”முத்திரைத் தாளுக்கு வித்தியாசம் தெரியாதவர் ஐபிஎஸ் ஆ?” : திமுக எம்.பி விமர்சனம்!

Published On:

| By christopher

dmk mp wilson attack annamalai on stamp paper

”முத்திரைத் தாளுக்கு வித்தியாசம் தெரியாத ஒருவர் எப்படி கோவை மக்களுக்காக நாடாளுமன்றத்தில் தன்னை பிரதிநிதித்துவப்படுத்த முடியும்?” என்று  அண்ணாமலையை திமுக எம்பி வில்சன் விமர்சித்துள்ளார்.

தமிழ்நாட்டில் உள்ள 39 தொகுதிகளிலும் மக்களவைத் தேர்தலுக்கான வேட்பு மனுக்கள் பரிசீலனை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று (மார்ச் 28) நடைபெற்றது.

கோவை மக்களவை தொகுதி பாஜக வேட்பாளர் அண்ணாமலை வேட்பு மனு தாக்கலில் விதிமீறல் உள்ளதாக கூறி திமுக, அதிமுக மற்றும் நாம் தமிழர் கட்சியினர் தேர்தல் அலுவலரான மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி மற்றும் அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். எனினும் அண்ணாமலை வேட்புமனு ஏற்றுக்கொள்ளப்பட்டதாக தேர்தல் அலுவலர் அறிவித்தார்.

முத்திரை தாள் விதிமீறல்!

இதுதொடர்பாக அதிமுக மற்றும் நாம் தமிழர் தரப்பினர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் “தேர்தல் ஆணையத்தின் விதிமுறைகளின்படி நீதிமன்றம் கட்டணம் அல்லாத முத்திரைதாளில் வேட்பு மனு தாக்கல் வேண்டும். ஆனால் அண்ணாமலை நீதிமன்ற பணிகளுக்காக பயன்படுத்தப்படும் முத்திரைதாளில் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளார்.  இது அப்பட்டமான விதி மீறல். எனவே அண்ணாமலையின் வேட்பு மனு பரிசீலனையை நிறுத்தி வைக்க மாவட்ட தேர்தல் அலுவலரிடம் வலியுறுத்தினோம். ஆனால் அவரது மனுவை தேர்தல் அலுவலர் ஏற்றுக்கொண்டதாக அறிவித்துள்ளார். இதுகுறித்து மாநில தேர்தல் அணையத்தில் புகார் செய்யப்படும்” என்று தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில் அண்ணாமலையின் வேட்பு மனு சர்ச்சை குறித்து திமுக எம்.பி.வில்சன் கடுமையாக விமர்சித்துள்ளார்.

இவரென்ன  ஐபிஎஸ் அதிகாரி?

தனது எக்ஸ் தளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், “தமிழ்நாட்டில் உள்ள ஒரு அரசியல்வாதி, மற்றவர்களை “UPSC தேர்வு எழுதுங்கள்” என்று சவால் விடுகிறார். மேலும் தன்னை ஒரு IPS அதிகாரி என்று அடிக்கடி அவர் பெருமை பேசுகிறார்.

ஆனால் நீதிமன்றம் கட்டணம் அல்லாத முத்திரைத்தாளுக்கும், நீதிமன்ற பணிகளுக்காக பயன்படுத்தப்படும் முத்திரைதாளுக்கும் வித்தியாசம் தெரியவில்லை என்றால் அவரென்ன  ஐபிஎஸ் அதிகாரி?

இப்படிப்பட்டவர் எப்படி கோவை மக்களுக்காக நாடாளுமன்றத்தில் தன்னை பிரதிநிதித்துவப்படுத்த முடியும்? ஒரு முத்திரைத் தாளைக் கூட பிரித்து பார்க்க முடியாத அவர், சட்டங்கள் மற்றும் கொள்கைகளை இயற்றுவதில் எப்படி திறம்பட பங்களிக்க முடியும்?” என்று திமுக எம்.பி.வில்சன் கேள்வி எழுப்பியுள்ளார்.

தேர்தல் அலுவலர் விளக்கம்!

இதற்கிடையே அண்ணாமலை வேட்புமனு ஏற்புக்கு எதிரான புகார்களுக்கு  தேர்தல் அலுவலர் கிராந்தி குமார் பாடி விளக்கம் அளித்துள்ளார். அவர் “அண்ணாமலை 3 வேட்பு மனுக்களை தாக்கல் செய்துள்ளார். ஒன்றில் ’Indian Court Fee’ பத்திரம் மூலமும், மற்ற இரண்டில் ‘Indian Non Judicial’ பத்திரம் மூலமும் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளார். அதில் ஒரு வேட்பு மனு சரியாக இருந்ததால், அண்ணாமலையின் வேட்பு மனு ஏற்கப்பட்டுள்ளது” என்று அவர் தெரிவித்துள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

கிறிஸ்டோபர் ஜெமா

மீண்டும் சீட் ஒதுக்க மறுத்த பாஜக… கைவிட்டு போன பிலிபித் : வருண் காந்தி ரியாக்சன்!

சொத்துக்குவிப்பு வழக்கு விசாரணை : அமைச்சர் ஐ பெரியசாமி கோரிக்கை நிராகரிப்பு!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share