ரஞ்சி கோப்பை இறுதிப் போட்டியில் கடைசி நாளான இன்று (மார்ச் 14) விதர்பா அணியை 169 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி 42-வது ரஞ்சி கோப்பையை மும்பை அணி வென்று சாதனை படைத்துள்ளது.
89-வது ரஞ்சி கோப்பை தொடர் இந்தாண்டு ஜனவரி 5-ம் தேதி தொடங்கியது. இந்த தொடரில் ஆரம்பம் முதலே வீரநடைபோட்ட சாய் கிஷோர் தலைமையிலான தமிழ்நாடு அணி அரையிறுதியில், மும்பை அணியிடம் இன்னிங்ஸ் தோல்வியுடன் பரிதாபமாக வெளியேறியது.
அதனைத்தொடர்ந்து இறுதிப்போட்டியில் பலம்வாய்ந்த மும்பை மற்றும் விதர்பா அணிகள் நேருக்கு நேர் மோதின.
மும்பை அணி முன்னிலை
மும்பை வான்கடே மைதானத்தில் கடந்த 10-ம் தேதி தொடங்கிய இறுதிப்போட்டியில் டாஸ் வென்ற விதர்பா அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதல் இன்னிங்சை தொடங்கிய மும்பை 224 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.
இதனையடுத்து முதல் இன்னிங்சை தொடங்கிய விதர்பா, மும்பை அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் 105 ரன்களில் சுருண்டது.
பின்னர் 119 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்சை தொடங்கிய மும்பை 418 ரன்கள் குவித்து ஆல் அவுட் ஆனது.
இதன் மூலம் 528 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இமாலய இலக்கை நோக்கி களமிறங்கிய விதர்பா அணி நேற்று 4-வது நாள் முடிவில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 248 ரன்கள் அடித்திருந்தது.
கேப்டன் அக்சய் வாட்கர் 56 ரன்களுடனும், ஹர்ஷ் துபே 11 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.
வாட்கர் – ஷர்ஷ் ஜோடி அபாரம்!
இந்த நிலையில் இன்று தொடங்கிய 5வது மற்றும் கடைசி நாள் ஆட்டத்தில் 290 ரன்கள் அடித்தால் வெற்றி என்று விதர்பா அணியும், 5 விக்கெட்டுகள் எடுத்தால் வெற்றி தங்களுக்கே என்று மும்பை அணியும் களமிறங்கின.
மதிய உணவு இடைவேளை வரை கேப்டன் வாட்கர் மற்றும் ஷர்ஷ் இருவரும் விக்கெட் இழக்காமல் 85 ரன்கள் குவித்தனர். இதனால் விதர்பா அணியின் வெற்றி இலக்கும் 205 ரன்களாக குவிந்தது.
உணவு இடைவேளையில் மீண்டெழுந்த மும்பை
ஆனால் மதிய உணவு இடைவேளைக்கு பிறகு ஆக்ரோஷத்துடன் களமிறங்கிய மும்பை அணி பந்துவீச்சை தாக்குபிடிக்க முடியாமல் விதர்பா அணியின் பேட்டிங் வரிசை சீட்டுக்கட்டாய் சரிந்தது.
சதம் அடித்த உற்சாகத்துடன் இருந்த வாட்கரை (102) எல்.பி.டபிள்யூ செய்து வெளியேற்றினார் தனுஷ் கோட்டியன். அதற்கு அடுத்த ஓவரிலே அரைசதம் அடித்த ஹர்ஷ் துபேவை(65) ஆட்டமிழக்க செய்தார் துஷார் தேஷ்பாண்டே.
இவர்களை தொடர்ந்து வந்த மற்ற 3 வீரர்களும் ஒற்றை இலக்க ரன்களில் பெவிலியன் திரும்ப, விதர்பா அணியின் 368 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.
மும்பை அணி தரப்பில் அதிகபட்சமாக தனுஷ் கோட்டியன் 4 விக்கெட்டுகளும், துஷார் தேஷ்பாண்டே மற்றும் முஷீர் கான் தல 2 விக்கெட்டுகளும் கைப்பற்றினர்.
மும்பையின் 42-வது ரஞ்சி கோப்பை
இதன்மூலம் ரஹானே தலைமையிலான மும்பை அணி 169 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றியுடன், தங்களது 42வது ரஞ்சி கோப்பையை கைப்பற்றி உள்ளூர் கிரிக்கெட்டில் மீண்டும் தனது ஆதிக்கத்தை நிலை நாட்டியுள்ளது.
இதுவரை நடந்த 89 ரஞ்சி டிராபி தொடர்களில், 48 முறை இறுதிப்போட்டிக்கு முன்னேறிய மும்பை, 42 முறை சாம்பியன் பட்டம் வென்றுள்ளது.
மும்பைக்கு அடுத்தபடியாக, கர்நாடகா 8 முறையும், டெல்லி 7 முறையும் இந்த ரஞ்சி கோப்பையை வென்றுள்ளது. தமிழ்நாடு இதுவரை 2 முறை மட்டுமே ரஞ்சி கோப்பையை தன்வசமாக்கியுள்ளது.
கடைசியாக 2015–16 ஆண்டு மும்பை அணி ரஞ்சி கோப்பையை வென்றிருந்த நிலையில், சுமார் 7 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் அந்த கோப்பையை தனது வசம் ஆக்கியுள்ளது.

ஆட்டநாயகன்… தொடர் நாயகன் யார்?
இப்போட்டியில், பேட்டிங்கில் 142 ரன்கள் சேர்த்து, பந்துவீச்சில் 2 விக்கெட்களை கைப்பற்றிய முஷீர் கான், ‘ஆட்ட நாயகன்’ விருதை வென்றார்.
இந்த தொடரில் ஒரு சதம், 5 அரை சதங்களுடன் பேட்டிங்கில் 502 ரன்கள் குவித்து, பந்துவீச்சில் ஒரு 5 விக்கெட் ஹால் உட்பட 29 விக்கெட்களை வீழ்த்தி, ஒரு ஆல்-ரவுண்டர் ஆட்டத்தை வெளிப்படுத்திய தனுஷ் கோடியன் ‘தொடர் நாயகன்’ விருதை கைப்பற்றினார்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிறிஸ்டோபர் ஜெமா, மகிழ்
Heatwave: இந்த ‘மாவட்டத்துல’ தான் சூரியன் ரொம்ப உக்கிரமா இருக்காம்!
Ambika: ‘அமைதியாக இருங்கள்’… குஷ்பூவிற்கு ‘பதிலடி’ கொடுத்த அம்பிகா