தடுப்பூசி கண்டுபிடிப்புக்கு பின்னிருக்கும் உலகம்!
தி தாஷ்கண்ட் பைல்ஸ், தி காஷ்மீர் பைல்ஸ் படங்களின் வழியாக ஒருசேர ரசிகர்களின் ஆதரவையும் எதிர்மறையான விமர்சனங்களையும் பெற்றவர் இயக்குனர் விவேக் ரஞ்சன் அக்னிஹோத்ரி. 2020ஆம் ஆண்டு கோவிட் – 19 காலகட்டத்தின்போது இந்திய மருத்துவ ஆய்வு கவுன்சில் எவ்வாறு செயல்பட்டது, எப்போது கொரோனா தடுப்பூசியைத் தயாரிக்கும் செயல்பாட்டில் இறங்கியது என்பதைப் பேசுகிறது, அவர் இயக்கியுள்ள ‘தி வாக்சின் வார்’ திரைப்படம்.
இந்திய மருத்துவ ஆய்வு கவுன்சிலின் இயக்குனராக இருந்த டாக்டர் பலராம் பார்கவா எழுதிய ‘கோயிங் வைரல்’ எனும் நூலை அடிப்படையாகக் கொண்டு இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது.
இந்த படம் பார்வையாளர்கள் மத்தியில் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்துகிறது?
தகவல்களின் தொகுப்பு!
2020 புத்தாண்டு தினத்தன்று தனது அலுவலகத்திற்குச் செல்கிறார் டாக்டர் பலராம் பார்கவா (நானா படேகர்). விடுமுறையில் இருக்கும் டாக்டர் நிவேதிதாவையும் (கிரிஜா ஓக்) வரச் சொல்கிறார். அவரிடம், சீனாவின் வுகான் நகரில் சில நோயாளிகள் நிமோனியா போன்ற ஒரு நோயால் கடுமையாகப் பாதிக்கப்பட்டிருக்கும் வீடியோவை காட்டுகிறார்.
ஒரு வாரம் கழித்து, அந்நோய் தாக்கம் குறித்து ஆலோசிக்கும் அரசின் ஆலோசனைக் கூட்டத்தில் பலராம் பார்கவா உட்படப் பல நிபுணர்கள் கலந்துகொள்கின்றனர். அதற்குக் காரணமான கிருமிக்குச் சர்வதேச மருத்துவ சமூகம் ‘சார்ஸ் கோவிட்-2’ என்று பெயரிடுகிறது.
2020 மார்ச் மாதம் இந்தியாவில் முதலாவது கோவிட் நோயாளி அடையாளம் காணப்படுகிறார். அதன்பின்னர், வெளிநாடுகளைப் போல இந்திய மருத்துவ நிபுணர்களும் அந்நோய்க் கிருமியைத் தனியாகப் பிரித்தெடுக்கின்றனர். டாக்டர் பிரியா ஆபிரகாம் (பல்லவி ஜோஷி) தலைமையிலான புனே இந்திய வைரஸ் ஆய்வு நிறுவனத்தைச் சேர்ந்தவர்கள் அம்முயற்சியில் ஈடுபடுகின்றனர். அதன் தொடர்ச்சியாக, கோவிட் – 19 தடுப்பூசி கண்டறியும் பணியிலும் இறங்குகின்றனர்.

ஓய்வின்றி உழைப்பது, குடும்பத்தினரைப் பிரிந்திருப்பது, கோவிட் -19 நோய்த்தாக்குதலுக்கு ஆளாவது என்று அவர்கள் பல இன்னல்களை எதிர்கொள்கின்றனர். அவர்களில் பெரும்பாலானவர்கள் பெண்கள்.
தடுப்பூசி தயாரிப்பில் இந்தியா இறங்குவதற்கு, சில வெளிநாட்டு நிறுவனங்கள் எதிர்ப்பு தெரிவிக்கின்றன. இந்தியாவின் தடுப்பூசி சரியானதாக இருக்காது என்ற எண்ணத்தை உருவாக்க, இந்தியன் வயர் என்ற பத்திரிகையைச் சேர்ந்த ரோகிணி சிங் தூலியாவைப் (ரெய்மா சென்) பயன்படுத்துகின்றன. அவர் எழுதும் கட்டுரைகள், இந்திய மருத்துவ நிபுணர்களின் ஆராய்ச்சிகளைப் பாதிப்பதாக இருக்கின்றன.
