நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகளின் படி தேசிய ஜனநாயகக் கூட்டணி பெரும்பான்மை பெற்று மீண்டும் பிரதமராக மோடி பதவியேற்க இருக்கிறார்.
இந்த முறை தேசிய ஜனநாயகக் கூட்டணியில் ஆந்திராவை சேர்ந்த தெலுங்கு தேச கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடுவும் , பிகார் முதல்வர் நிதீஷ் குமாரும் முக்கிய தலைவர்களாக இடம் பெற்றுள்ளனர்.
இவர்கள் இருவரையும் இந்தியா கூட்டணிக்கு வருமாறு பகிரங்கமான அழைப்புகள் விடுக்கப்பட்டு வரும் நிலையில்… அவர்களோ தொடர்ந்து தேசிய ஜனநாயக கூட்டணியில் தான் அங்கம் வகிக்கிறார்கள்.
இத்தகைய அரசியல் சூழ்நிலையில் இந்தியா கூட்டணி கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக டெல்லி சென்ற திமுக தலைவரும் தமிழ்நாடு முதலமைச்சருமான ஸ்டாலின், ஜூன் ஐந்தாம் தேதி டெல்லி விமான நிலையத்தில் சந்திரபாபு நாயுடுவை சந்தித்தார்.
இருவரும் பரஸ்பரம் தேர்தல் வெற்றிக்காக வாழ்த்துக்களை பரிமாறிக் கொண்டனர்.
இதுகுறித்து தனது சமூக தள பக்கத்தில், “தலைவர் கலைஞரின் நீண்ட கால நண்பரான தெலுங்கு தேச தலைவர் சந்திரபாபு நாயுடு அவர்களை சந்தித்து தேர்தல் வெற்றிக்கு வாழ்த்துக்களை தெரிவித்தேன்.
அவர் மத்திய அரசில் முக்கிய பங்காற்றுவார். தென் மாநிலங்களுக்காக வாதாடுவார் நமது உரிமைகளுக்காக போராடுவார் என்று நம்புகிறேன்” என்று குறிப்பிட்டிருந்தார் ஸ்டாலின்.
சந்திரபாபு நாயுடுவும் தமிழ்நாட்டில் ஸ்டாலினுடைய முழுமையான தேர்தல் வெற்றிக்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்து இருக்கிறார்.
ஏற்கனவே சந்திரபாபு நாயுடுவை இந்தியா கூட்டணிக்கு அழைப்பதில் ஸ்டாலினுடைய முயற்சியும் இருக்கும் நிலையில்… இரு தலைவர்களும் டெல்லியில் சந்தித்துக் கொண்டது இரு தரப்பிலும் விவாதமாக இருக்கிறது.
இது குறித்து திமுகவின் சீனியர்கள் சிலரிடம் பேசிய போது,
“நாயுடுவை தேர்தல் முடிவுகள் வெளிவந்த நாளில் இருந்தே திமுக தரப்பில் தொடர்பு கொண்டு இந்தியா கூட்டணிக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.
ஆனாலும் இப்போதைக்கு அவர் தேசிய ஜனநாயக கூட்டணியில் தான் இருக்கிறார்.
2019 – 24 மோடி ஆட்சி எதிர்க்கட்சிகள் மீது மூர்க்கத்தனமான தாக்குதல்களை நடத்திய ஆட்சி. வருமானவரித்துறை, சிபிஐ, அமலாக்கத்துறை உள்ளிட்ட மத்திய அரசின் விசாரணை ஏஜென்சிகளை அரசியல் ஆயுதங்களாக பயன்படுத்தியது.
இந்தியா முழுவதும் எதிர்க்கட்சிகள் பாதிக்கப்பட்டது போல தமிழ்நாட்டில் திமுக இதனால் கடுமையாக பாதிக்கப்பட்டது.
செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டார், பொன்முடி அமலாக்கத்துறை விசாரணைக்கு அழைக்கப்பட்டார், மணல் குவாரிகள் விவகாரத்தில் தமிழ்நாட்டு அரசு அதிகாரிகள் விசாரணைக்கு அழைக்கப்பட்டனர், அமைச்சர் துரைமுருகனை குறி வைத்து இந்த விவகாரத்தை அமலாக்கத்துறை தீவிர படுத்தியது.
இப்படிப்பட்ட எதிர்க்கட்சிகளை குறிவைக்கும் தாக்குதல்கள் இந்த மோடி ஆட்சியில் அவ்வளவு வீரியமாக இருக்காது என்று கருதுகிறோம்.
சந்திரபாபு நாயுடு இது போன்ற அரசியல் ரீதியான பழிவாங்குதல்களை செய்வதற்கு மோடியை அனுமதிக்க மாட்டார் என்று நம்புகிறோம்.
சேலத்தில் ஒரு முறை நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய போது, ’கலைஞர் தான் எனது அரசியல் குரு’ என்று சொன்னவர் சந்திரபாபு நாயுடு.
இப்போதும் எங்கள் தலைவர் ஸ்டாலினோடும் திமுகவோடும் அவருக்கு நல்ல புரிதல் இருக்கிறது.
அவர் அதிகாரத்தில் இல்லாத போதும் இந்த புரிதலும் நட்பும் எங்களுக்கிடையே தொடர்ந்து வந்திருக்கிறது.
கடந்த ஐந்தாண்டுகள் ஆந்திராவில் ஜெகன்மோகன் ரெட்டி ஆட்சியில் இருந்த போதும் அவரோடு திமுக பெரியளவு நட்பு பாராட்டவில்லை. சந்திரபாபு நாயுடு உடன் தான் எங்கள் உறவு தொடர்ந்து நீடித்து வருகிறது.
இந்த வகையில் இப்போது அமைகிற மோடி ஆட்சியில் மாநில உரிமைகளையும் அரசியல் ரீதியாக மாநில கட்சிகள் நசுக்கப்படுவதையும் சந்திரபாபு நாயுடு தடுப்பார் என்று நாங்கள் உறுதியாக நம்புகிறோம்” என்று தெரிவித்தார்கள்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
– வேந்தன்
அஜித்துடன் நடிக்கும் பிரேமலு நடிகர்.. குட் பேட் அக்லி அப்டேட்!
தேயிலை மகசூல் அதிகரிப்பு : தோட்டங்களிலேயே தேக்கமடையும் நிலை… காரணம் என்ன?
கால்பந்தில் இருந்து கண்ணீருடன் ஓய்வு பெற்ற இந்திய ஜாம்பவான் சுனில் சேத்ரி
Comments are closed.