கோவையில் இளம் பெண்ணுக்கு Cash on Delivery முறையில் தினமும் நூற்றுக்கணக்கான பார்சல்களை அனுப்பி தொல்லை கொடுத்தவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
கோவை கணபதியை சேர்ந்த 23 வயது இளம் பெண் , கடந்த 2023 ஆம் ஆண்டு முதல் புலியகுளத்தில் உள்ள டிஜிட்டல் மார்க்கெட்டிங் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார். பின்னர் அந்த நிறுவனத்தில் இருந்து வெளியேறி தனியாக டிஜிட்டல் மார்க்கெட்டிங் தொழில் செய்து வருகின்றார்.
கடந்த சில நாட்களாக அந்த இளம் பெண்ணிற்கு Cash on delivery முறையில் தினந்தோறும் 100க்கும் மேற்பட்ட பார்சல்கள் வந்தன. அந்த பார்சல்களில் இளம் பெண்ணின் பெயருடன் ஆபாசமான வார்த்தைகளையும் சேர்த்து அனுப்பப்பட்டிருந்தது.
இதனால் கடும் மன உளைச்சலுக்கு ஆளான அந்த பெண் cash on delivery முறையில் பார்சல் அனுப்பி டார்ச்சர் செய்வது குறித்து கோவை சைபர் கிரைம் காவல் துறையில் புகார் அளித்தார்.
இது குறித்து வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இதில் இளம் பெண்ணுக்கு பார்சல்களை அனுப்பி மன உளைச்சல் கொடுத்தது அவர் ஏற்கனவே புலியகுளத்தில் வேலை செய்த டிஜிட்டல் மார்க்கெட்டிங் நிறுவனத்தின் உரிமையாளர் சதீஷ்குமார் என்பது தெரியவந்தது.
சதீஷ்குமார் இளம் பெண்ணின் பெயருடன் ஆபாசமான வார்த்தைகளை புனைப்பெயராக சேர்த்து பெண் முகவரிக்கு பார்சல் அனுப்பி தொந்தரவு கொடுத்து வந்து இருப்பதும் தெரியவந்தது. இதையடுத்து அவரை நேற்று ( டிசம்பர் 16) கைது செய்த போலீசார் அவரின் செல்போனை கைப்பற்றினர். பின்னர் அந்த நபரை சிறையில் அடைத்துள்ளனர்.
பார்சல் அனுப்பியதற்கான காரணம் குறித்தும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
