கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் விபத்துக்குள்ளானதில் இதுவரையிலும் 233 பயணிகள் பலியாகியுள்ளனர். மேலும், பலி எண்ணிக்கை உயர வாய்ப்புள்ளதால் அச்சம் ஏற்பட்டுள்ளது.
இந்த விபத்தில் 900க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். காயம் அடைந்தவர்கள் கட்டாக் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
ஒடிசா மாநிலம் பாலாசோர் மாவட்டம் அருகேவுள்ள பாஹாநாகா பஜார் ரயில் நிலையம் அருகே நேற்று ஜூன் 2ஆம் தேதி இரவு 7.20 மணிக்கு மூன்று ரயில்களின் விபத்து நேர்ந்தது.
விபத்து குறித்து தகவலறிந்ததும் தேசிய, மாநில பேரிடா் மீட்புப் படையைச் சோ்ந்த வீரர்கள் உள்பட உள்ளூர் மக்களும் இணைந்து மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
மீட்கப்பட்ட பயணிகள் பாலசோா் மாவட்ட மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலும், சோரோ, கோபால்பூா் மற்றும் காந்தாபடா பகுதிகளில் அமைந்துள்ள மருத்துவமனைகளிலும் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனா்.
இந்நிலையில், ரயில் விபத்தில் சிக்கியிருந்த பெட்டிகளிலிருந்து 207 உடல்கள் மீட்கப்பட்ட நிலையில், தற்போது உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 233ஆக அதிகரித்துள்ளது. விபத்து நடந்த இடத்தில் விடியவிடிய மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன.
மு.வா.ஜெகதீஸ் குமார்