நெற்றியில் குங்குமம் வைக்கும்போது மணமகனின் கை நடுங்கியதால் மணப்பெண் திருமணத்தை நிறுத்திய சம்பவம் பரபரப்பை ஏற்பட்டது. The bride stopped the wedding because the groom’s hand was shaking!
பீகாரின் கைமூர் பகுதியைச் சேர்ந்த பவன்குமாருக்கு நேற்று (ஜூன் 9) ஒரு திருமணம் நடைபெற இருந்தது. அப்பகுதியில் திருமணத்தின் போது ‘சிந்தூர் தானம்’ (மணமகளின் நெற்றியில் குங்குமம் பூசுதல்) முக்கியச் சடங்காக கருதப்படுகிறது.
அதன்படி நேற்று நடைபெற்ற திருமணத்திற்காக மணமகன் பவன்குமார் வீட்டார் மாப்பிள்ளையுடன் உற்சாகமாக ஊர்வலம் வந்தனர். அதுவரை எல்லாமே நன்றாக நடந்தது.
ஆனால் தொடர்ந்து நடைபெற்ற சடங்கின் போது குங்குமம் பூச கைகளை உயர்த்தியபோது மணமகனின் கை நடுங்கத் தொடங்கியதைக் கண்டு மணப்பெண் திடீரென பதறினார். அதன்பின்னர் மணமகனை ’பைத்தியம்’ என்று கூறியதுடன், திருமணத்தை நிறுத்தும்படி தனது பெற்றோரிடம் கதறி அழுதார்.
மணமகனின் குடும்பத்தினர் மணமகளை திருமணத்திற்கு சமாதானப்படுத்த முயன்றனர். எனினும் தனது முடிவில் உறுதியாக நின்று திருமணத்தை தொடர மறுத்துவிட்டார். இதனால் அந்த பகுதியில் பதற்றம் ஏற்பட்டது.
இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த பபுவா காவல் நிலைய போலீசார், இரு குடும்பத்தினரையும் வருமாறு கூறி பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது மணமகன் வீட்டார், ”ஏற்கெனவே துவாரச்சார் (வரவேற்பு விழா) மற்றும் பர்னாத் (சிந்தூருக்கு முன் சடங்குகள்) ஆகியவை முடிந்துவிட்டன. ஆனால் குங்குமம் நடுங்கும் போது பதற்றத்தில் ஏற்பட்ட கை நடுக்கத்தை சுட்டிக் காட்டி திருமணத்தை மணப்பெண் நிறுத்திவிட்டார். இது எங்கள் குடும்பத்திற்கு ஏற்பட்ட மிகப்பெரிய அவமானம் என குற்றஞ்சாட்டினர்.
அதற்கு மணப்பெண் வீட்டார், ”திருமணம் நின்றது, நின்றதாகவே இருக்கட்டும். அவர்களுக்கு நாங்கள் கொடுத்த வரதட்சணை பணத்தைத் திருப்பித் தர கூறுங்கள்” எனக் கேட்டார்.
அதற்கு மணமகனின் தந்தை, ”திருமணத்திற்கு ரூ.1 லட்சம் வரதட்சணை வேண்டும் என பேசியிருந்தோம். அதில் எங்களுக்கு ரூ. 90,000 மட்டுமே கொடுத்தார். இதுவரை நகைகளுக்கு ரூ.30,000, புடவைகளுக்கு ரூ.20,000, டிஜே இசைக்கு ரூ.10,000, மீதமுள்ள பணத்தை போக்குவரத்துக்கு செலவிட்டோம். எனவே எல்லாப் பணமும் ஏற்கனவே செலவாகிவிட்டது. எங்களிடம் வேறு பணமில்லை” என கூறினார்.
இதனையடுத்து போலீசார் மத்தியில் நடந்த பேச்சுவார்த்தையில் நீண்ட நேரமாகியும் எந்த முடிவும் எட்டவில்லை. இதனால் வேறு வழியின்றி திருமணம் நிறுத்தப்பட்டு, இரு வீட்டாரும் தனித்தனியாக பிரிந்து தங்கள் வீட்டிற்கு சென்றனர்.