ஆ ராசா காரை முழுமையாக சோதனையிடாத தேர்தல் பறக்கும்படை பெண் அதிகாரி இன்று (மார்ச் 30) அதிரடியாக சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.
நீலகிரி மக்களவைத் தொகுதி எம்பியாக திமுக துணை பொதுச்செயலாளர் ஆ.ராசா உள்ளார். நடைபெற உள்ள லோக்சபா தேர்தலில் அவர் மீண்டும் நீலகிரியில் போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து பாஜக வேட்பாளராக மத்திய இணையமைச்சர் எல் முருகன் களமிறங்கி உள்ளார்.
இந்நிலையில் கடந்த 25ம் தேதி ஆ ராசா தனது காரில் கோத்தகிரி சென்று உதகை திரும்பினார்.
அப்போது கோத்தரி-மேட்டுப்பாளையம் சாலையில் குங்சப்பனை சோதனை சாவடி அருகே ஆ.ராசாவின் காரை நிறுத்திய தேர்தல் பறக்கும் படையினர் சோதனை நடத்தினர். எனினும் காரில் இருந்து எதுவும் கைப்பற்றபடவில்லை. எனவே காரில் ஏறி ஆ.ராசா உள்ளிட்ட அனைவரும் புறப்பட்டு சென்றனர்.
இந்நிலையில் தான் ஆ ராசாவின் காரில் நடத்தப்பட்ட சோதனை பதிவு செய்யப்பட்டிருந்த வீடியோ சமூகவலைதளங்களில் வெளியானது. இதனையடுத்து காரின் பின்புறம் சூட்கேஸ், பேக்குகள் என பல பெட்டிகளை பறக்கும் படையினர் திறந்து முழுமையாக சோதனையிடவில்லை என புகார் எழுந்தது.
இதையடுத்து நீலகிரி லோக்சபா தொகுதிக்கான தேர்தல் நடத்தும் அலுவலரும், மாவட்ட கலெக்டருமான அருணா விசாரணைக்கு உத்தரவிட்டார்.
இதுதொடர்பாக தேர்தல் பறக்கும் படை அதிகாரி கீதா மற்றும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த உதவி ஆய்வாளர் சிவராமன் ஆகியோரிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டது.
மேலும் நேரில் ஆஜராக உத்தரவிடப்பட்ட நிலையில் இருவரிடமும் இன்று விசாரணை நடத்தப்பட்டது.
அப்போது நீலகிரி திமுக வேட்பாளரான ஆ ராசாவின் காரில் முழுமையாக சோதனை நடத்தப்படவில்லை என்பது தெரியவந்தது.
இதையடுத்து பறக்கும் படை பெண் அதிகாரியான கீதாவை அதிரடியாக சஸ்பெண்ட் செய்து தேர்தல் நடத்தும் அலுவலர் அருணா உத்தரவிட்டுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிறிஸ்டோபர் ஜெமா
வருமான வரித்துறைக்கு எதிராக… நாடு முழுவதும் காங்கிரஸ் போராட்டம்!