ஹாலிவுட் திரையுலகின் ஆல்-டைம் கிளாசிக் த்ரில்லர் திரைப்படங்களான ‘தி மம்மி’ (The Mummy) மற்றும் ‘தி மம்மி ரிட்டர்ன்ஸ்’ ஆகிய படங்களில் ‘இம்ஹோடெப்’ (Imhotep) என்ற ஐகானிக் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்து உலகளவில் கோடிக்கணக்கான ரசிகர்களை மிரட்டியவர் பிரபல ஹாலிவுட் நடிகர் ஆர்னால்டு வோஸ்லூ (Arnold Vosloo). தற்போது இவர் முதல்முறையாக இந்தியத் திரையுலகில் (Ranabaali) கால் பதிக்கவுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி ஒட்டுமொத்த சினிமா வட்டாரங்களையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
விஜய் தேவரகொண்டா – ராஷ்மிகா கூட்டணியின் ‘ரணபாலி’ (Ranabaali)
தெலுங்கு திரையுலகின் முன்னணி நட்சத்திரமான விஜய் தேவரகொண்டா மற்றும் ‘நேஷனல் க்ரஷ்’ ராஷ்மிகா மந்தனா மீண்டும் ஜோடி சேர்ந்து, இயக்குனர் ராகுல் சங்கிருத்தியன் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் பான்-இந்திய வரலாற்றுத் திரைப்படம் ‘ரணபாலி’. ‘டாக்ஸிவாலா’ படத்தின் வெற்றிக்குப் பிறகு விஜய் தேவரகொண்டா – ராகுல் கூட்டணி மீண்டும் இணைந்துள்ளதால் இப்படத்திற்கு ஏற்கனவே பலத்த எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. மைத்ரி மூவி மேக்கர்ஸ் (Mythri Movie Makers) மற்றும் டி-சீரிஸ் இணைந்து தயாரிக்கும் இந்த வரலாற்று ஆக்ஷன் காவியத்தில் தான் ஆர்னால்டு வோஸ்லூ முக்கிய வில்லனாக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.
‘தி டெமான் ஆஃப் ட்ராட்’ – மிரட்டும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்
நடிகர் ஆர்னால்டு வோஸ்லூவின் 65-வது பிறந்தநாளை (ஜூன் 16, 2026) முன்னிட்டு, ‘ரணபாலி’ படக்குழுவினர் அவருக்கு வாழ்த்து தெரிவித்து அவரது பிரத்யேகக் கதாபாத்திர போஸ்டரை வெளியிட்டுள்ளனர். இப்படத்தில் ‘சார் தியோடர் ஹெக்டர்’ (Sir Theodore Hector) என்ற கொடூரமான பிரிட்டிஷ் அதிகாரி கதாபாத்திரத்தில் அவர் நடிக்கிறார். அவரது கதாபாத்திரத்தின் தீவிரத்தை விவரிக்கும் வகையில் ‘தி டெமான் ஆஃப் ட்ராட்’ (The Demon of Drought – வறட்சியின் அரக்கன்) என்ற பவர்ஃபுல் டேக்லைனும் போஸ்டரில் இடம்பெற்றுள்ளது. மெட்டாலிக் கேப் மற்றும் புகை சூழ்ந்த பின்னணியில் மிகவும் மர்மமாகவும், ஆக்ரோஷமாகவும் காட்சியளிக்கும் அவரது லுக் இணையத்தில் செம டிரெண்டாகி வருகிறது.
19-ம் நூற்றாண்டு இந்திய வரலாறும் பிரிட்டிஷ் சதியும்
இந்திய வரலாற்றில் அதிகம் அறியப்படாத சில உண்மைச் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு ‘ரணபாலி’ திரைப்படம் உருவாக்கப்பட்டு வருகிறது. 1850 முதல் 1870 வரையிலான பிரிட்டிஷ் காலனித்துவ ஆதிக்கப் பின்னணியில் (Colonial Era), ஒரு ஆக்ரோஷமான பழங்குடிப் போர்வீரனாக விஜய் தேவரகொண்டா நடிக்கிறார். அவருக்கு இணையாக, இந்திய மக்களைச் சுரண்டும் இரக்கமற்ற பிரிட்டிஷ் வில்லனாக ஆர்னால்டு வோస్லூ களமிறக்கப்பட்டுள்ளார். ஹாலிவுட்டில் ‘பிளட் டைமண்ட்’, ‘ஜி.ஐ. ஜோ’ போன்ற படங்களில் மிரட்டிய இவர், இந்தியத் திரையில் விஜய் தேவரகொண்டாவுடன் மோதும் ஆக்ஷன் காட்சிகள் படத்திற்குப் மிகப்பெரிய ஹைலைட்டாக இருக்கும் எனப் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.
செப்டம்பர் 11 அன்று உலகளாவிய ரிலீஸ்!
முன்னதாக விஜய் தேவரகொண்டா நடிப்பில் வெளியான ‘லிகர்’ திரைப்படத்தில் சர்வதேச பாக்ஸிங் லெஜண்ட் மைக் டைசன் நடித்திருந்தார். தற்போது மீண்டும் ஒரு சர்வதேச நட்சத்திரம் அவரது படத்தில் இணைந்திருப்பது ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது. இப்படத்தில் இடம்பெற்ற ‘ஓ மேரே சஜன்’ என்ற காதல் பாடல் ஏற்கனவே சமூக வலைதளங்களில் மில்லியன் கணக்கான பார்வைகளைக் கடந்து சூப்பர் ஹிட்டாகியுள்ளது. அனைத்துப் பணிகளும் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், ‘ரணபாலி’ திரைப்படம் வரும் செப்டம்பர் 11, 2026 அன்று தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம் மற்றும் கன்னடம் ஆகிய 5 மொழிகளில் உலகெங்கும் உள்ள திரையரங்குகளில் பிரம்மாண்டமாக வெளியாகத் திட்டமிடப்பட்டுள்ளது.
