2022ஆம் ஆண்டு மிகப்பிரமாண்டமாகத் தயாரிக்கப்பட்ட இந்தி படங்களே வசூலை அள்ளத் தலைகீழாக நின்று தண்ணீர் குடித்துக் கொண்டிருந்த சூழல். அந்த நேரத்தில், யாரும் எதிர்பார்க்காத வண்ணம் ஐநூறு கோடி ரூபாய் வசூலைத் தொட முனைந்தது ‘தி காஷ்மீர் பைல்ஸ்’. எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் வெளியான இப்படம், பிறகு பல தியேட்டர்களில் ‘ஹவுஸ்ஃபுல்’ ஆனது. அதற்குப் பின்னிருக்கும் அரசியல் காரணங்கள் சினிமா ரசிகர்களுக்குத் தேவையற்றது. அந்த படத்தில் இருந்த உள்ளடக்கம் திரையில் எப்படி வெளிப்பட்டிருந்தது என்பதுவே மிக முக்கியமானது. The Bengal Files Teaser
குறிப்பாக, கதை சொல்லலைத் தெளிவாகக் கையாண்டிருந்தது ‘தி காஷ்மீர் பைல்ஸ்’. அதனாலேயே, இயக்குனர் விவேக் ரஞ்சன் அக்னிஹோத்ரி நம் கவனம் ஈர்த்தார்.
அந்த படம் வெற்றியடைந்தபோதே, அடுத்ததாக ‘தி டெல்லி பைல்ஸ்’ என்ற படத்தை இயக்குவதாக அறிவித்தார். உடனே, ‘அந்த கதை 1984இல் டெல்லியில் நடந்த சீக்கிய படுகொலையைக் காட்டப்போகிறது’ என்று சொல்லி சில சீக்கிய அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்தன. The Bengal Files Teaser
சில மாதங்களுக்கு முன்னர், இந்த படத்தின் பெயரை ‘தி பெங்கால் பைல்ஸ்’ என்று மாற்றியிருப்பதாக அறிவித்தார் விவேக் ரஞ்சன் அக்னிஹோத்ரி. மேலும், இதன் கதை 1946இல் வங்காளத்தில் நடந்த கலவரத்தைப் பற்றியது என்று தெரிவித்தது படக்குழு.
இதோ, இப்போது அதன் டீசர் வெளியாகியிருக்கிறது. ‘காஷ்மீர் உங்களைக் காயப்படுத்தியிருந்தால், வங்காளம் உங்களை பயமுறுத்தும்’ என்ற வரிகளைத் தாங்கி வந்திருக்கிறது. The Bengal Files Teaser
’தி காஷ்மீர் பைல்ஸ்’ கதை நாயகன் மேற்கு வங்காளத்திற்கு வருவதாகவும், சுதந்திரப் போராட்ட காலத்தில் இருந்த நிலையே தற்போதும் அங்கு நிலவுவதாகவும் வருத்தப்படுவதாகத் தொடங்குகிறது டீசர். பிறகு, கடந்த காலத்தைக் காட்டுகிறது திரையில் ஓடும் பிம்பங்கள்.
2005இல் ‘சாக்லேட்’ படத்தில் தொடங்கிய விவேக்கின் திரைப் பயணம் இப்போது 20 ஆண்டுகளாகத் தொடர்கிறது. இடைப்பட்ட காலத்தில் திரை மொழியில் அவர் பல மடங்கு மெருகேறியிருக்கிறார் என்பதை உணர முடிகிறது. அந்த வகையில், இந்த படமும் சிறப்பான தொழில்நுட்ப மற்றும் நடிப்புக் கலைஞர்களின் பங்களிப்பைக் கொண்டிருப்பதை அறிய முடிகிறது.
என்ன, ’இதன் உள்ளடக்கம் அமைந்திருக்கும் விதம் எப்படியிருக்குமோ’ என்ற கவலையை இப்போதே ஏற்படுத்தியிருக்கிறது டீசர்.
இப்படம் வரும் ஆகஸ்ட் 15 அன்று வெளியாகவிருக்கிறது. ’வாழ்க்கைக்கான உரிமை’ என்ற டேக்லைனுடன் அசோக ஸ்தூபி பின்னணியில் ரத்தச் சிவப்பில் ஒளிர்கிறது ‘தி பெங்கால் பைல்ஸ்’ டைட்டில்.
ரசிகர்களின் கவனம் ஈர்ப்பது எப்படி என்பதை அறிந்து களமிறங்கியிருக்கிறது இப்படக்குழு. வரும் சுதந்திர தினத்தன்று அந்த கவன ஈர்ப்புக்கேற்ற காந்த சக்தியை உள்ளடக்கம் கொண்டிருக்கிறதா, அது முன்வைக்கிற கருத்தாக்கம் எப்படிப்பட்டது என்பது போன்ற கேள்விகளுக்கான பதில்கள் தெரியவரலாம்.