மக்களவை சபாநாயகராக ஓம் பிர்லா தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு பிரதமர் மோடியும், ராகுல் காந்தியும் இன்று (ஜூன் 26) வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
நாடாளுமன்றத் தேர்தலுக்கு பின்னர் ஜூன் 24ஆம் தேதி மக்களவை முதல் கூட்டத்தொடர் தொடங்கியது. ஜூன் 24, 25 ஆகிய தேதிகளில் நாடாளுமன்ற உறுப்பினர்களாக தேர்வு செய்யப்பட்டவர்கள் பதவியேற்றுக் கொண்டனர்.
இதனிடையே, மக்களவை சபாநாயகராக யாரைத் தேர்ந்தெடுப்பது என்பது குறித்த ஆலோசனையும் மேற்கொள்ளப்பட்டது. இந்நிலையில், இன்று மக்களவை சபாநாயகருக்கான தேர்தல் நடைபெற்றது.
இந்த தேர்தலில் பாஜக சார்பில் ஓம் பிர்லாவும்,காங்கிரஸ் சார்பில் கொடிக்குன்னில் சுரேஷும் போட்டியிட்டனர். அதில் மக்களவை சபாநாயகராக 2வது முறையும் பாஜகவை சேர்ந்த ஓம் பிர்லா இன்று (ஜூன் 26) தேர்ந்தெடுக்கப்பட்டார்.
பிரதமர் மோடி பேச்சு
இதையடுத்து மக்களவையில் பேசிய பிரதமர் மோடி, “சபாநாயகராக ஓம் பிர்லா 2வது முறையாக இந்த நாற்காலியில் அமர்ந்திருப்பது பேரவையின் அதிர்ஷ்டம். உங்களுக்கும் ஒட்டுமொத்த சபைக்கும் எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இரண்டாவது முறையாக ஓம் பிர்லா இந்த பதவியில் அமர்ந்திருப்பது மிகப்பெரிய பொறுப்பு. உங்கள் அனுபவத்தால், நீங்கள் எங்களுக்கு வழிகாட்டுவீர்கள் என்று நம்புகிறோம். உங்களது புன்னகையால் மொத்த மக்களவையும் மகிழ்ச்சியாக இருக்கும்.
சுதந்திரம் அடைந்த 70 ஆண்டுகளில் நடக்காத பணிகள், உங்கள் தலைமையில் இந்த அவையால் சாத்தியமாகி உள்ளது. ஜனநாயகத்தின் நீண்ட பயணத்தில் பல மைல்கற்கள் உள்ளன. சில சமயங்களில் மைல்கற்களை நிறுவுவதற்கான வாய்ப்பை நாம் பெறுகிறோம். 17வது மக்களவையில் மேற்கொள்ளப்பட்ட சாதனைகளால் நாடு பெருமிதம் கொள்ளும் என்று நான் உறுதியாக நம்புகிறேன்” என மோடி கூறினார்.
ராகுல் காந்தி பேச்சு
பின்னர் பேசிய மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி, “2வது முறையாக சபாநாயகராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஓம் பிர்லாவுக்கு வாழ்த்துகள். ஒட்டுமொத்த எதிர்க்கட்சிகளின் சார்பாகவும், இந்தியா கூட்டணியின் சார்பாகவும் ஓம் பிர்லாவுக்கு வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். சபாநாயகர் என்பவரது குரல் இந்த அவையின் குரலை பிரதிபலிக்கிறது.
மக்களவை மக்களின் குரலைப் பிரதிநிதித்துவப்படுத்துகிறது, அந்தக் குரலின் இறுதி நடுவர் நீங்கள். நிச்சயமாக, அரசாங்கத்திற்கு அதிகாரம் உள்ளது, ஆனால் எதிர்க்கட்சியும் இந்தியாவின் குரலைப் பிரதிநிதித்துவப்படுத்துகிறது.
எதிர்க்கட்சியின் குரலை இந்த அவையில் பிரதிநிதித்துவப்படுத்துவது மிகவும் முக்கியம்.
சபை எவ்வளவு திறமையாக இயங்குகிறது என்பதல்ல கேள்வி, இந்த அவையில் இந்தியாவின் குரல் எந்தளவுக்கு ஒலிக்க அனுமதிக்கப்படுகிறது என்பதே கேள்வி. இந்திய அரசியலமைப்பை பாதுகாக்கும் உங்களது கடமையை நீங்கள் செய்வீர்கள் என்று நாங்கள் நம்புகிறோம்” என்று ராகுல் காந்தி தெரிவித்தார்.
இந்து
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…