காலை உணவை நாம் சரியாக நிர்வகித்தாலே எளிமையாக எடையைக் குறைத்து ஆரோக்கியமாக மாறலாம்.
உடல் எடை வேகமாக அதிகரித்துவிடுகிறது. ஆனால் எடையை குறைப்பது மிக கடினமாக உள்ளது என்பது உண்மைதான். ஆனால் சரியான நடைமுறைகளை பின்பற்றும் போது எடை இழப்பு சாத்தியமாகிறது. பல்வேறு எடை இழப்பு டிப்ஸ்கள் சோஷியல் மீடியாக்களில் பகிரப்பட்டு வருகின்றன. நம் உடலுக்கு எது தேவையோ அதை மட்டும் பின்பற்ற வேண்டும்.
எடை குறைப்புக்கு அதிக புரதச் சத்துக்கள் உள்ள தென்னிந்திய காலை உணவு வகைகளை காணலாம். இந்த உணவு வகைகளை எளிமையாக வீட்டிலேயே செய்து கொள்ளலாம்.
பன்னீர் கோதுமை தோசை
காலை உணவை அதிக புரதம் உள்ளதாக எடுத்துக் கொள்வது முக்கியம். சாதாரண அரிசி மாவு தோசையை விட கோதுமை மாவு மற்றும் பன்னீருடன் சேர்ந்த தோசை நமக்கு அதிக புரதச் சத்துக்களை தருகிறது. சைவ உணவு சாப்பிடுபவர்கள் இதை தாராளமாக எடுத்துக் கொள்ளலாம். நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய் மற்றும் கொத்தமல்லி ஆகியவற்றுடன் நொறுக்கப்பட்ட பன்னீரை கலந்து கோதுமை தோசை சுட்டு சாப்பிடலாம். இந்த தோசையில் 18 கிராம் புரதம் ,300 கலோரிகளையும் உள்ளது. இது எடை இழப்பு போதுமானதாக அமைகிறது
தினை ரொட்டி, வேகவைத்த முட்டை மசாலா
முட்டையில் புரோட்டின் நிறைந்துள்ளது. ஆனால் காலை உணவாக வெறும் முட்டையை மட்டும் எடுத்துக் கொள்வது கஷ்டம்தான். திணை ரொட்டிகளுடன் முட்டை எடுத்துக் கொள்வது சமநிலையான புரதத்தை நமக்கு தரும்.
கம்பு அல்லது திணை வகைகளை பயன்படுத்தி தோசையை விட கெட்டியான ரொட்டியை சுட்டுக்கொள்ளலாம். பிறகு வெங்காயம், தக்காளி மற்றும் நமக்கு பிடித்த மசாலா பொருட்களுடன் வேகவைத்த முட்டையை வதக்கி ரொட்டியுடன் சேர்த்து சாப்பிட்டால் சுவையாகவும் இருக்கும், ஆரோக்கியமானதும் கூட. இதில் 18 கிராம் புரதமும் 230 கலோரிகளும் மட்டுமே உள்ளன. தினைகளில் அதிக நார்ச்சத்து உள்ளதால் எளிதில் செரிமானம் ஆகும்.
ஓட்ஸ் பொங்கல்
சாதாரணமாகவே காலை உணவுகளில் பொங்கல் எல்லோருக்கும் பிடிக்கும். ஆனால் நெய், அரிசியில் செய்யப்படும் பொங்கல் அதிக கலோரிகளை உடையது. எனவே எடை இழப்பிற்கு இது தகுந்தது இல்லை. அரிசிக்கு பதிலாக ஒரு ஓட்ஸ் பொங்கல் செய்து சாப்பிடலாம். ஓட்ஸ் உடன் பாசிப்பருப்பு சேர்த்து பொங்கல் செய்துவிட்டு மிளகு, சீரகம், கறிவேப்பிலை மற்றும் ஸ்பூன் நெய் சேர்த்து தாளித்து சுவை கூட்டலாம். இதில் 250 கலோரிகள் மற்றும் 11 கிராம் புரதம் உள்ளது.
ராகி தோசை, வேர்க்கடலை சட்னி
சாதாரணமாக அரிசி மாவிற்கு பதிலாக ராகி மாவை பயன்படுத்தி ராகி தோசை சாப்பிடலாம். எனவே வேர்க்கடலை தேங்காயுடன் அரைத்த சட்னியுடன் சாப்பிடுவது ஒரு சமநிலையான புரதத்தை நமக்கு தரும். கொழுப்பைக் குறைப்பதில் கவனம் செலுத்தி உடலை வலுவாக்க கவனம் செலுத்துபவர்களுக்கு இது ஒரு ஊட்டச்சத்து நிறைந்த விருப்பமாகும்.
