மாட்டுப்பொங்கல் நாளான இன்று உலகப்புகழ் பெற்ற பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டிகள் தொடங்கியது.
தமிழகம் முழுவதும் நேற்று அறுவடைத் திருநாளான தைப் பொங்கல் திருநாள் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. தை இரண்டாம் நாளான இன்று மாட்டுப் பொங்கல் கொண்டாடப்படுகிறது.
மதுரை மாவட்டத்தில் பொங்கல் பண்டிகையையொட்டி பிரபல ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் அவனியாபுரத்தில் நேற்று (ஜனவரி 15) ஜல்லிக்கட்டு நடைபெற்றது.
இந்நிலையில் இன்று (ஜனவரி 16) பாலமேடு ஜல்லிக்கட்டு தொடங்கியுள்ளது. மஞ்சமலை ஆறு திடலில் நடைபெறும் இந்தப் போட்டியைத் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கொடியசைத்துத் தொடங்கி வைக்க இருந்தார்.
துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வருகையில் தாமதம் ஏற்பட்டதால், காலை 7 மணிக்குத் தொடங்க இருந்த போட்டி காலை 9 மணிக்குத் தொடங்கியது. துணை முதலமைச்சர் வரத் தாமதமானதால் போட்டிகள் முன்னதாகவே தொடங்கப்பட்டன. காலதாமதமாக வந்த துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கொடி அசைத்து ஜல்லிக்கட்டுப் போட்டியை தொடங்கி வைத்தார்
மதுரை மாவட்ட ஆட்சியர் பிரவீன் குமார், காவல் துறை கண்காணிப்பாளர் அரவிந்த் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.களமிறக்கப்படும் வீரர்கள் மற்றும் காளைகளுக்கு உடற்தகுதி பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு, உறுதிமொழி ஏற்புடன் நிகழ்ச்சி தொடங்கியது. முதலில் ஊர் கோயில் காளைகள் வாடிவாசலில் இருந்து வரிசையாக அவிழ்த்து விடப்பட்டன.
இந்த ஆண்டு பாலமேடு ஜல்லிக்கட்டுக்கு ஆயிரக்கணக்கான காளைகளும், நூற்றுக்கணக்கான மாடுபிடி வீரர்களும் ஆன்லைன் மூலம் பதிவு செய்திருந்தனர். கடும் போலீஸ் பாதுகாப்புடன், மருத்துவக் குழுக்கள் தயார் நிலையில் உள்ளன. சீறிப்பாயும் காளைகளையும், தைரியமாக அடக்கும் வீரர்களையும் காண ஆயிரக்கணக்கான பார்வையாளர்கள் குவிந்துள்ளனர்.
நேற்று அவனியாபுரத்தில் தொடங்கிய ஜல்லிக்கட்டுத் தொடரின் இரண்டாம் நாள் இன்று பாலமேடுட்டில் நடைபெற்று வருகிறது. நாளை (ஜனவரி 17) உலகப் புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.
