தங்கம் விலை அதிரடியாக உயர்ந்து வரும் நிலையில் மேலும் அதிகரித்து அடுத்த ஆண்டக்குள் ரூ. 2 லட்சத்தை நெருங்க வாய்ப்பு உள்ளது என்று உலக தங்க கவுன்சில் அறிவித்துள்ளது நகைப்பிரியர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இந்திய குடும்பங்களில் தங்கத்திற்கு எப்போதும் தனி மவுசுதான். இந்திய குடும்பங்கள் தங்க நகைகளை பாதுகாத்து தனது அடுத்த தலைமுறைக்கு கொடுப்பது இங்கு ஒரு மரபாக உள்ளது. ஒரு காலத்தில் ஆபரணமாக பார்க்கப்பட்ட தங்கம் காலப்போக்கில் முதலீடாக பார்க்கப்பட்டது.
இந்திய குடும்பங்களில் பல தலைமுறைகளாக சேகரிக்கப்பட்டுள்ள தங்கத்தின் இருப்பு 34,600 டன்னாக மதிப்பிடப்பட்டுள்ளது. தற்போது அந்தத் தங்க நகைகளின் மதிப்பு 3.8 லட்சம் கோடி டாலராக உள்ளது என உலக தங்க கவுன்சில் மதிப்பிட்டுள்ளது.
இந்த நிலையில் தங்கம் விலை தற்போது ரூ.1 லட்சத்தை நெருங்கி உள்ளதால் இல்லத்ததரசிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இந்நிலையில் உலக தங்க கவுன்சிலின் தலைமை செயல் அதிகாரி (சி.இ.ஓ.) டேவிட் டெயிட், தனது சமீபத்திய நேர்காணல் ஒன்றில் தங்கம் விலை அடுத்த ஆண்டு மேலும் உயரக் கூடும் என்று தெரிவித்துள்ளார்.
தற்போதை டாலர் மதிப்பின்படி, ஒரு அவுன்ஸ் (28.3 கிராம்) தங்கம் சுமார் ரூ.5.40 லட்சத்துக்கும் மேல் உயர வாய்ப்பு உள்ளது. இந்தியாவை பொறுத்தவரை 10 கிராம் கொண்ட 24 கேரட் தங்கத்தின் மதிப்பு ரூ.2,00,000 வரை உயர வாய்ப்பு உள்ளது என கணிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக 2024-ம் ஆண்டில் இதேபோல் உலக தங்க கவுன்சில், உலகளாவிய புவிசார் அரசியல் பதற்றங்கள், வங்கி நிலவரங்களால் இந்தியாவில் 2025-ல், 24 காரட் தங்கம் ரூ.1 லட்சத்தை தாண்ட வாய்ப்புள்ளதாக கணித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
காரணம்
உலக நாடுகளின் மத்திய வங்கிகள் தங்களின் பண இருப்புக்கு மாற்றாக தங்கத்தை அதிக அளவில் வாங்கி சேமித்து வருகின்றன. குறிப்பாக சீன அரசு தங்கத்தை வாங்கி சேர்ப்பதில் அதிக ஆர்வம் காட்டி வருகிறது. தங்கத்திற்கான விதிகளையும் தளர்த்தி உள்ளது.
ஜப்பானிலும் பணவீக்கம் காரணமாக தங்கத்தில் அதிக முதலீடுகள் செய்யப்படுகிறது.
உலக அளவில் நிதி நிலையற்ற தன்மை நிவுவதால் முதலீட்டாளர்கள் தங்கத்தை பாதுகாப்பான முதலீடாக கருதுவதுமே இதற்கு காரணம் என்று டேவிட் டெயிட் தெரிவித்துள்ளார்.
தங்கம் விலை குறையுமா?
அமெரிக்க பொருளாதாரம் மிக வேகமாக முன்னேற்றம் கண்டால் அல்லது நாடுகளுக்கிடையேயான போர்ப்பதற்றங்கள் முற்றிலும் தணிந்தால் தங்கத்தின் விலை ஏற்றம் தொடர்பான இந்த கணிப்பில் லேசான மாற்றங்கள் வர வாய்ப்பு உள்ளது என கூறப்படுகிறது.
