பெண் பத்திரிகையாளரை அவதூறாக பேசியதாக தொடரப்பட்ட எஸ்.வி.சேகர் மீதான வழக்கை ரத்து செய்ய முடியாது என்று சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
2018ஆம் ஆண்டு தமிழக ஆளுநராக பன்வாரிலால் புரோகித் இருந்தபோது பெண் பத்திரிகையாளர் ஒருவர் அவமதிக்கப்பட்டது தொடர்பாக ஆளுநர் வருத்தம் தெரிவித்திருந்தார். இந்நிலையில் பெண் பத்திரிகையாளர் குறித்து எஸ்.வி.சேகர் தனது சமூக வலைதள பக்கத்தில் அவதூறாக பதிவிட்டிருந்தார்.
இதுதொடர்பாக சென்னை மத்திய குற்றப்பிரிவில் எஸ்.வி.சேகர் மீது புகார் அளிக்கப்பட்டது. பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டம் உள்பட 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. தொடர்ந்து, தேசியக் கொடியை அவமதித்ததாகவும் எஸ்.வி.சேகர் மீது வழக்குத் தொடரப்பட்டது.
இந்த வழக்குகளை ரத்து செய்ய வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் எஸ்.வி.சேகர் மனு தாக்கல் செய்திருந்தார்.
சமூக வலைதளங்களில் தான் பதிவிட்ட கருத்தை டெலிட் செய்துவிட்டு மன்னிப்பு கேட்டுவிட்டதாகவும், மீண்டும் நீதிமன்றத்திலும் மன்னிப்பு கேட்பதாகவும் எஸ்.வி.சேகர் தரப்பில் வாதிடப்பட்டது. காவல் துறை தரப்பில் எஸ்.வி.சேகர் விசாரணைக்கு ஆஜராவதில்லை என்று தெரிவிக்கப்பட்டது.
இந்த வழக்கு விசாரணையின் போது தவறான, அவதூறான கருத்தை கூறிவிட்டு உடனே மன்னிப்பு கோரிவிட்டால் தனது செயல்பாடுகளில் தவறில்லை என்றாகிவிடுமா? என்று நீதிமன்றம் கேள்வி எழுப்பியிருந்தது.
இந்நிலையில் இந்த வழக்கு இன்று (ஜூலை 14) நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது பெண் பத்திரிக்கையாளரை அவதூறாக பேசியதாக பதியப்பட்ட எஸ்.வி. சேகர் மீதான வழக்கை ரத்து செய்ய முடியாது. சென்னை சிறப்பு நீதிமன்றம் 6 மாதத்தில் இந்த வழக்கை விசாரித்து முடிக்க வேண்டும் என்று நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் உத்தரவிட்டார்.
பாதிப்பு ஏற்படுத்தியதை மன்னிப்பு மூலம் சரிசெய்துவிட முடியாது. தமக்கு வந்த தகவலை மற்றவர்களுக்கு பகிர்பவரே அதனால் ஏற்படும் பாதிப்புக்கு பொறுப்பானவர் என்றும் நீதிபதி தெரிவித்தார்.
தேசிய கொடியை அவமதித்ததாக தொடரப்பட்ட எஸ்வி சேகர் மீதான வழக்கை நீதிபதி ரத்து செய்தார்.
பிரியா