சிபிஐ சோதனை நிறைவுபெற்ற நிலையில் நாளை செய்தியாளர்களை சந்திக்க உள்ளதாகவும், அப்போது தான் சொல்ல போகும் தகவல் அனைவரையும் தூக்கிவாரி போடும்” என்று பொன்மாணிக்க வேல் தெரிவித்துள்ளார்.
கடந்த 2005 ஆம் ஆண்டு திருநெல்வேலி மாவட்டம் பழவூர் கோயிலில் 13 ஐம்பொன் சிலைகள் திருடுபோயின. இதில் 6 சிலைகள் விருதுநகர் மாவட்டம் ஆலப்பட்டியில் மீட்கப்பட்டன.
அப்போது கடத்தப்பட்ட சிலைகளை சர்வதேச கும்பலுடன் சேர்ந்து வெளிநாடுகளில் கோடிக்கணக்கில் விற்க உதவியதாக புகார் எழுந்தது. இந்த வழக்கில் சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு ஐஜியாக இருந்த பொன் மாணிக்கவேல் விசாரணை மேற்கொண்டார்.
அவரது விசாரணையின் அடிப்படையில், துணை காவல் கண்காணிப்பாளராக இருந்த காதர் பாஷா, சிறப்பு உதவி காவல் ஆய்வாளராக இருந்த சுப்புராஜ் ஆகியோர் கைது செய்யப்பட்டு டிஸ்மிஸ் செய்யப்பட்டனர்.
இதற்கு எதிராக சென்னை உயர் நீதிமன்றத்தில் காதர் பாஷா வழக்கு தொடர்ந்தார். அந்த மனுவில், “திருநெல்வேலி பழவூர் சிலை கடத்தல் வழக்கில் தொடர்புடைய தீனதயாளனை தப்பிக்க வைக்க, அவருடன் சேர்ந்து பழிவாங்கும் நோக்கில் தன் மீது பொன்.மாணிக்கவேல் பொய் வழக்குப் பதிவு செய்திருப்பதாகவும், அவர் மீது சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்” என்று கோரினார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, “பொன்.மாணிக்கவேல், காதர் பாஷா ஆகிய இருவரும் ஒருவர் மீது ஒருவர் குற்றச்சாட்டுகளை வைத்துள்ளனர். சிலை கடத்தல் தொடர்பான உண்மை வெளிவர சிபிஐ விசாரணைதான் சரியாக இருக்கும். எனவே, நீதிமன்றத்தின் தனிப்பட்ட அதிகாரத்தைப் பயன்படுத்தி இந்த வழக்கை சிபிஐ விசாரிக்க வேண்டும்” என்று உத்தரவிட்டார்.
அதன் தொடர்ச்சியாக நீதிமன்ற உத்தரவின் பேரில் சென்னை நீலாங்கரை பாலவாக்கம் காமராஜர் சாலையில் வசிக்கும் முன்னாள் சிலைக்கடத்தல் தடுப்பு பிரிவு ஐஜி பொன் மாணிக்கவேல் வீட்டில் சிபிஐ அதிகாரிகள் இன்று (ஆகஸ்ட் 10) காலை முதல் சோதனை நடத்தினர்.
பல்வேறு நாடுகளுக்கு கடத்தப்பட்ட சிலைகளை மீட்க ரெய்டு நடத்தியவரின் வீட்டிலேயே ரெய்டு நடைபெற்றது அரசியல் மற்றும் அதிகாரிகள் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சுமார் 7 மணி நேரமாக நடைபெற்ற சோதனை மாலையில் நிறைவு பெற்ற நிலையில் பொன்மாணிக்கவேல் தனது வீட்டின் முன்பாக செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.
அப்போது அவர், “என் மேலே ஓராயிரம் வழக்குகள் உள்ளன. நான் சாகும்வரை என்னை விசாரித்து கொண்டே இருப்பார்கள். ஓய்வு பெற்ற பிறகும் பல்வேறு கோவில்களில் காணாமல் போன விக்ரகங்கள் குறித்து புகார் அளித்துள்ளேன்.
எனது நேர்மைக்கு களங்கம் விளைவிக்காமல், முன்னாள் டிஎஸ்பி (காதர் பாட்சா) அளித்த புகாரின் பேரில் இன்று எனது வீட்டில் சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தினார்கள்.
என் மீது புகாரளித்த காதர் பாட்சா இதுவரை சிலை கடத்தியவர்களில் ஒருவரை கூட வெளிநாட்டில் இருந்து கைது செய்து அழைத்து வரவில்லை.
ஓய்வு பெற்ற பிறகு இன்று வரை நான் எந்த கட்சியிலும் சேரவில்லை. இனியும் சேர விருப்பமில்லை. தெய்வசத்தியமாக என்மீது ஊழல் புகாரோ, பெண்கள் மீதான அத்துமீறல் புகாரோ இல்லை. என்னை களங்கப்படுத்துவதற்காகவே என்மீது வழக்கு தொடர்ந்துள்ளார்கள். சிபிஐ சோதனை தொடர்பாக நீதிமன்றத்தை நாடுவேன்.
நாளை செய்தியாளர்களை சந்திக்க இருக்கிறேன். அங்கு முக்கியமான தகவலை சொல்வேன். அது அனைவரையும் தூக்கி வாரி போடும்” என்று பொன்மாணிக்க வேல் தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிறிஸ்டோபர் ஜெமா
வினோத் போகத்துக்கு வெள்ளி கிடைக்குமா? : இன்று இரவு தீர்ப்பு!
திருச்செந்தூரில் கடலோரத்தில் செந்தில்நாதன் நிகழ்த்திய அதிசயம்! அந்த பெண் இப்போ ஹேப்பி!
Comments are closed.