ஆளுநர் ஆர்.என்.ரவி தலைமையில் உதகையில் உள்ள ராஜ்பவனில் இன்று (மே 27) காலை தொடங்கி துணை வேந்தர்கள் மாநாடு நடைபெற்று வருகிறது.
தமிழ்நாடு மட்டுமின்றி இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் செயல்படும் பல்கலைக் கழகங்களின் துணை வேந்தர்களும் இதில் கலந்துகொண்டுள்ளனர்.
இன்று காலை மாநாட்டை துவக்கி வைத்து பேசிய ஆளுநர் ஆர்.என்.ரவி, “நான் தமிழக ஆளுநராக பதவி ஏற்கும் போது தமிழ்நாட்டு பல்கலைக் கழகங்களின் நிலை மோசமாக இருந்தது. ஒவ்வொரு பல்கலைக் கழகங்களும் தொடர்பின்றி தனித்தனியாக செயல்பட்டு தரம் குறைந்து காணப்பட்டன. இந்த குறைபாடுகளை சரி செய்யவே துணை வேந்தர்கள் மாநாடு.
புதிய கல்விக் கொள்கைதான் கல்வித் துறையின் எதிர்காலம்” என்று பேசினார்.
இந்நிலையில் தமிழ்நாடு அரசு உயர் கல்வித் தொடர்பாக ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளது.
இந்தியாவிலேயே தமிழ்நாடுதான் உயர் கல்வியில் சிறந்து விளங்குவதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
“அகில இந்திய உயர்கல்வி ஆய்வு நிறுவனத்தின் (AISHE) கூற்றுப்படி உயர்கல்வி மாணவர் சேர்க்கையில் (GER) 49% பெற்று இந்திய அளவில் தமிழ்நாடு முதலிடம் பெற்றுள்ளது. இது அகில இந்திய சராசரி சதவிகிதத்தைக் காட்டிலும் இரண்டு மடங்கு அதிகம்.
புதுமை பெண் திட்டத்தின் மூலம் , 2 லட்சத்து 73 ஆயிரம் மாணவிகளுக்கு மாதம் 1,000 ரூபாய் வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டு பயனடைகின்றனர்.
இந்தியாவிற்கே வழிகாட்டிடும் இந்த புதுமைப் பெண் திட்டத்தினால் அரசுப் பள்ளிகளில் பயின்று கல்லூரிகளில் சேரும் மாணவியர்களின் எண்ணிக்கை 34 சதவீதம் அதிகரித்துள்ளது.
நான் முதல்வன் திட்டம் மூலம், இந்த திட்டத்தின் வாயிலாக இதுவரையில் 27 இலட்சம் மாணவர்கள் பயனடைந்துள்ளனர். இத்திட்டத்தினால் பயிற்சி பெற்ற 1 இலட்சத்து 84 ஆயிரம் இளைஞர்களில் 1 இலட்சத்து 19 ஆயிரம் பேர் வேலைவாய்ப்புப் பெற்று மகத்தான சாதனை நிகழ்த்தப்பட்டுள்ளது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் அதில், “ரூ.3,014 கோடியில் உயர் சிறப்பு மையங்களாகும் உயர் கல்வி நிறுவனங்கள், தொழில் கல்லூரிகளில் 7.5 சதவிகித இட ஒதுக்கீட்டில் சேர்ந்துள்ள மாணவர்களுக்கு கல்விக் கட்டணம், விடுதி கட்டணம் மற்றும் போக்குவரத்து கட்டணத்திற்காக 213.37 கோடி ரூபாய்,
முதல் தலைமுறை பட்டதாரி மாணாக்கர்களுக்கு கல்விக் கட்டணச் சலுகைக்காக ரூ.1,000 கோடி, ஆண்டுதோறும் 10,000 மாணவர்களுக்குத் தொழில் திறன் மேம்பாடு,
முதலமைச்சரின் ஆராய்ச்சி மானியத் திட்டம், ரூ.1,000 கோடியில் காமராஜர் கல்லூரி மேம்பாட்டுத் திட்டம், ரூ.150 கோடி செலவில் உயர்கல்வி நிறுவனங்களில் டிஜிட்டல் மாற்றம், 1,750 கௌரவ விரிவுரையாளர்கள் நியமனம், ரூ.63 கோடியில் சென்னை மாநிலக் கல்லூரியில் முத்தமிழறிஞர் கலைஞர் அரங்கம்” என அரசின் திட்டங்களும் அதற்காக எவ்வளவு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது என்பது குறித்தும் குறிப்பிட்டப்பட்டுள்ளன.
உதகையில் ஆளுநர் துணை வேந்தர் மாநாடு நடத்தி வரும் அதே வேளையில், பட்டியல் போட்டு உயர் கல்வித் துறை குறித்த அறிக்கையை தமிழக அரசு வெளியிட்டிருப்பது முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
பிரியா
IPL 2024 Final: சேப்பாக்கம் மைதானத்தில் “CSK, CSK” என கோஷமிட்ட ஷாருக்கான்
முதல்வர் குறித்து அவதூறு பேச்சு : சி.வி.சண்முகம் நீதிமன்றத்தில் ஆஜர்!