நடிகரும் தமிழக வெற்றிக் கழகத் தலைவருமான விஜய்யின் கடைசி படமாகக் கூறப்படும் ‘ஜனநாயகன்’ திரைப்படத்தை கே.வி.என். புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.
இப்படத்திற்கு தணிக்கைச் சான்றிதழ் கோரி விண்ணப்பிக்கப்பட்ட நிலையில், மதம் மற்றும் பாதுகாப்புப் படை தொடர்பான காட்சிகள் இடம்பெற்றுள்ளதாகக் கூறி, மறு ஆய்வுக் குழு பரிசீலனைக்கு தணிக்கை வாரியம் பரிந்துரை செய்தது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கே.வி.என். புரொடக்ஷன்ஸ் நிறுவனம் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது. அந்த மனுவை விசாரித்த தனி நீதிபதி பி.டி. ஆஷா, மறு ஆய்வுக் குழு பரிந்துரை செல்லாது எனக் கூறி, ‘ஜனநாயகன்’ படத்திற்கு உடனடியாக U/A தணிக்கைச் சான்றிதழ் வழங்க உத்தரவிட்டார்.
இந்த உத்தரவை எதிர்த்து தணிக்கை வாரியம் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தது. இதனால் பொங்கலை முன்னிட்டு ஜனவரி 9ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்த விஜய் நடித்த ஜனநாயகன் படம் வெளியாகவில்லை.
தணிக்கை வாரியம் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவில் ஜனவரி 27-ஆம் தேதி தீர்ப்பளித்த தலைமை நீதிபதி எம்.எம். ஸ்ரீவஸ்தவா மற்றும் நீதிபதி ஜி. அருள்முருகன் ஆகியோர் கொண்ட அமர்வு, இப்படத்திற்கு U/A சான்றிதழ் வழங்க வேண்டும் என்ற தனி நீதிபதியின் உத்தரவை ரத்து செய்தது. மேலும், தணிக்கை வாரியத்துக்கு தனது தரப்பு விளக்கத்தை அளிக்க போதுமான கால அவகாசம் வழங்கப்படவில்லை எனக் கூறி, வழக்கை மீண்டும் தனி நீதிபதி விசாரணைக்கு அனுப்பி வைத்தது.
இந்நிலையில், மத்திய தணிக்கை வாரியம் தற்போது உச்ச நீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல் செய்துள்ளது. அதில், ‘ஜனநாயகன்’ படக்குழு மேல்முறையீடு செய்தால், தங்களின் கருத்தை கேட்காமல் எந்த உத்தரவும் பிறப்பிக்கக் கூடாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் ஜனநாயகன் படம் வெளியாவதில் சிக்கல் தொடர்ந்து வருகிறது.
