மூத்த வழக்கறிஞர் பி.வில்சனிடம் கண்ணியக்குறைவாக நடந்து கொண்டதாக நீதிபதி ஆர்.சுப்பிரமணியனுக்கு சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் சங்கம் கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளது.
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் ஆட்சேர்ப்பு தொடர்பாக 2018, 2024 ஆண்டுகளில் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுக்களை சென்னை உயர் நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதிகள் ஆர்.சுப்பிரமணியன், விக்டோரியா கௌரி ஆகியோர் விசாரித்தனர்.
இந்த வழக்கில் டிஎன்பிஎஸ்சி சார்பில் மூத்த வழக்கறிஞர் பி.வில்சன் ஆஜரானார்.
அப்போது வில்சன், “நீதிபதி விக்டோரியா கௌரி இதுதொடர்பான வழக்கில் ரிட் மனுவை ஏற்றுக்கொண்டு உத்தரவு பிறப்பித்திருக்கிறார். மீண்டும் அவர் இந்த வழக்கு விசாரணையில் உள்ளார்” என்று கூறினார்.
அப்போது நீதிபதி ஆர்,சுப்பிரமணியன், வழக்கறிஞர் வில்சனிடம் காட்டமாக பேசியிருக்கிறார்.
இதுதொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. அதில் நீதிபதி ஆர்.சுப்பிரமணியன், “ மூத்த வழக்கறிஞர் வில்சன் ஒரு பொறுப்பற்ற பதிலை கூறியிருக்கிறார். இப்படித்தான் நீங்கள் எங்களை நடத்துவதா?… எங்களில் ஒருவரை வழக்கில் இருந்து திரும்ப பெற சொல்கிறார். காரணம், நீதிபதி ரிட் மனுவை ஏற்றுக்கொண்டு உத்தரவு பிறப்பித்திருக்கிறார் என்கிறார். இது அபத்தமானது.
எங்களைப் பொறுத்தவரை, இந்த நீதிமன்றத்தை இழிவுபடுத்துவதாகவும், மிகவும் அவமரியாதைக்குரியதாகவும் உள்ளது. எனவே, இந்த வழக்குகளை விசாரிக்கப்போவதில்லை. தலைமை நீதிபதி முன் இந்த வழக்கை விசாரிக்கவும், மூத்த வழக்கறிஞர் மீது உரிய நடவடிக்கை எடுக்கவும் பரிந்துரைக்கிறோம்.
என்னுடைய உத்தரவை நான் மாற்றப்போவதில்லை. ஐ ஆம் வெரி சாரி சார்…” என்று சொல்ல… இடையே வழக்கறிஞர் பி.வில்சன், “நான் அப்படி சொல்ல வரவில்லை” என்று கூறினார்.
இதற்கு நீதிபதி, “இந்த வித்தையெல்லாம் நாடாளுமன்றத்தில் வைத்துக்கொள்ளுங்கள். நீதிமன்றத்தின் முன் இப்படி நடந்துகொள்ளாதீர்கள்… இதை நாங்கள் விசாரிக்கப்போவதில்லை” என்று கோபமாக தெரிவித்தார்.
அப்போது பி.வில்சன், “நான் அப்படி சொல்லவில்லை. என்னை மன்னித்துவிடுங்கள். நான் என்ன சொல்ல வருகிறேன் என்றால்” என்று பேசிக்கொண்டிருக்கும் போது, “ ஃபெண்டாஸ்ட்டிக்” என்று கூறிய நீதிபதி ஆர்.சுப்பிரமணியன், “இந்த வழக்கை நாங்கள் தொடக்கூட போவதில்லை. நீங்கள் ஏன் மன்னிப்பு கேட்கிறீர்கள். நீங்கள் எங்களை விட பெரியவர்” என குறிப்பிட்டார்.
அப்போது பி.வில்சன், “நீங்கள் இப்படி எல்லாம் சொல்லலாமா? நான் அப்படியெல்லாம் சொல்ல வரவில்லை” என்று கூறிக்கொண்டே இருக்கும் போது, “இதைவிட கேவலம் எங்களுக்கு வேண்டாம் சார். சாரி அடுத்த வழக்கிற்கு போகலாம்” என்று கூறினார் நீதிபதி.
உடனே பி.வில்சன், “உங்கள் மனது புண்படும்படி பேசியிருந்தால் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்” என்று மன்னிப்பு கேட்டார்.
இதையடுத்து நீதிபதி ஆர்.சுப்பிரமணியன், “நீங்கள் டிஎன்பிஎஸ்சி சார்பில் ஆஜராகியிருக்கிறீர்கள். உங்களுக்கு இரண்டு கொம்புகள் இல்லை. நீங்கள் ஆர்டினரி லாயர். ஒழுங்காக நடந்து கொள்ளுங்கள். இப்படி சொல்வதற்கு நான் வருந்துகிறேன்.
