விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் கெமிக்கல் ஆலையில் திருட சென்றவர் மேற்கூரையிலிருந்து தவறி விழுந்து உயிரிழந்தது அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
அருப்புக்கோட்டை எம்.டி.ஆர் நகர் கிழக்கு சாலையில் வீரப்பன் என்பவருக்குச் சொந்தமான கெமிக்கல் ஆலை ஒன்று இயங்கி வருகிறது. இங்கு தொழிற்சாலைகளுக்குத் தேவையான பல்வேறு கெமிக்கல்கள் தயாரிக்கப்பட்டுகின்றன.
இந்த ஆலையில் பணி முடிந்து தொழிலாளர்கள் சென்றபோது ஆலையை பூட்டிச் சென்றனர். அவர்கள் வழக்கம் போல் நேற்று ஆலையை திறக்கச் சென்றபோது ஆலையின் மேற்கூரைகள் உடைந்திருந்தன.
அதிர்ச்சியடைந்த காவலாளி உள்ளிட்டோர் ஆலையை திறந்து உள்ளே சென்று பார்த்தபோது அங்கு அடையாளம் தெரியாத நபர் ஒருவர் தலை மற்றும் உடலில் பலத்த காயங்களுடன் விழுந்து கிடந்தார். இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த ஊழியர்கள் உடனடியாக 108 ஆம்புலன்ஸுக்கும், அருப்புக்கோட்டை நகர போலீஸாருக்கும் தகவல் தெரிவித்தனர். சற்று நேரத்தில் அங்கு வந்த ஆம்புலன்ஸில் அடிபட்டுக் கிடந்த நபரை ஏற்றினர். ஆனால், அவர் உயிரிழந்துவிட்டது தெரியவந்தது.
போலீஸார் சம்பவ இடத்தில் விசாரணை நடத்தியபோது அவர் பர்ஸில் இருந்து அவரது ஆதார் அட்டை கிடைத்தது. அதன் மூலம், இறந்தவர் தென்காசி மாவட்டம் திருவேங்கடத்தைச் சேர்ந்த முத்துமாரியப்பன் (47) என்பது தெரியவந்தது. இவர் மீது பல்வேறு திருட்டு வழக்குகள் உள்ளதும், நள்ளிரவில் ஆலையில் திருடுவதற்காக மேற்கூரையில் ஏறி நடந்தபோது, திடீரென மேற்கூரை உடைந்ததால் தலைகீழாக அவர் கீழே விழுந்து அடிபட்டதும் தெரியவந்தது.
அதையடுத்து, உயிரிழந்த முத்துமாரியப்பன் உடலை பிரேத பரிசோதனைக்காக அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு போலீஸார் அனுப்பிவைத்தனர். மேலும், இச்சம்பவம் குறித்து அருப்புக் கோட்டை நகர் போலீஸார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ராஜ்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிச்சன் கீர்த்தனா : டேட்ஸ் எள்ளு உருண்டை
பியூட்டி டிப்ஸ்: டீன் ஏஜ் பருவத்தினரே… உங்களை அழகாக்கும் விஷயங்கள் எது தெரியுமா?
ஹெல்த் டிப்ஸ்: மது அருந்தாதவர்களுக்கும் ‘ஃபேட்டி லிவர்’… என்ன காரணம்?
விஜய்சேதுபதியின் ‘டிரைன்’ : படப்பிடிப்பு நிறைவு!
சுட்டுக்கொல்லப்பட்ட நக்சல்கள்… அமித்ஷா வெளியிட்ட அதிர்ச்சி தகவல்!