஆண்டு வெற்றிபெற்றது.

Thoughts arising at the end of 2025

எலான் மஸ்க் போல கெளதம் அதானி என்ற பெருமுதலீட்டிய அடையாளம் பாஜக ஆதிக்கத்தின் விளைபொருளாக அமைந்துள்ளதைக் காணலாம். கடந்த பத்தாண்டுகளில் அவர் முதலீட்டியக் குவிப்பில் அடைந்துள்ள வெற்றி உலகின் பணக்காரர்கள் பட்டியலில் முதல் இடத்தையே நோக்கி ஒரு தருணத்தில் அவரைக் கொண்டு சென்றது. பாஜக அரசியலதிகாரத்தின் முக்கிய முகமாக அவர் விளங்குகிறார் எனலாம்.

இந்தியக் குடியரசின் கூட்டாட்சித் தன்மை, அதிகாரப் பகிர்வு மற்றும் அதிகாரப் பரவல் ஆகியவை எல்லாம் கேள்விக்கு உள்ளாகி அதிகாரக் குவிப்பும், முதலீட்டியக் குவிப்பும் கைகோர்த்து பயணிக்கும் நிலை உருவாகி வருகிறது. குடியரசின் தன்னாட்சி அமைப்புகள் எல்லாம் அரசுக் கட்டுப்பாட்டில் வந்துவிட்டன. குடியுரிமையும், வாக்களிக்கும் உரிமையுமே அரசின் கட்டுப்பாட்டில் கொண்டுவரப்படும் சூழ்நிலை உருவாகி வருகிறது. ஊடகங்கள் பெருமளவு அரசுக் கட்டுப்பாட்டில் வந்துவிட்டன எனலாம்.

சிறுபான்மையினருக்கு எதிரான தாக்குதல்கள் பகிரங்கமாக நடக்கின்றன. சமூகத்தில் தாழ்த்தப்பட்டோர், எளியோர் மீதான தாக்குதல்களும் பெருகுகின்றன. தேர்தல்கள் நட த்தப்படும்  விதம் குறித்து ஐயங்கள் உச்சகட்டத்தை எட்டியுள்ளன. உலகின் மிகப்பெரிய மக்களாட்சிக் குடியரசான இந்தியாவின் குடியரசு உள்கட்டுமானம் கலகலத்து வருகின்றது. இந்த நிலையை மாநில அரசியலில் வேர்கொண்ட வெகுமக்கள் கட்சிகள்தான் வலுவாக எதிர்த்து நிற்கின்றன. அதுவே தமிழ்நாட்டு அரசியல் களத்தை முக்கியமானதாக்குகிறது.

உலக அரசியல் செய்திகளைப் படிப்பவர்களுக்கு தமிழ்நாட்டு அரசியல் பெரும் ஆறுதலாகத்தான் இருக்கும். கடந்த ஐந்தாண்டுகளாக திராவிட மாடல் ஆட்சி பொருளாதார வளர்ச்சியில் தமிழ்நாட்டை இந்தியாவின் முன்னணி மாநிலமாக நிறுத்தியுள்ளது. ஆனால் அது மட்டுமே யாருக்கும் மகிழ்வளித்திருக்காது. அந்த வளர்ச்சியின் பலன்கள் மக்களுக்கு பரவலாக க் கிடைக்கும்படி மிக முற்போக்கான நல்வாழ்வுத் திட்டங்களை செயல்படுத்தி வருகிறது அரசு.

பள்ளிக் கல்வியில் மிகச் சிறப்பான இடையீடுகளைச் செய்துள்ளது. காலை உணவுத் திட்டம் மதிய உணவுத் திட்ட த்துடன் இணைந்து சாமானிய மக்களின் வாழ்வில் கல்வியை வலுப்படுத்தியுள்ளது. மக்களுக்குத் தேவையான நூலகங்கள், பூங்காக்கள், நீர்நிலைகள், கோயில்கள், மருத்துவ மனைகள் என அனைத்து வசதிகளும் தொடர்ந்து மேம்படுத்தப் படுகின்றன.

