திமுக கூட்டணியில் CPI இனி இல்லை – மு.வீரபாண்டியன் திட்டவட்டம்

Published On:

| By Pandeeswari Gurusamy

CPI

கோவையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில நிர்வாகக் குழு கூட்டம் இன்று இரண்டாவது நாளாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் மு. வீரபாண்டியன் இன்று (ஜூன் 11) செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அப்போது அவர் கூறுகையில், “திமுக, அதிமுக, தவெக ஆகிய கட்சிகள் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியை ஒரு ஜனநாயக சக்தியாகத்தான் பார்க்கின்றன” என்றார்.

ADVERTISEMENT

திமுக கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி உள்ளதா, இல்லையா? என்ற செய்தியாளர்களின் கேள்விக்கு, ” திமுக கூட்டணியில் காங்கிரஸ் இல்லை. காங்கிரஸ் இருக்கும் ‘இந்தியா’ கூட்டணியில் நாங்கள் இருக்க மாட்டோம் என்று திமுக சொல்கிறது. விசிக, ஐயூஎம்எல் ஆகிய கட்சிகள் அங்கு இல்லை. இந்தச் சூழலில், ஒரு தேர்தல் அணிச் சேர்க்கையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி இடம்பெறுவதற்கான சூழல் இப்போது இல்லை. எனவே, இதைக் கருத்தில் கொண்டுதான் இத்தகைய முடிவை நாங்கள் எடுக்கிறோம். அவ்வாறு முடிவெடுக்கும் போது எப்போதும் ஜனநாயக சக்திகளை நாங்கள் கடந்து செல்ல மாட்டோம். அங்கே பகை முரண்களுக்கு எந்த இடமும் இல்லை; இதை நாங்கள் மீண்‘டும் தெளிவுபடுத்துகிறோம். எங்களுக்கான அரசியல் பகை முரண் கொண்ட ஒரே இயக்கம் பாஜக மட்டும்தான். சூழல் கனிந்து வரும்போது, உள்ளாட்சி, சட்டமன்ற அல்லது நாடாளுமன்றத் தேர்தல்கள் வரும் நேரத்தில், அந்தந்தச் சூழ்நிலைக்கு ஏற்ப நாங்கள் கூடிப் பேசி அணிச் சேர்க்கைகள் குறித்து சிந்திப்போம்; கட்சி அதற்கான முடிவை எடுக்கும். ஆனால், நாங்கள் எப்போதும் இடதுசாரிகளுடன் இணைந்தே பயணிப்போம். இடதுசாரிகளுடன் அணிசேரும் ஜனநாயக சக்திகளுடன் கைகோர்த்து, நாட்டின் நலனுக்காக நாங்கள் தொடர்ந்து பயணிப்போம்.

இன்றைய சூழலில் திமுக கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி இடம்பெற இயலாது. இதைவிடப் பட்டவர்த்தனமாக இதைச் சொல்ல முடியாது. தமிழகத்தில் எந்தவொரு இயக்கமும் திமுகவையோ, அதிமுகவையோ எளிதில் கடந்து சென்றுவிட முடியாது. அவற்றை இன்றைக்கும் நாங்கள் ஒரு ஜனநாயக சக்தியாகத்தான் மதிப்பீடு செய்கிறோம். அதேபோல், தமிழக வெற்றிக் கழகம் ஒரு புதிய ஜனநாயக சக்தியாகப் பிறப்பெடுத்திருக்கிறது. அதற்கு ஆதரவளிக்க வேண்டியது எங்களது அரசியல் கடமை; அந்த வகையில் நாங்கள் ஆதரவு அளிக்கிறோம்.

ADVERTISEMENT

அடுத்து வரும் 5 தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் தவெக வெற்றிபெறும் பட்சத்தில், ஆட்சி அமைக்க இடதுசாரிகளின் தயவு தேவை இல்லை என்ற சூழல் உருவாகும். அப்போது நீங்கள் மீண்டும் தனித்து விடப்படுவீர்களா?” என்ற கேள்விக்கு அவர் அளித்த பதில்:
“எங்களைப் பொறுத்தவரை நாங்கள் அளிக்கும் ஆதரவு என்பது அமைப்பாகக் கூடி, அரசியல் ரீதியாக எடுத்த முடிவு. அது ‘தயவு’ அல்ல; நாங்கள் எப்போதும் அதைத் தயவு என்று சொல்வதில்லை, அது எங்கள் அரசியல் கடமை அது. எங்கள் தயவு யாருக்கும் தேவையில்லை. எங்களை எப்போதும் தனித்து விட முடியாது. நூறாண்டுகாலத் தேர்தல் அரசியலில் தோற்றுக்கொண்டிருக்கும் இயக்கம் கம்யூனிஸ்ட் கட்சிதான். ஆனால், எங்களால் தனித்தும் நிற்க முடியும்; கம்யூனிஸ்டுகளால் மட்டுமே களம்காண முடியும்.

