ADVERTISEMENT

The MUMMY – விமர்சனம்!

Published On:

| By Balaji

ஒரு புது உலகத்தை உருவாக்க இயற்கைக்கு என்னென்ன சக்திகள் தேவைப்பட்டிருக்கும். எத்தனை பல மில்லியன் நூற்றாண்டுகளாக, அந்தப் புது உலகத்துக்கான அடிப்படை அமைக்கப்பட்டிருக்கும். பூமியைத் தாண்டி பல கோள்கள் சூரியனைச் சுற்றிவருகின்றன. அவற்றில் பல மனிதன் வாழ்வதற்கான சாத்தியக்கூறுகளைப் பெற்றிருக்கின்றன என்று ஆராய்ச்சியாளர்கள் சொல்கிறார்கள். அவை வாழ்வதற்கான சாத்தியக்கூறுகளா… வாழ்ந்ததற்கான எச்சமாக மிச்சமிருப்பவையா என்ற கேள்வியும் இருக்கத்தான் செய்கிறது. அப்படி ஒரு உலகத்தைப் பற்றியதுதான் இந்தக் கட்டுரை.

டிஸ்னிக்கு மார்வெல் ஸ்டூடியோஸ், வார்னர் பிரதர்ஸுக்கு DC காமிக்ஸ் என்று தனித்தனி உலகங்கள் இருந்ததால் யூனிவர்சல் பிக்சர் தனக்கென தனி உலகத்தைப் படைக்கத் திட்டமிட்டது. அந்த உலகத்துக்கு **டார்க் யூனிவர்ஸ்** என்று பெயர் வைத்தது. மார்வெல் சூப்பர் ஹீரோக்களை வைத்து அவெஞ்சர்ஸ் எடுத்ததுபோல, DC காமிக்ஸ் சூப்பர் ஹீரோக்களை வைத்து ‘தி ஜஸ்டிஸ் லீக்’ எடுத்ததுபோல டார்க் யூனிவர்ஸ் என்ற பெயரில் தனது படைப்பில் வெளியான ஹீரோக்களை வைத்து ஒரு உலகத்தை உருவாக்கத் திட்டமிட்டது யூனிவர்சல் பிக்சர்ஸ். இந்த லிஸ்ட்டில் சேர்ந்தவை தி மம்மி, பிராங்கென்ஸ்டெயின், இன்விசிபுள் மேன், டாக்டர் ஜெக்கில் & ஹைட், டிராகுலா ஆகிய படங்களை அறிவித்தது. இனி யூனிவர்சல் பிக்சர்ஸ் சார்பில் ரிலீஸாகும் அத்தனை திரைப்படங்களுக்கிடையேயும் ஒரு தொடர்பு வைக்கப்பட்டு, கடைசியில் அவை சூப்பர் ஹீரோக்களின் சங்கமமாக (அவெஞ்சர்ஸ் போல) இருக்குமென அறிவிக்கப்பட்டது. அந்த அறிவிப்புக்குப் பிறகு வெளியாகியிருக்கும் முதல்படம் ‘தி மம்மி’.

ADVERTISEMENT
ADVERTISEMENT

1999இல் தொடங்கிய மம்மி தொடரின் நான்காவது பாகம் அல்லது மாடர்ன் மம்மியின் முதல் பாகம் எனலாம். வழக்கமாகப் பார்த்து ரசித்து ரசிகர்களாகவே மாறிப்போயிருந்த பிரெண்டன் ஃபிராசெர், ராச்செல் வெய்ஸ் ஆகியோர் இல்லாமல் டாம் குரூஸ், ரசல் குரோவ், அனபெல்லே வல்லிஸ் ஆகியோருடன் புதிய மம்மியை கொண்டு வந்து நிறுத்தியிருக்கிறார்கள்.

ADVERTISEMENT

முந்தைய பாகங்களில் ஹீரோவின் மனைவி, மகனை பகடையாக வைத்து கதையை நகர்த்தியவர்கள் இந்தப் பாகத்தில் ஹீரோவையே பலியாக்கிவிட்டார்கள். உதாரணத்துக்கு நம் ஊர்களில் கோயில்களுக்கு நேர்ந்துவிடும் ஆடுகளை ஊர்வலம் அழைத்துச் செல்வதுபோல ஈராக்கில் தன்னைச் சவப்பெட்டியிலிருந்து விடுவித்த ஹீரோவைக் கொல்ல லண்டன் வரை வருகிறது மம்மி. லண்டனில் ஹீரோவைக்கொன்று தீய சக்தியின் கடவுளை எப்படி உலகத்துக்குக் கொண்டுவருகிறாள் அந்த மம்மி என்பதுதான் திரைப்படம். டாம் குரூஸ் என்ற அல்டிமேட் ஹீரோ இந்தப்படத்தில் சேரும்போது பிரமாண்டத்தை உயர்த்தலாம் என்று எண்ணினார்கள். ஆனால், ஹீரோயிசத்தின் நெடியைக் குறைக்க முடியாது என்பதைக் கணித்தார்களா இல்லையா எனத் தெரியவில்லை.

ADVERTISEMENT

கிஸ் அடிப்பதன்மூலம் மற்றவர்களின் உடலிலிருந்து சதையைப் பெற்றுக்கொள்ளும் மம்மி, டாக்டர் ஜெக்கிள் & ஹைட், மம்மி சொல்வதையெல்லாம் செய்யும் ஹீரோ, உலகத்தைக் காப்பாற்ற வேண்டிய கட்டாயம், வழக்கம்போல நரகத்துக்குச் சென்ற ஹீரோயினை மீண்டும் அழைத்து வரவேண்டிய கட்டாயம் என மம்மியின் முக்கிய கவர்ச்சிகளில் கைவைக்காமல் இருந்தவர்கள் ஹீரோயிசத்தில் மட்டும் கைவைத்திருப்பது மிகப்பெரிய தவறு.

ஹீரோ சாதாரண மனிதனாக சாகசம் செய்வதும் துப்பாக்கியால் சுட்டால் இறந்துவிடுவான் என்பதுதான் மம்மி திரைப்படத்தின் மிகப்பெரிய பலம். இதற்கு மட்டுமல்ல, DC காமிக்ஸின் பேட்மேன், மார்வெலின் அயர்ன்மேன் ஆகியோர்களுக்கெல்லாம் இத்தனைப் பெரிய ரசிகப்பட்டாளம் இருப்பதற்குக் காரணம் அவர்கள் மனிதர்களாகவே இருந்து அறிவினாலும், பணத்தினாலும் சூப்பர் ஹீரோக்களாக மாறியவர்கள் என்ற காரணத்தினால்தான். ஆனால், மம்மி திரைப்படத்தின் ஹீரோவான டாம் குரூஸுக்கு அப்படி எவ்வித கனெக்‌ஷனும் இல்லாமல், 5000 வருடங்களாகத் தூங்கிக்கிடந்த மம்மி டாம் குரூஸை அழைத்து தீய சக்திகளின் கடவுளாக இரு எனச் சொல்வதெல்லாம் எப்படி இருக்கிறது தெரியுமா? ‘மம்மி’ என்ற படத்தை டார்க் யூனிவர்ஸை உருவாக்க, யூனிவர்ஸர் பிக்சர்ஸ் தொடங்கியதா… இல்லை, அந்த யூனிவர்ஸையே அழிக்கத் தொடங்கியதா என யோசிக்க வைக்கிறது.

– சிவா

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share