சினிமா பிரபலங்களுக்கு சென்னை அண்ணா பல்கலைகழகத்தில் போலி கவுரவ டாக்டர் பட்டம் வழங்கிய நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் ராஜூ ஹரிஷ் என்பவரை காவல்துறையினர் இன்று (மார்ச் 5 ) கைது செய்துள்ளனர்.
சென்னையை சேர்ந்த சர்வதேச ஊழல் தடுப்பு மற்றும் மனித உரிமை கவுன்சில் என்ற தனியார் அமைப்பு சார்பில் சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில், கடந்த பிப்ரவரி 26 ஆம் தேதி விருது வழங்கும் விழா நடத்தப்பட்டது.
அதில் பல்வேறு துறைகளில் சிறந்து விளங்குபவர்களுக்கு விருது மற்றும் டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது.
அந்த வகையில் இசையமைப்பாளர் தேவா, நடிகர் வடிவேல், ஈரோடு மகேஷ், யூடியூப் பிரபலங்களான கோபி மற்றும் சுதாகர் உள்ளிடோருக்கு கவுரவ டாக்டர் பட்டம் மற்றும் விருது வழங்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில், சிறப்பு அழைப்பாளராக உயர் நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி வள்ளிநாயகம் கலந்து கொண்டு பட்டங்களை வழங்கினார்.

இது சர்ச்சையான நிலையில் அண்ணா பல்கலைக் கழகம் சார்பில் கோட்டூர்புரம் காவல் நிலையத்திலும், கையெழுத்து தவறாக முறைகேடாக பயன்படுத்தப்பட்டதாக ஓய்வுபெற்ற நீதிபதி வள்ளிநாயகம் தரப்பில் மாம்பலம் காவல் நிலையத்திலும் புகார்கள் அளிக்கப்பட்டன.
அதன்படி நிகழ்ச்சி நடத்திய அமைப்பின் இயக்குனரான ராஜூ ஹரிஷ் என்பவர் மீது 7 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு,
தனிப்படை அமைத்து விசாரணை தொடங்கிய நிலையில், அவர் தலைமறைவானதால், காவல்துறையினர் அவரை தேடி வந்தனர்.
இதனிடையே சென்னை கோட்டூர்புரம் காவல் நிலையத்தில் பதிவான வழக்கில் முன்ஜாமின் கோரி ராஜூ ஹரிஷ் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.
அவரது முன் ஜாமீன் மனுவை நீதிமன்றம் நேற்று (மார்ச் 4 ) தள்ளுபடி செய்தது.
இந்நிலையில் ஆம்பூரில் பதுங்கி இருந்த ராஜூ ஹரிஷை தனிப்படை போலீசார் இன்று(மார்ச் 5 ) கைது செய்துள்ளனர்.
மு.வா.ஜெகதீஸ் குமார்
