வகுப்பறையில் அரசுப் பள்ளி ஆசிரியர் கொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று (நவம்பர் 20) கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
தஞ்சாவூர் மாவட்டம் மல்லிப்பட்டினத்தை சேர்ந்தவர் 26 வயதான ரமணி. இவர் கடந்த நான்கு மாதங்களுக்கு முன்பு தான் அங்கு அங்குள்ள அரசு உயர்நிலைப் பள்ளி ஆசிரியராக பணியில் சேர்ந்தார்.
இந்த நிலையில், இன்று காலை பள்ளி வகுப்பறையில் பாடம் நடத்திக் கொண்டிருந்த ரமணியை அவரது காதலரான மதன், திடீரென புகுந்து கத்தியால் சரமாரியாக குத்திவிட்டு தப்பி ஓடிவிட்டார்.
ரத்த வெள்ளத்தில் கிடந்த ரமணியை அருகில் இருக்கும் பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்ற நிலையில் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் கூறியுள்ளார்கள்.
இதற்கிடையே தப்பியோடிய மதனை போலீசார் கைது செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடந்த வாரம் சென்னை அரசு மருத்துவர் பாலாஜி கத்தியால் குத்தப்பட்டு உயிர்பிழைத்த நிலையில், தற்போது அரசுப் பள்ளி ஆசிரியர் வகுப்பறையிலேயே கொலை செய்யப்பட்ட சம்பவம் மக்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சம்பவத்தை அடுத்து எதிர்க்கட்சி தலைவர்கள் பலரும் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
துளியும் பாதுகாப்பு இல்லை!
அதிமுக பொதுச்செயலாளர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், “தஞ்சை மாவட்டம் மல்லிப்பட்டினம் அரசு மேல்நிலைப்பள்ளியில் ஆசிரியர் ரமணி கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்டுள்ளதாக வரும் செய்தி அதிர்ச்சியளிக்கிறது. அவரது குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த இரங்கல்.
திமுக ஆட்சியில் கொலை என்பது சர்வசாதாரணம் என்ற அவல நிலை வரும் அளவிற்கு நிர்வாகத் திறனற்ற திமுக அரசு சட்டம் ஒழுங்கைக் காக்கத் தவறியுள்ளது.
அரசுப்பள்ளி ஆசிரியர்கள், அரசு மருத்துவர்கள் உள்ளிட்ட அரசு ஊழியர்களுக்கு, அவர்கள் பணிபுரியும் அரசுக்கு சொந்தமான இடங்களில் கூட பாதுகாப்பு துளியும் இல்லாத அளவிற்கு சட்டம் ஒழுங்கை சீர்குலைத்துள்ள திமுக அரசுக்கு எனது கடும் கண்டனம்.
ஆசிரியர் ரமணியின் கொலை வழக்கில் கைதாகியுள்ளவர் மீது உரிய சட்ட நடவடிக்கை எடுப்பதுடன், விடியா திமுக முதல்வர் வெறும் விளம்பரங்களில் மட்டுமே செலுத்தும் கவனத்தை, தன்னுடைய முதல் பணியான சட்டம் ஒழுங்கைக் காப்பதில் இனியாவது செலுத்த வலியுறுத்துகிறேன்” என எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
சட்டம் – ஒழுங்கு சீர்கேடு மிகுந்த அச்சமூட்டுகிறது!
அதேபோன்று அதிமுக முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் வெளியிட்டுள்ள கண்டன அறிக்கையில், “தஞ்சாவூர் மாவட்டம் மல்லிப்பட்டினம் அரசு மேல்நிலைப்பள்ளியில் ஆசிரியை ரமணி அவர்கள் கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்டுள்ள செய்தி மிகுந்த அதிர்ச்சியையும், வேதனையையும் அளிக்கிறது.
பரிதாபமாக உயிரிழந்த ஆசிரியை ரமணியின் குடும்பத்தாருக்கும், சக ஆசிரியப் பெருமக்கள், மாணவர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலை, ஆறுதலை தெரிவித்துக் கொள்கிறேன்.
கடந்த வாரம் அரசு மருத்துவமனையில் அரசு மருத்துவருக்கு கத்திக் குத்து; இந்த வாரம் அரசுப் பள்ளியில் சர்வ சாதாரணமாக உள்ளே நுழைந்து அரசுப்பள்ளி ஆசிரியை மீது கத்தியால் குத்திக் கொலை – என தமிழகத்தில் சட்டம் – ஒழுங்கு சீர்கேடு மக்களை மிகுந்த அச்சமூட்டுகிறது.
ஆசிரியை ரமணி அவர்களின் கொலை வழக்கில் கைதாகியுள்ளவர் மீது கடும் சட்ட நடவடிக்கை எடுப்பதுடன், பலியான ஆசிரியையின் குடும்பத்துக்கு அரசு துணை நிற்க வேண்டுமென வலியுறுத்துகிறேன்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிறிஸ்டோபர் ஜெமா
சென்னை – ஒரே நாளில் 12 விமானங்கள் ரத்து: பயணிகள் அவதி!
2011 ஆம் ஆண்டு ஆர்ய சமாஜம் சென்ற டயனா மரியம்… பெயர் மாறிய பின்னணி!