பூத் சிலிப் வழங்கும் இடத்தில் அதிக கூட்டம் கூடியதற்கு எதிர்ப்பு தெரிவித்ததால், போலீசார் மற்றும் திமுக நிர்வாகிகளுக்கிடையே மோதல் ஏற்பட்டது. அப்போது திமுக நிர்வாகி பாக்யராஜை குண்டுகட்டாக தூக்கிச் சென்று காவல் துறையினர் வேனில் ஏற்றியதால் பரபரப்பு ஏற்பட்டது.
கோவை மக்களவை தொகுதியில் திமுக சார்பில் கணபதி ராஜ்குமார், அதிமுக சார்பில் சிங்கை ராமச்சந்திரன் மற்றும் பாஜக சார்பில் அக்கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை ஆகியோர் போட்டியிடுகின்றனர்.
இந்த தொகுதியில் இன்று (ஏப்ரல் 19) காலை முதல் விறுவிறுப்பாக வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், கோவை பிஎன் புதூரில் உள்ள வாக்குச்சாவடி அருகே 200 மீட்டருக்கு அப்பால் திமுக உள்ளிட்ட கட்சியினர் வாக்காளர்களுக்கு பூத் சிலிப் விநியோகம் செய்து கொண்டிருந்தனர்.
அப்போது அவர்கள் தங்களது கட்சி சின்னத்தை வைத்திருந்தாக கூறப்படுகிறது. இது தேர்தல் விதிமுறை மீறல் என்பதால் அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அவர்களை எச்சரித்தனர்.
தொடர்ந்து அப்பகுதியில் அதிகளவில் கூட்டம் கூடியதால், அங்கு போடப்பட்டிருந்த பந்தலை அகற்றுமாறு போலீசார் தெரிவித்துள்ளனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த திமுக பகுதி செயலாளர் பாக்யராஜ் என்பவருக்கும், உதவி கமிஷனர் நவீன் குமாருக்கும், இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.
ஒருகட்டத்தில் பாக்யராஜை குண்டுக்கட்டாக தூக்கிச்சென்ற போலீசார் பொத்தென்று கீழே சாலையில் போட்டனர். இதில் பாக்கியராஜின் சட்டை கிழிந்து காயம் ஏற்பட்டது.
போலீசாரின் இந்த நடவடிக்கையை தொடர்ந்து திமுகவினர் அங்கு போராட்டம் நடத்தியதால் அங்கு பதட்டமான சூழ்நிலை ஏற்பட்டது.
இதுகுறித்து தகவல் அறிந்து போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன், துணை கமிஷனர்கள் உள்ளிட்ட அதிகாரிகள் அங்கு விரைந்து வந்து திமுகவினருடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிறிஸ்டோபர் ஜெமா
Lok Sabha Election 2024: வெள்ளை நிற ஆடையில் வந்த பிரபலங்கள்… என்ன காரணம்?
18 தொகுதிகளில் கைவிரித்த திமுக…புகுந்து விளையாடிய அதிமுக…ஒதுங்கிய பாஜக…கள பண நிலவரம்!