எதிர்கட்சிகளும் தமிழ்நாட்டில் வலுவாக இயங்குகின்றன. ஒன்றிய ஆளும் கட்சியான பாரதீய ஜனதா கட்சி ஒரு புறம், தமிழ்நாட்டு எதிர்கட்சியான அ.இ.அ.தி.மு.க உள்ளிட்ட எதிர்கட்சிகள் மற்றொருபுறம் என்று அரசாங்கத்தின் மீதான விமர்சன ங்கள் தொடர்ந்து முன்வைக்கப்படுகின்றன. ஆளும் தி.மு.க-வின் கூட்டணி கட்சிகளும் தேவையானபோது அரசை விமர்சிக்கத் தயங்குவதில்லை.

தமிழ்நாட்டு அரசியலின் ஆரோக்கியமான முரணரசியல் களம் இந்திய ஒன்றிய அரசில் வளர்ந்துவரும் எதேச்சதிகாரத்திற்கு மாற்றுச் சக்தியாக விளங்குகிறது. ஒன்றிய அரசின் அதிகாரக் குவிப்பு, தடையற்ற முதலீட்டியக் குவிப்பிற்கான கருவிதான் என்பதால், மக்கள் நல அரசியலைக் காப்பாற்றுவது என்பதும், சுற்றுச்சூழலைக் காப்பது என்பதும் மாநில முரண்கள அரசியல் உருவாக்கும் அரசியல் தன்னுணர்வால் மட்டுமே சாத்தியம் என்பது விளங்குகிறது.

அந்த கோணத்தில்தான் எதிர்வரும் 2026-ஆம் ஆண்டில் நடைபெறப்போகும் தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் முக்கியத்துவம் பெறுகிறது. ஐந்தாண்டுகால ஆட்சியின் சாதனைகளான பொருளாதார வளர்ச்சி, அனைத்து மக்கள் வாழ்க்கைத்தர மேம்பாடு ஆகியவற்றை முன்னிறுத்தி தேர்தலை சந்திக்கின்றன ஆளும் கட்சியும், அதன் கூட்டணி கட்சிகளும். அது மட்டுமன்றி இந்திய குடியரசு விழுமியங்களைக் காக்கும் மகத்தான திராவிட-தமிழ் தன்னுணர்வுப் போராட்டமாகவும் இந்த தேர்தல் களத்தை அவை கட்டமைத்துள்ளன.  

உலகின் தொன்மையான மொழிகளில் ஒன்று தமிழ்; தொன்மையான பண்பாடுகளில் ஒன்று திராவிடம். திராவிட தமிழ் மக்கள் தொகுதி தங்கள் அரசியல் தன்னுணர்வினை உலகிற்கு உதாரணமாக்க வேண்டும். அதற்கான நல்வாய்ப்பு அடுத்த ஆண்டு நடக்கப்போகும் தேர்தல். அந்த தேர்தலில் மக்கள் தி.மு.க-வின் நல்லாட்சி தொடர வாய்ப்பளிப்பது வரலாற்றிற்குச் செய்யும் பெரும் பங்களிப்பாக இருக்கும் எனலாம். எந்த ஒரு மாற்றமும் ஒரு புள்ளியில்தான் துவங்க வேண்டும். உலக மக்களாட்சியைக் காக்கும் அந்தப் புள்ளியாக தமிழ்நாடு திகழ வேண்டும்.    

Thoughts arising at the end of 2025 - Article in Tamil By Rajan Kurai

ராஜன் குறை கிருஷ்ணன் – பேராசிரியர், அம்பேத்கர் பல்கலைக்கழகம், புதுதில்லி. இவரைத் தொடர்புகொள்ள:rajankurai@gmail.com

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share