அவற்றை மீறி, புனேவிலுள்ள இந்திய வைரஸ் ஆய்வு நிறுவனமும் இந்திய மருத்துவ ஆய்வு கவுன்சிலும் எவ்வாறு கோவேக்சின் தடுப்பு மருந்தைக் கண்டறிந்தன? அவற்றை மக்களுக்குச் செலுத்தி, அவர்களது நன்மதிப்பைப் பெற்றன என்று சொல்கிறது ‘தி வாக்சின் வார்’.
கோவிட் -19 காலகட்டத்தில் இந்திய மருத்துவச் சமூகத்தின் ஒரு பகுதி நோய்க்கிருமியைக் கண்டறிவதிலும், அதற்கெதிரான தடுப்பு மருந்தைக் கண்டறிவதிலும் எத்தகைய சிரமங்களை எதிர்கொண்டது என்பதை மட்டுமே இப்படம் பேசுகிறது. அது மட்டுமல்லாமல், தேதிவாரியாகச் சில நிகழ்வுகள் சொல்லப்பட்டிருப்பது இப்படம் கோவிட் – 19 குறித்த தகவல்களின் தொகுப்பாக உள்ளதை உணர்த்துகிறது.
பிரச்சாரப் படமா?
டாக்டர் பலராம் பார்கவாவின் பார்வையில் கதை அமைந்திருந்தாலும், படம் முழுக்கவே இதர பாத்திரங்களின் உணர்வுகளுக்கு முக்கியத்துவம் தரப்பட்டுள்ளது. கோவிட் – 19 தடுப்பு மருந்து கண்டுபிடிக்கப்படும் செயல்முறையில் ஈடுபட்ட ஒவ்வொரு நிபுணரும் எப்படிப்பட்ட தருணங்களை எதிர்கொண்டிருப்பார்கள் என்பதற்கு விடையளிக்கப்பட்டுள்ளது. பொதுச்சமூகம் அந்நோய்த்தொற்றால் எப்படி தாக்குதலுக்கு உள்ளானது என்பது இப்படத்தில் மிக லேசாகக் காட்டப்பட்டுள்ளது. அதைத் தாண்டி, சர்வதேச அளவில் இந்தியாவின் தடுப்பூசி கண்டுபிடிப்பு இதர நாடுகளால், மருத்துவ நிறுவனங்களால் எவ்வாறு எதிர்கொள்ளப்பட்டது என்பதையும் சிறிய அளவில் சொல்லிச் செல்கிறது. ஆனால், அதுவே இக்கதையின் ஆதார மையம் என்பதைப் பார்வையாளர்கள் உணராதவாறு கதை சொன்ன விதத்தில் அசத்துகிறார் இயக்குனர் விவேக் ரஞ்சன் அக்னிஹோத்ரி.
கலைப்படம், கமர்ஷியல் படம் என்ற வித்தியாசம் இல்லாமல் ரசிகர்களை ஈர்ப்பவர் நானா படேகர். அவரே இந்த படத்தின் முதல் ஈர்ப்பு விசை.
டாக்டர் பிரியா ஆபிரகாம் ஆக பல்லவி ஜோஷி நடித்துள்ளார். உணர்வுகளை கொட்டும் வாய்ப்பை சரியாக பயன்படுத்தி இருக்கிறார். ரெய்மா சென் ஏற்ற பத்திரிகையாளர் பாத்திரம் கிளிஷேவானது; ரசிகர்கள் மனதில் கோபத்தை உருவாக்கக் கூடியது.
இன்னும் காந்தாராவில் வந்த சப்தமி கௌடா, நிவேதிதா பட்டாச்சார்யா, மோகன் கபூர், விவேக் பிரபாகர், ஆஞ்சல் துவிவேதி ஆகியோரோடு மத்திய அமைச்சராக அனுபம் கெர் நடித்துள்ளார். கிரிஜா ஓக் இருப்பு நம்மை ஆசுவாசப்படுத்துகிறது
ஒளிப்பதிவாளர் உதய்சிங் மொஹிதே, படத்தொகுப்பாளர் சங்க் ராஜதியாக்ஷா,
தயாரிப்பு வடிவமைப்பாளர்
உதய் பிரகாஷ் சிங் மற்றும் பின்னணி இசை தந்த ரோகித் சர்மாவின் கூட்டுழைப்பு அற்புதமான காட்சியாக்கத்திற்கு துணை நிற்கின்றன.