சீப் ட்ரிக்ஸை எல்லாம் நீதிமன்றத்தில் பயன்படுத்துகிறீர்கள். இப்படி நான்சென்சாக நடந்துகொள்வதை என்னோடு நிறுத்திக்கொள்ளுங்கள். இதுபோன்று மீண்டும் என்னிடம் நடந்துகொள்ளாதீர்கள். பீ கேர்ஃபுல். நீதிமன்றத்தை இழிவுப்படுத்தாதீர்கள். நீதிபதி ரிட் மனுவை ஏற்றுக்கொண்டால், அவர் இந்த வழக்கை விசாரிக்க கூடாதா உங்களுடைய நோக்கம் என்ன?” என்று கேள்வி எழுப்பினார்.
இதற்கு வில்சன், “லார்டு.. உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஆர்டரை பாருங்கள்” என்று கூற நீதிபதி ஆர்.சுப்பிரமணியன், “இடைக்கால உத்தரவுதான் பிறப்பிக்கப்பட்டுள்ளது. இறுதி உத்தரவு வேறு நீதிபதியால் பிறப்பிக்கப்பட்டிருக்கிறது” என்று கூறுகிறார்.
இது இணையதளங்களில் வைரலான வீடியோவில் பதிவாகியிருக்கிறது. நீதிமன்றத்தில் நடந்த விஷயம் எப்படி இணையத்தில் வைரலானது என்ற கேள்வி எழுந்துள்ளது.
இந்தநிலையில், நீதிமன்ற நடவடிக்கைகள் சட்டவிரோதமாக பதிவு செய்யப்பட்டு, பரப்பப்படுகின்றன என்று உயர்நீதிமன்ற மதுரைக் கிளை கூடுதல் பதிவாளர் ஜெனரலிடம் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது.
வழக்கறிஞர் வி.பன்னீர் செல்வம் அளித்த மனுவில், “நீதிபதிகள் ஆர். சுப்ரமணியன் மற்றும் எல். விக்டோரியா கௌரி ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்த வழக்கு விசாரணை ஒரு பகுதி வெட்டப்பட்டு, அது எடிட் செய்யப்பட்டு பரப்பப்பட்டு வருகிறது. இவ்வாறு செய்தவர்களை தண்டிக்க வேண்டும்.
சென்னை உயர் நீதிமன்ற விதிப்படி, நீதிமன்ற நடவடிக்கைகளை வீடியோ எடுக்க தடை செய்யப்பட்டுள்ளது. விதிகளின் உட்பிரிவு 3.9.4-ன்படி, அங்கீகரிக்கப்பட்ட நீதிமன்ற அதிகாரியைத் தவிர வேறு யாரும் நீதித்துறை நடவடிக்கைகளை பதிவு செய்யக்கூடாது.
எனவே நீதிமன்றத்தின் லாகின் பதிவுகளை ஆய்வு செய்து, யார் இந்த வீடியோவை பதிவு செய்தது என கண்டறிய வேண்டும். மதுரை சைபர் க்ரைமில் புகார் அளித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று கேட்டுக்கொண்டுள்ளார்.
இந்த நிலையில், நீதிபதி ஆர்.சுப்பிரமணியன் மூத்த வழக்கறிஞர் வில்சனிடம் கண்ணியக்குறைவாக நடந்துகொண்டதாக தமிழ்நாடு புதுச்சேரி வழக்கறிஞர்கள் கூட்டமைப்பு, சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கம் உள்ளிட்ட சங்கங்கள், உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி மற்றும் சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியிடம் புகார் அளித்துள்ளனர்.
அந்த மனுவில், மூத்த நீதிபதி ஆர்.சுப்பிரமணியன், மூத்த வழக்கறிஞர் மற்றும் வழக்கில் ஆஜரான வழக்கறிஞரை நோக்கி கண்ணியக்குறைவான வார்த்தைகளைப் பயன்படுத்தியுள்ளார்.
சம்பந்தப்பட்ட அந்த மூத்த நீதிபதி மற்ற வழக்கறிஞர்கள் மீதும், வழக்கு தொடுத்தவர்களுக்கு எதிராகவும் அடிக்கடி இதுபோல வார்த்தைகளை பயன்படுத்துகிறார்.
நீதிமன்ற விசாரணைக் காட்சிகளை பதிவு செய்து வெளியிட தடை செய்யப்பட்ட நிலையில் , இந்த வீடியோ காட்சிகள் எப்படி வெளியானது என்பது குறித்து விசாரிக்கும்படி தகவல் தொழில்நுட்ப பதிவாளருக்கு உத்தரவிடவேண்டும்.
சென்னை உயர்நீதிமன்றத்தில் நடைபெற்ற இந்த சம்பவத்தை சாதாரண மனிதர்கள் பார்த்தால் நீதிமன்றத்தின் மீது அவர்களுக்கு என்ன மாதிரியான எண்ணம் தோன்றும். நீதிமன்றத்தின் மீதான நம்பிக்கையை இழந்துவிடுவார்கள்.
மூத்த நீதிபதியின் இந்த நடத்தை சார்ட்டர்டு நீதிமன்றமான சென்னை உயர் நீதிமன்ற மாண்பை குறைக்கும் வகையில் உள்ளது.
