பானை சின்னம் உறுதியாக விசிகவிற்கு ஒதுக்கப்படும் – திருமாவளவன்

Published On:

| By indhu

The pot symbol will definitely be assigned to VCK - Thirumavalavan

விசிகவிற்கு 100 சதவீதம் பானை சின்னம் ஒதுக்கப்படும் என இன்று (மார்ச் 30) சென்னையில் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத் தேர்தலில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தமிழகம், கர்நாடகா, ஆந்திரா, கேரளா, தெலுங்கானா, மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களில் போட்டியிடுகிறது.

எனவே, இந்த தேர்தலில் விசிக-விற்கு பானை சின்னத்தை பொதுவான சின்னமாக ஒதுக்கக்கோரி தேர்தல் ஆணையத்தில் அக்கட்சி சார்பில் மனு அளிக்கப்பட்டது.

ஆனால், ஒரு சதவீதத்திற்கும் குறைவாக வாக்கு பெற்றிருப்பதாகக் கூறி, விசிகவின் கோரிக்கையை தேர்தல் ஆணையம் ஏற்க மறுத்தது.

இதனையடுத்து, டெல்லி உயர்நீதிமன்றத்தில் விசிக சார்பில் வழக்கு தொடரப்பட்டது. மேலும் அந்த வழக்கில், கடந்த தேர்தல்களில் ஒரு சதவீதத்துக்கும் அதிகமாக வாக்குகள் பெற்றது தொடர்பான ஆவணங்கள் தாக்கல் செய்யப்பட்டன.

இதைத் தொடர்ந்து, விசிகவிற்கு பொது சின்னம் ஒதுக்கீடு செய்வது குறித்து தேர்தல் ஆணையம் முடிவு எடுக்குமாறு டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

பின்னர், பொது சின்னம் கோரும் விண்ணப்பத்துடன் கட்சியின் நிதியாண்டு கணக்கை விசிக தாக்கல் செய்யவில்லை எனக்கூறி, பானை சின்னத்தை அக்கட்சிக்கு ஒதுக்க தேர்தல் ஆணையம் மறுத்துவிட்டது.

இதனை எதிர்த்து டெல்லி உயர்நீதிமன்றத்தில் விசிக சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில், மக்களவைத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் இறுதிப் பட்டியல் இன்று வெளியாகிறது.

இதுவரை சின்னங்கள் ஒதுக்கப்படாத மதிமுக, விசிகவிற்கு எந்த சின்னம் ஒதுக்கப்பட உள்ளது என்பது இன்று தெரியவரும்.

இந்நிலையில், இன்று சின்னம் ஒதுக்கீடு தொடர்பாக பேசிய விசிக கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன், “விழுப்புரம் தொகுதியிலும், சிதம்பரம் தொகுதியிலும் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் பானை சின்னம் கோரி மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

எங்களை தவிர வேறு யாரும் பானை சின்னத்தை 2 தொகுதிகளிலும் கேட்கவில்லை. ஆகவே, விசிகவிற்கு பானை சின்னம் ஒதுக்கப்படுவதற்கு 100 சதவீதம் வாய்ப்பு இருக்கிறது.

தேர்தல் ஆணையம் பொது சின்னமாக விசிகவிற்கு பானை சின்னத்தை ஒதுக்க முடியாது எனத் தெரிவித்துள்ளது. விசிக 6 மாநிலங்களில் போட்டியிடுகிறது.

எல்லா மாநிலங்களிலும் பானை சின்னத்தில் விசிக வேட்பாளர்கள் போட்டியிட கோரியதில், தேர்தல் ஆணையம் அதனை மறுத்து விட்டது.

சுயேட்சை கட்சிகளுக்கு ஒதுக்கப்படும் சின்னங்கள் விசிகவிற்கு ஒதுக்கப்படும் என தேர்தல் ஆணையம் தெரிவித்திருந்தது.

பானை சின்னம் ஒதுக்குவதில், தேர்தல் ஆணையம் திட்டமிட்ட சதி வேலை செய்து வருகிறது.” எனத் தெரிவித்துள்ளார்.

இந்து

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

வருமான வரித்துறைக்கு எதிராக… நாடு முழுவதும் காங்கிரஸ் போராட்டம்!

மதுபான வழக்கு: மேலும் ஒரு ஆம் ஆத்மி அமைச்சருக்கு சிக்கல்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share