ஸ்வப்னில் பண்டோத்கர், விக்ரம் ராமின் இசையில் பாடல்கள் ஓகே ரகத்தில் உள்ளன.
கொரோனா கிருமி இடம்பெறுவதைக் காட்ட, மனிதக் கூட்டம் மூச்சு விடச் சிரமப்படுவது போன்ற ஓசையைப் பயன்படுத்தியிருப்பது அருமை.
சாக்லேட் முதல் ஸித் வரை

ஆறேழு இந்திப் படங்களை இயக்கினாலும் தாஷ்கண்ட் பைல்ஸ், காஷ்மீர் பைல்ஸ் மட்டுமே விவேக் அக்னிஹோத்ரியின் அடையாளம் ஆக உள்ளன. பாஜக அரசின் ஆதரவு நிலைப்பாடு அவற்றில் மறைமுகமாக தென்படும். அது ‘தி வாக்சின் வார்’ படத்திலும் தொடர்கிறது.
அரசில் அங்கம் வகிப்பவர்களின் பெயர்களைக் குறிப்பிடாமல், நேரடியாக கோவிட்19 கால அரசின் செயல்பாடுகளைக் காட்டாமல், தடுப்பு மருந்து கண்டுபிடிப்பில் ஈடுபட்ட மருத்துவ நிபுணர்கள் வாழ்க்கையை மட்டுமே இதில் காட்டியிருக்கிறார். அரசை எதிர்ப்பவர்கள் இந்தியாவை எதிர்க்கின்றனர் என்ற வாதத்தை அடிக்கோடிட்டுக் காட்டியிருக்கிறார். அதன் வழியே, படம் பார்க்கும் சில ரசிகர்களை ‘பாரத் மாதா கி ஜே’ சொல்ல வைத்திருக்கிறார். அதேநேரம் இது பிரச்சார படமல்ல என்று சொல்லும் அளவுக்கு நேர்த்தியான காட்சிகளைத் தந்துள்ளார். விவேக் அக்னிஹோத்ரி திரையில் பயன்படுத்திய உத்திகளே அவரது படைப்பாக்கத்தின் பலம்.
பார்க்கலாமா?
இந்திய மருத்துவ ஆய்வு கவுன்சில் மற்றும் இந்திய வைரஸ் ஆய்வு நிறுவனம் உள்ளிட்ட மருத்துவ அமைப்புகளின் செயல்பாடுகளால் கோவிட்-19 தடுப்பு மருந்து கண்டுபிடிக்கப்பட்டதை விளக்குகிறது இதன் திரைக்கதை. வெளிநாட்டு தடுப்பூசி இறக்குமதிக்கு அனுமதி தரும் நோக்கில் சிலர் ‘லாபியிங்’ செய்ததாகக் காட்டப்பட்டுள்ளது. அவற்றை எல்லாம் விட, கொரோனா காலகட்டத்தில் மட்டுமே இந்திய விஞ்ஞானிகளுக்கு நல்ல மதிப்பும் மரியாதையும் கிடைத்ததாக ஒரு வசனம் வருகிறது. அதேபோல தடுப்பூசிகளுக்கு எதிரான கருத்துகளைக் கொண்டவர்களை மக்களுக்கு எதிரானவர்களாகச் சித்தரிக்கிறது இப்படம். இது போன்ற சில விஷயங்கள் எதிர்மறையான விமர்சனங்களைக் கிளப்பலாம்.
கோவிட்19 காலகட்டத்தில் இந்திய மருத்துவ சமுகத்தின் செயல்பாடு பாராட்டுக்குரியது என்பவர்களுக்கு இப்படம் நிச்சயம் பிடிக்கும்.
மிக முக்கியமாக, பின்னணி இசையை எங்கு பயன்படுத்த வேண்டும் என்பதை அறிய முயற்சிப்பவர்கள், கண்டிப்பாக ‘தி வாக்சின் வார்’ பார்த்து இயக்குனர் விவேக் அக்னிஹோத்ரியிடம் பாடம் கற்கலாம்.
உதய் பாடகலிங்கம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
ஆசிய போட்டிகள் 2023: பதக்கம் வென்ற இந்திய வீராங்கனை மீது பரபரப்பு புகார்!
