நாடு திரும்பிய இந்திய வீரர்கள்: பிரதமர் விருந்து!

Published On:

| By indhu

டி20 உலகக்கோப்பையை வென்ற இந்திய அணி வீரர்கள் இன்று (ஜூலை 4) அதிகாலை தனிவிமானம் மூலம் டெல்லி விமான நிலையம் வந்தடைந்தனர்.

நாடு திரும்பிய இந்திய அணி

2024ஆம் ஆண்டிற்கான டி20 உலகக்கோப்பையின் இறுதிப்போட்டியில் இந்திய அணி 7 ரன்கள் வித்தியாசத்தில் தென்னாப்பிரிக்கா அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது. இதனால், 2வது முறையாக இந்திய அணி டி20 உலகக்கோப்பையை கைப்பற்றியது.

உலகக்கோப்பை இறுதிப்போட்டி நடைபெற்ற மேற்கிந்திய தீவுகளின் பார்படாஸ் நகரில் திடீரென புயல் உருவானது. இதையடுத்து, இந்திய அணி வீரர்கள் நாடு திரும்புவதில் சிக்கல் ஏற்பட்டது.

இதனால் அங்கு விமான சேவைகள் முற்றிலும் பாதிக்கப்பட்டு, விமான நிலையம் மூடப்பட்டது. இதன் காரணமாக, இந்திய அணியினர் நாடு திரும்பும் பயணம் 3 நாட்கள் தள்ளிப்போனது.

தனிவிமானம் மூலம் இந்தியா வருகை

இந்நிலையில், பார்படாஸில் உள்ள இந்திய அணியினரை தனிவிமானம் மூலம் இந்தியா அழைத்து வருவதற்கான ஏற்பாடுகள் பிசிசிஐ சார்பில் மேற்கொள்ளப்பட்டது. அதன்படி, நேற்று (ஜூலை 3) மாலை பார்படாஸ் விமான நிலையத்தில் இருந்து இந்திய அணி வீரர்கள் மற்றும் பத்திரிக்கையாளர்கள் என அணியில் இடம்பெற்றவர்கள் அனைவரும் தனிவிமானம் மூலம்  தங்களது பயணத்தை தொடங்கினர்.

சுமார் 16 மணிநேர பயணத்திற்கு பின்னர் இன்று (ஜூலை 4) அதிகாலை டி20 உலகக்கோப்பையை வென்ற இந்திய அணி வீரர்கள் டெல்லி விமான நிலையத்தை வந்தடைந்தனர்.

The Indian team returned home: From the PM meeting to the appreciation ceremony!

இந்திய அணியின் வருகைக்காக டெல்லி விமான நிலையத்தில் அதிகாலை முதல் காத்திருந்த ரசிகர்கள் வீரர்களை உற்சாகமாக வரவேற்றனர்.

மேலும், “இந்தியா, இந்தியா” என முழக்கங்களை எழுப்பினர். இந்திய வீரர்கள் தங்கவுள்ள ஐடிசி மவுரியா நட்சத்திர ஓட்டலிலும் பல்வேறு வரவேற்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. குறிப்பாக டி20 உலகக் கோப்பை வடிவில் கேக் செய்யப்பட்டு, அதில் இந்திய அணி வீரர்களின் புகைப்படங்கள் பொறிக்கப்பட்டு இருந்தது.

முன்னதாக, இந்திய அணி வீரர்களான ரோகித் சர்மா, ஹர்திக் பாண்டியா மற்றும் சூர்யகுமார் யாதவ் உள்ளிட்டோர் ஓட்டல் வாசலில் நடனம் ஆடி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.

பிரதமர் மோடியுடன் இந்திய அணி வீரர்கள் சந்திப்பு

டி20 உலகக்கோப்பையை வென்ற இந்திய அணி வீரர்கள் பிரதமர் மோடியை இன்று (ஜூலை 4)  அவரது இல்லத்தில் நேரில் சந்தித்து வாழ்த்துக்களை பெற்றனர். இதற்காக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பாராட்டு விழாவில் இந்திய அணி வீரர்களுடன் இணைந்து பிரதமர் மோடி காலை உணவருந்தவுள்ளார். இந்த விழாவில், இந்திய அணியில் இடம்பெற்ற 17 வீரர்களையும் பிரதமர் மோடி கெளரவிக்கிறார்.

மும்பையில் பேரணி

அதன் பின்னர், இந்திய கிரிக்கெட் அணியின் வீரர்கள் விமானம் மூலம் மும்பை வருகிறார்கள். மும்பையில் உள்ள நாரிமன் பாயிண்ட் பகுதியில் இருந்து வான்கடே மைதானம் வரை திறந்தவெளியில் இந்திய அணி வீரர்கள் பிரம்மாண்ட பேரணியில் ஈடுபட உள்ளனர்.

வான்கடே மைதானத்தில் இன்று (ஜூலை 4) மாலை 5 மணிக்கு இந்திய அணி வீரர்களுக்கான பாராட்டு விழா நடைபெறுகிறது.  இந்த பாராட்டு விழாவில், உலகக்கோப்பையை வென்ற இந்திய அணிக்கு பிசிசிஐ சார்பில் ஏற்கனவே அறிவிக்கப்பட்ட ரூ.125 கோடி பரிசுத்தொகை காசோலை வழங்கப்படுகிறது.

இதையடுத்து, இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா, டி20 உலகக்கோப்பையை முறையாக பிசிசிஐயிடம் வழங்குகிறார்.

இந்து

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

Share Market : இன்று முதலீட்டாளர்கள் கவனிக்க வேண்டிய முக்கிய பங்குகள் என்ன?

சட்டென உச்சம் தொட்ட தங்கம், வெள்ளி விலை – எவ்வளவு தெரியுமா!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share