அமெரிக்காவின் தற்போதைய பொருளாதாரக் கொள்கைகளே தங்க விலை உயர்வுக்கான முக்கிய காரணம் என பொருளாதார நிபுணர் ஆனந்த் சீனிவாசன் தெரிவித்துள்ளார்.
உலக அளவில் தங்கம் மற்றும் வெள்ளி விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. சென்னையில் இன்று (ஜனவரி 29) ஒரே நாளில் ஒரு கிராம் தங்கம் ரூ. 1,190 உயர்ந்து ரூ. 16,800 வரை விற்பனையாகிறது. மேலும் தங்கத்திற்கு இணையாக வெள்ளி விலையும் தொடர்ந்து உயர்ந்து வரும் நிலையில், இன்று ஒரு கிராம் வெள்ளி ரூ. 25 உயர்ந்து ஒரு கிலோ வெள்ளி ரூ. 4,25,000-க்கு விற்பனை செய்யப்படுகிறது. அமெரிக்காவின் தற்போதைய பொருளாதாரக் கொள்கையே இந்த விலை உயர்வுக்கு முக்கிய காரணம் என பொருளாதார நிபுணர் ஆனந்த் சீனிவாசன் தெரிவித்துள்ளார்.
திருப்பூரில் இன்று பொருளாதார நிபுணர் ஆனந்த் சீனிவாசன் செய்தியாளர்களிடம் பேசினார். தங்கம் விலை உயர்வு குறித்த கேள்விக்கு, “அமெரிக்காவின் தற்போதைய பொருளாதாரக் கொள்கைகளே தங்க விலை உயர்வுக்கான முக்கிய காரணம். டிரம்ப் தலைமையிலான அமெரிக்க அரசின் செயல்பாடுகளால், தென் கொரியா, டென்மார்க் உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகள் டாலர் மீது வைத்திருந்த நம்பிக்கையை இழந்துள்ளன. இதன் தொடர்ச்சியாக பல்வேறு நாடுகளின் மத்திய வங்கிகள் தங்களிடம் இருந்த டாலரை விற்றுவிட்டு தங்கத்தில் முதலீடு செய்யத் தொடங்கியுள்ளன. இதன் காரணமாக கடந்த ஒரு மாதத்திலேயே தங்கத்தின் விலை சுமார் 25 சதவீதம் வரை உயர்ந்துள்ளது.
வெள்ளி விலை உயர்வைப் பொறுத்தவரை சீனாவின் ஏற்றுமதிக் கொள்கையே முக்கிய காரணமாக உள்ளது. சீனா வெள்ளியை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யாததால், உலக சந்தையில் வெள்ளிக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் வெள்ளி விலையும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
இந்தியாவைப் பொறுத்தவரை தங்கம் மற்றும் வெள்ளி மீது கூடுதல் வரி விதிக்கப்படலாம் என்ற தகவல்கள் பரவி வருகின்றன. இதனால் மத்திய பட்ஜெட்டுக்கு முன்னதாகவே விலை உயர்த்தப்படுகிறது.
அதேசமயம் தங்கம்–வெள்ளியை ஒப்பிடுகையில் பயன்பாட்டில் வேறுபாடு உள்ளது. தங்கம் ஒரு பணவியல் உலோகமாகக் கருதப்பட்டு உலகில் பல்வேறு நாடுகளின் மத்திய வங்கிகளால் சேமிக்கப்பட்டு வருகிறது. ஆனால் வெள்ளிக்கு அத்தகைய அந்தஸ்து இல்லை. இதனால் வெள்ளி விலையில் அதிக ஏற்ற இறக்கங்கள் காணப்படுகின்றன.
இந்திய ரூபாயின் மதிப்பு கடந்த 10 ஆண்டுகளில் டாலருக்கு நிகராக பெருமளவு சரிந்துள்ளது. தற்போது ஒரு அமெரிக்க டாலர் ரூ.92-ஐத் தாண்டியிருப்பது ஆபத்தான நிலை. தவறான பொருளாதாரக் கொள்கைகளே இதற்குக் காரணம் எனவும், இந்த நிலை தொடர்ந்தால் விரைவில் ஒரு டாலர் ரூ. 100-ஐ எட்டும் சூழல் உருவாகலாம்.
தங்கம் மற்றும் வெள்ளி விலை உயர்வால், சாதாரண மக்கள் தங்கம் வாங்குவது மிகவும் சவாலானதாக மாறியுள்ளது. அரசின் பொருளாதாரத் திட்டங்கள் மற்றும் ரூபாய் மதிப்பு சரிவு குறித்து மக்கள் கேள்வியெழுப்ப வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.இந்த விலை உயர்வுகள் எதிர்காலத்தில் மக்களின் சேமிப்பு மற்றும் வாங்கும் திறனை பெரிதும் பாதிக்கக்கூடும் என எச்சரிக்கை விடுத்துள்ளார்.
