கலைஞர் புத்தகத்துடன் ஆளுநரை வரவேற்றார் சபாநாயகர்

Published On:

| By Pandeeswari Gurusamy

தமிழ்நாடு சட்டசபையின் இந்த ஆண்டிற்கான முதல் கூட்டத்தொடர் இன்று காலை 9.30 மணிக்கு தொடங்க உள்ளது. இன்று நடக்கும் கூட்டத்தில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி உரை நிகழ்த்துவார். சட்டசபைக்கு வந்த ஆளுநருக்கு கலைஞர்மு.கருணாநிதி வரலாறு எ புத்தகத்தை அளித்து சபாநாயகர் அப்பாவு வரவேற்றார்.

தமிழ்நாடு சட்டசபைக்கு வருகை தரும் ஆளுநருக்கு மரபுப்படி வரவேற்பு அளிக்கப்படுகிறது. அவரை அவைக்குள் சபாநாயகர் அப்பாவு மற்றும் சட்டசபை முதன்மைச் செயலாளர் சீனிவாசன் அழைத்து வருவார்கள். சபாநாயகர் இருக்கையில் ஆளுநர் அமர்வார்; அருகில் உள்ள இருக்கையில் சபாநாயகர் அமர உள்ளார்.தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்ட பிறகு ஆளுநர் ஆங்கிலத்தில் உரையை வாசிப்பார். பேரவைத் தலைவர் அப்பாவு தமிழில் ஆளுநர் உரையை வாசிப்பார். இந்நிலையில், தமிழக அரசு அளிக்கும் உரையை ஆளுநர் ஆர்.என். ரவி முழுமையாக வாசிப்பாரா என்பது போன்ற கேள்விகள் எழுந்துள்ளன.

ADVERTISEMENT

ஏனெனில், கடந்த 2022ஆம் ஆண்டுக்குப் பிறகு தமிழக அரசு அளித்த உரையை ஆளுநர் ரவி முழுமையாக வாசிக்கவில்லை.கடந்த 2023ஆம் ஆண்டு சட்டப்பேரவை கூட்டத் தொடரில் ஆளுநர் ரவி உரையாற்றியபோது, மகளிர் முன்னேற்றம், மதச்சார்பின்மை, சுயமரியாதை, பெரியார், அம்பேத்கர், கலைஞர் ஆகிய வார்த்தைகளைத் தவிர்த்தார். இதை அடுத்து, தமிழக அரசு உரையில் அந்த வார்த்தைகள் இடம்பெறும் என்பதை முதல்வர் மு.க. ஸ்டாலின் சட்டப்பேரவையில் கூறியதால், ஆளுநர் பாதியிலேயே அவையை விட்டு வெளியேறினார்.

இதைத் தொடர்ந்து, 2024ஆம் ஆண்டு சட்டப்பேரவை கூட்டத் தொடரிலும் தமிழ்த்தாய் வாழ்த்தைத் தொடர்ந்து தேசிய கீதம் பாடப்படவில்லை எனக் கூறி, ஆளுநர் உரையை வாசிக்காமல் வெளியேறினார். பின்னர், 2025ஆம் ஆண்டும் முதலில் தேசிய கீதம் பாடப்படவில்லை எனக் கூறி ஆளுநர் வெளியேறினார்.

தமிழகத்தில் அடுத்த ஓரிரு மாதங்களில் சட்டப்பேரவைத் தேர்தல் வரவுள்ள நிலையில், இந்த ஆண்டு ஆளுநர் தனது உரையை முழுமையாக வாசிப்பாரா என்ற எதிர்பார்ப்பு அரசியல் வட்டாரத்தில் எழுந்துள்ளது.

ADVERTISEMENT
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share