நீதிமன்றத்தில் ஆஜராகும்போது, வழக்கறிஞர்கள் தங்கள் சுயமரியாதையையும் கண்ணியத்தையும் ஏன் தியாகம் செய்ய வேண்டும்.
நீதிபரிபாலனத்தில் நீதிபதிகளும் வழக்கறிஞர்களும், “ஒரு தேரின் இரு சக்கரங்கள்” என்று பல புகழ்பெற்ற சட்ட வல்லுநர்கள் பலமுறை கூறியிருக்கின்றனர். வழக்கறிஞர்கள் தங்களுக்கு கீழானவர்கள் என்ற தவறான எண்ணத்தை சில நீதிபதிகள் கொண்டுள்ளனர். இது அதிகார துஷ்பிரயோகம் செய்யவும் மற்றும் வழக்கறிஞர்களை இழிவுபடுத்தவும் வழிவகுக்கிறது.
வழக்கறிஞர்கள் கண்ணியத்துடன் நடத்தப்படுவதில்லை, சில நீதிபதிகளால் அவமானப்படுத்தப்படுகிறார்கள். நீதி நிர்வாகத்தில் வழக்கறிஞர்களும் இணையானவர்கள், யாரும் உயர்ந்தவர்களோ, தாழ்ந்தவர்களோ அல்ல என்பதை மறந்துவிடக் கூடாது என உச்சநீதிமன்ற நீதிபதி பி.ஆர். கவாய் ஒரு நிகழ்ச்சியில் பேசியுள்ளார்.
கர்நாடக உயர் நீதிமன்றத்தின் நீதிபதி பயன்படுத்திய சில வார்த்தைகளுக்கு எதிராக தானாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்துள்ள உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி, நீதிமன்ற அறைகளில் நீதிபதிகளின் நடத்தைக்கான விதிமுறைகளை உருவாக்குவது குறித்தும் பரிசீலித்து வருகிறார். இதை நாங்கள் வரவேற்கிறோம்.
உயர் நீதிமன்றம், மாவட்ட நீதிமன்றம் மற்றும் கூடுதல் நீதிமன்றங்களின் அனைத்து நீதிபதிகளும், வழக்கறிஞர்களை உரிய மரியாதையுடனும் கண்ணியத்துடனும் நடத்துவதை உறுதிசெய்ய கண்காணிப்புக் குழுவை அமைக்க வேண்டும்.
நீதிபதிகள் அதிகார துஷ்பிரயோகம் செய்தாலோ, தவறாக நடந்து கொண்டாலோ, அதுகுறித்து வழக்கறிஞர்கள் புகார் அளிக்க குறை தீர்ப்பு நடைமுறை கொண்டு வர வேண்டும்.
நீதிபதிக்கும் வழக்கறிஞருக்கும் இடையிலான தொடர்பு தொழில்முறையிலானது. அது நாகரீகமாகவும் கண்ணியமாகவும் இருக்க வேண்டும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு – புதுச்சேரி வழக்கறிஞர் சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர் என்.மாரப்பன் கூறுகையில், “மதுரை கிளையில் நடந்தது தொடர்பாக உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியை நேரில் சந்தித்து பேசவுள்ளோம். வில்சன் எந்த காலக்கட்டத்திலும் எங்களுக்குத் தெரிந்து அநாகரிகமாக பேசியதில்லை. ஒருவேளை நான் அவ்வாறு பேசியிருப்பின் மன்னிப்பு கோருகிறேன் என்று நீதிபதியிடம் வில்சன் சொல்கிறார். அதையெல்லாம் பொருட்படுத்தாமல் நீதிபதி பேசுகிறார்” என்று பேட்டி அளித்துள்ளார்.
“டிஎன்பிஎஸ்சி வேலையில் முன்னாள் ராணுவத்தினருக்கான ஒதுக்கீடு தொடர்பான வழக்கை மதுரை உயர்நீதிமன்ற கிளையில், விசாரித்த நீதிபதி விக்டோரியா கவுரி, இருதரப்பு வாதங்களை கேட்டு மனுதாரருக்கு சாதகமாக இடைக்கால உத்தரவை பிறப்பித்தார். பின்னர் அதே போர்ட்போலியோவுக்கு வந்த நீதிபதி ஆர்.என். மஞ்சுளா இந்த வழக்கை விசாரித்து ,ஏற்கனவே பிறப்பிக்கப்பட்ட உத்தரவை இறுதி செய்து உத்தரவு பிறப்பித்துள்ளார். இதை எதிர்த்து டிஎன்பிஎஸ்சி சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது.
நீதிபதி விக்டோரியா கவுரி பிறப்பித்த உத்தரவை குறிப்பிட்டுதான் வழக்கறிஞர் வில்சன் பேசினார்” என்கிறார்கள் வழக்கறிஞர்கள் வட்டாரத்தில்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
பிரியா
ஓடிடியில் நேரடியாக வெளியாகும் ‘இந்தியன் – 3’?
நாம் தமிழர் அவதூறு: எக்ஸ் வலைதள அதிகாரிக்கு நோட்டீஸ்… எஸ்.பி வருண் குமார் வழக்கில் உத்தரவு!
Comments are closed.