கள்ளக்குறிச்சியில் தனியார் பள்ளி மாணவி மர்மமான முறையில் உயிரிழந்த விவகாரத்தில் நீதிகேட்டு நடந்து வரும் போராட்டம் இன்று (ஜூலை 17) கலவரமாக மாறி உள்ளது.
கடலூர் மாவட்டம் பெரியநெசலூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ராமலிங்கம், செல்வி தம்பதியினரின் மகள் ஸ்ரீமதி. சின்னசேலம் அருகே கனியாமூரில் உள்ள தனியார் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி விடுதியில் தங்கி பிளஸ் 2 பயின்று வந்தார். கடந்த 13ஆம் தேதி காலையில் மகள் இறந்து விட்டதாக பெற்றோருக்கு தகவல் வந்தது. நேரில் பார்க்க சென்ற மாணவியின் தாயாரிடம், மாணவி விடுதியின் 2-வது மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டதாக பள்ளி நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.
ஆனால் மகள் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக தெரிவித்த தாயார், அவர் தற்கொலை செய்து கொண்டிருக்க மாட்டார் என்று தெரிவித்தார். இதையடுத்து மாணவியின் இறப்பை சந்தேக மரணம் என்று வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மாணவியின் உடல் பிரேத பரிசோதனைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
இந்நிலையில், மாணவியின் மரணத்தில் மர்மம் இருப்பதாக கூறி, உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் உடலை வாங்க மறுத்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மாணவியின் உடற்கூராய்வு அறிக்கையில், அவரின் உடலில் காயங்கள் இருந்ததாகவும் அவரது ஆடைகளிலும் ரத்த கறைகள் இருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டது. அவரது இதயம் உள்ளிட்ட பிற உறுப்புகள் ரசாயன ஆய்வுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இதற்கிடையே இன்று மாணவர்கள் அமைப்பினர் சார்பில் மாணவியின் மரணத்திற்கு நீதிகேட்டு போராட்டம் நடத்துவதாக அறிவிக்கப்பட்டது. அதனால் 300க்கும் மேற்பட்ட காவலர்கள் பள்ளி வளாகத்தை சுற்றி குவிக்கப்பட்டனர். ஆனால் மாணவர்களுடன், பொதுமக்களும் என 5000க்கும் மேற்பட்டோர் சேர்ந்து கொண்டதால் அமைதியாக நடந்து வந்த போரட்டம் இன்று போர்க்களமாக மாறியுள்ளது. பள்ளி நுழைவு வாயிலை உடைத்து சென்று வகுப்பறைகளை அடித்து நொறுக்கிய போராட்டக்காரர்கள், தடுக்க வந்த போலீசார் மீது கல்வீச்சு தாக்குதலில் ஈடுபட்டுள்ளனர். மேலும் அங்கு நின்றிருந்த போலீஸ் மற்றும் பள்ளி வாகனத்திற்கும் தீ வைக்கப்பட்டது.
குறைவான எண்ணிக்கையில் உள்ள போலீசார், போராட்டக்காரர்களை கட்டுப்படுத்த வானத்தை நோக்கி துப்பாக்கிச்சூடு நடத்தியும் கூட்டத்தை கலைக்க முடியவில்லை. இந்த போராட்டத்தில் இதுவரை சுமார் 10க்கும் மேற்பட்ட போலீசார் காயமடைந்துள்ளனர். தொடந்து பெருமளவில் போராட்டக்காரர்கள் குவிந்து வருவதால் போராட்டக்கார்களை கட்டுப்படுத்த மற்ற மாவட்டங்களில் இருந்து விரைவுப்படையினரும், கூடுதல் போலீசாரும் சின்னசேலம் விரைந்துள்ளனர்.
கிறிஸ்டோபர் ஜெமா