வேளாங்கண்ணியில் வேற்று மதத்தைச் சேர்ந்தவரை பெண் காதல் திருமணம் செய்து கொண்டதால் ஆத்திரம் அடைந்த பெண்ணின் குடும்பத்தினர் மாப்பிள்ளை மற்றும் அவரது குடும்பத்தினரை சரமாரியாக வெட்டிவிட்டு தப்ப முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
பெங்களூர் நாகவாரா பகுதியை சேர்ந்த டேனியல் என்பவரது மகன் ராகுல் மற்றும் அதே பகுதியை சேர்ந்த ராஜாராவ் என்பவரின் மகள் கீர்த்தனா. இவர்கள் ஆகிய இருவருக்கும் பள்ளிப் பருவத்தில் இருந்து ஒருவரை ஒருவர் விரும்பி வந்ததாக கூறப்படுகிறது.
தனியார் கல்லூரியில் கீர்த்தனா BBA படித்து வரும் நிலையில், ராகுல் அவரது தந்தையோடு இணைந்து Fabrication வேளையில் ஈடுபட்டு வருகிறார்.
இவர்கள் இருவரும் இருவேறு மதங்களை சேர்ந்தவர்கள். இந்நிலையில் கீர்த்தனா குடும்பத்தினர் இந்த காதலுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இந்நிலையில் ராகுல் கீர்த்தனா இருவரும் நேற்று முன்தினம் மாப்பிள்ளை குடும்பத்தினருடன் சேர்ந்து பெங்களூரில் இருந்து வந்து வேளாங்கண்ணி தேவாலயத்தில் திருமணம் செய்து கொண்டனர்.
திருமணம் செய்த ராகுல் – கீர்த்தனா தம்பதியினரும், ராகுலின் உறவினர்களும் வேளாங்கண்ணியில் உள்ள தனியார் விடுதியில் தங்கி இருந்தனர்.
இந்த சூழலில் கீர்த்தனாவின் குடும்பத்தினர், ராகுலின் குடும்பத்தினரை தொடர்பு கொண்டு திருமணத்திற்கு சம்மதம் தெரிவிப்பதாவும், பெண் இருக்கும் இடத்தை தெரிவிக்குமாறும் கேட்டதால் நம்பி அவர்களிடம் வேளாங்கண்ணியில் தாங்கள் இருந்த இடத்தை தெரிவித்துள்ளனர்.
இதைத்தொடர்ந்து வேளாங்கண்ணிக்கு வந்த பெண்ணின் குடும்பத்தினர் பேச்சுவார்த்தை நடத்துவது போல் பேசி உள்ளனர். திடீரென ராகுலின் குடும்பத்தினரை சரமாரியாக வெட்டி உள்ளனர். இதைத்தொடர்ந்து மணப்பெண் கீர்த்தனாவை காரில் வலுக்கட்டாயமாக ஏற்றிச் சென்றனர்.
இதில் படுகாயம் அடைந்த மாப்பிள்ளை ராகுல், அவரது தாய், தந்தை உள்ளிட்ட 15க்கும் பேர் ஒரத்தூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் ராகுல் உள்ளிட்ட 4 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.
தகவலறிந்து விரைந்து வந்த நாகப்பட்டினம் போலீசார் தனிப்படை அமைத்து விசாரணை நடத்தி வந்தனர்.
கீர்த்தனா குடும்பத்தினர் தப்பிச் சென்ற சிசிடிவி காட்சிகள், பயணித்த காரின் வாகன எண்ணை வைத்து விசாரணை நடத்தினர். இதில் பெண்ணை அழைத்துக் கொண்டு பெங்களூருவிற்கு தப்பிச் சென்றது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து சேத்தியாத்தோப்பு அருகே சென்ற காரை மடக்கி பெண்ணின் குடும்பத்தை சேர்ந்த 9 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
வேறுமதத்தை சேர்ந்தவரை பெண் காதலித்து திருமணம் செய்த ஆத்திரத்தில் மாப்பிள்ளை மற்றும் அவரது குடும்பத்தினரை தாக்கியது தெரிய வந்துள்ளது.
இந்நிலையில் கைது செய்யப்பட்டவர்களை இன்று கீழ்வேளூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுத்தி சிறையில் அடைக்க போலீசார் திட்டமிட்டுள்ளனர்.