சட்டமன்றத்திலோ, நாடாளுமன்றத்திலோ இடம்பெறாவிட்டாலும் எங்கள் குரல் தெருக்களில் ஒலிக்கும். தெருக்களையே நாடாளுமன்றமாக கூட்டும் கொள்கையும், கோட்பாடும், அமைப்பும் எங்களிடம் உள்ளது. எனவே, உழைக்கும் மக்கள் உள்ளவரை, கருத்தைக் கருத்தால் சந்திக்கும் மக்கள் இருக்கும் வரை, நல்ல அறிஞர்கள் இந்த மண்ணில் இருக்கும் வரை, தமிழ் கூறும் நல்லுலகில் கம்யூனிஸ்ட் பேரியக்கங்களை யாராலும் அழித்துவிட முடியாது. எங்களின் உறுதியும் அடித்தளமும் உழைக்கும் மக்கள்தான். அவர்களின் கோரிக்கையோடு நாங்கள் பின்னிப்பிணைந்திருக்கிறோம். அந்த வகையில், நாங்கள் சட்டமன்றத்திலோ, நாடாளுமன்றத்திலோ இல்லாவிட்டாலும் எங்கள் குரல் உங்களின் செவியில் தொடங்கி, நாடாளும் பிரதமரின் செவி வரை ஒலித்துக்கொண்டே இருக்கும்.”

ADVERTISEMENT

“மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி எதற்காக ஆரம்பிக்கப்பட்டது? அந்த லட்சியத்தை அடைந்துவிட்டீர்களா?” என்ற செய்தியாளர்களின் கேள்விக்கு, “இல்லை, ‘இந்தியா‘ கூட்டணியும் ஒரு மதச்சார்பற்ற கூட்டணிதான். உலகிலேயே வேறு எந்த நாட்டிலும் இல்லாத பன்முகத்தன்மை கொண்ட நாடு இந்தியா. இந்த பன்முகத்தன்மையின் அடித்தளமே மதச்சார்பின்மைதான். அந்த மதச்சார்பின்மையைக் காப்பதில்தான் தேசத்தின் எதிர்காலம் அடங்கியுள்ளது. எனவே, மதச்சார்பின்மையைக் காக்கும் அந்த விழுமிய அரசியல் கொள்கை மற்றும் கோட்பாடுகளுக்காக இடதுசாரிகள் முன்னிலும் களமாடுவோம், குரல் எழுப்புவோம்; அதுதான் தேசத்தின் எதிர்காலம்.

இதைத் தவிர பாஜக மீது எங்களுக்கு என்ன பகை உள்ளது? தனிப்பட்ட முறையில் எந்தவொரு வெறுப்போ, பகையோ இல்லை. இந்தியாவின் பன்முகத்தன்மையைச் சிதைக்கக் கூடாது என்பதற்காகத்தான் பாஜகவை எதிர்த்து நாங்கள் களமாடுகிறோம். அந்த வகையில் இது எங்களின் கொள்கை முடிவு. சமரசம் செய்யாமல் பிரகடன படுத்தப்பட்ட கொள்கை. இதற்காக நாங்கள் வரும் காலங்களில் ஐனநாயக சக்திகளோடு இணைந்து களமாடுவோம் ” என்று அவர் கூறினார்.

Photo of author
Pandeeswari Gurusamy

ஊடகத்துறையில் கடந்த 2010-ஆம் ஆண்டு முதல் பணியாற்றி வரும் பாண்டீஸ்வரி குருசாமி, 'தீக்கதிர்' நாளிதழ் & இணையதளம் மற்றும் 'இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ்' ஆகிய நிறுவனங்களில் பணியாற்றியவர். அரசியல் மற்றும் சமூகம் சார்ந்த செய்திகளைத் தொடர்ந்து எழுதி வரும் இவர், தற்போது 'மின்னம்பலம்' இணைய இதழில் பணியாற்றி வருகிறார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share