கோவையில் அதிர்ச்சி: வேறு பெண்ணுடன் தனிமையில் இருந்த கணவரின் மர்ம உறுப்பை அறுத்து வீசிய மனைவி கைது!

Published On:

| By Pandeeswari Gurusamy

கோவையில் கணவர் வேறு பெண்ணுடன் உல்லாசமாக இருப்பதை நேரில் பார்த்த ஆத்திரத்தில், அவரது மர்ம உறுப்பை கத்தியால் அறுத்து வீசிய மனைவியை போலீசார் கைது செய்துள்ளனர்.

அசாம் மாநிலம் நாகான் மாவட்டத்தைச் சேர்ந்தவர் பிதான் ஹசாரிகா இவரது மனைவி ஜிந்தி. இந்த தம்பதியினர் கோவை கணபதி சின்னசாமி நகர் 3வது வீதியில் குடும்பத்துடன் வசித்து வருகின்றனர். பிதான் ஹசாரிகா, அத்திப்பாளையம் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் பிளம்பராக வேலை செய்து வருகிறார். பிதானுக்கு வேறு ஒரு வடமாநில இளம்பெண்ணுடன் நெருக்கமான தொடர்பு இருந்து வந்ததாக கூறப்படுகிறது. அடிக்கடி பெண்களுடன் வீடியோ காலில் பேசி வந்துள்ளார்.

ADVERTISEMENT

இதை செல்போனில் பார்த்த ஜிந்தி கண்டித்தும், அவர் தொடர்பை துண்டிக்கவில்லை. சம்பவ தினத்தில் ஜிந்தி வெளியே சென்றிருந்த போது, பிதான் வீட்டுக்கு ஒரு இளம்பெண்ணை அழைத்து வந்து தனிமையில் இருந்துள்ளார். திடீரென வீடு திரும்பிய ஜிந்தி இதை நேரில் பார்த்து அதிர்ச்சியடைந்தார். உடனே அந்தப் பெண் தப்பி ஓடிவிட்டார்.

இதனால் ஆத்திரமடைந்த ஜிந்தி, கணவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். பிதான், ஜிந்தியை அசாமுக்கு அனுப்பி வைப்பேன் என மிரட்டியதாக தெரிகிறது. அக்கம்பக்கத்தினர் வந்து சமாதானப்படுத்தினர். ஆனால் ஜிந்தியின் கோபம் அடங்கவில்லை. அன்றிரவு வேலை முடிந்து மது போதையில் வீடு திரும்பிய பிதான் தூங்கிய போது, சமையலறையில் இருந்து கத்தியை எடுத்து வந்த ஜிந்தி, அவரது ஆணுறுப்பை அறுத்து வீசினார்.

ADVERTISEMENT

வலியால் கதறிய பிதானை அறையில் பூட்டிவிட்டு ஜிந்தி சென்றுவிட்டார். பிதானின் கூச்சலைக் கேட்ட அக்கம்பக்கத்தினர் விரைந்து வந்து கதவை உடைத்து பிதானை மீட்டு, கோவை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் பிதான் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இச்சம்பவம் குறித்து சரவணம்பட்டி போலீசார் வழக்குப் பதிவு செய்து ஜிந்தியை கைது செய்துள்ளனர். பல பெண்களுடன் தொடர்பு வைத்திருந்த கணவருக்கு மனைவி அளித்த இந்த ‘நூதன தண்டனை’ கோவை மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

ADVERTISEMENT
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share