10 வயது சிறுமி ஒருவர் மது அருந்தி, புகை பிடிக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் பரவியதால், அதற்கு காரணமாக இருந்தவர்களை போலீசார் கைது செய்துள்ளனர்.
கடந்த மாதம் 10 வயது சிறுமி ஒருவர் மது அருந்துவது போலவும், பீடி பிடிப்பது போலவும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் பரவியது. இந்த வீடியோ சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
அந்த வீடியோ காட்சி குறித்து கிருஷ்ணகிரி மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தினர். விசாரணையில் அச்சிறுமி கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அருகே பெட்டமுகிளாலம் கிராமத்தைச் சேர்ந்த சிறுமி என்று தெரியவந்தது. சிறுமி மது அருந்துவதற்கும், பீடி பிடிப்பதற்கும் சிறுமி வசிக்கும் அதே பகுதியை சேர்ந்த சில இளைஞர்கள் தான் காரணம் என்று தெரிய வந்தது. அவர்களிடம் விசாரணை நடத்தியதில் சிறுமிக்கு மதுவை டம்ளரில் ஊற்றி கொடுத்து குடிக்க வைத்து, பீடியை புகைக்க சொல்ல வற்புறுத்தியதும் தெரியவந்தது.
இதனை தொடர்ந்து மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் சிவகாந்தி தேன்கனிக்கோட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் காவல் அதிகாரிகள்,இளைஞர்கள் சங்கையா, குமார், ரமேஷ், சிவராஜ், ருத்ரப்பா, அழகப்பன், ஆகியோரை நேற்று ( ஜூலை 22 ) கைது செய்தனர். மேலும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய பிறகு ஒசூரில் உள்ள சிறையில் அடைக்கப்பட்டனர்.
மேலும் இந்த வழக்கு தொடர்பாக சிவருத்ரப்பா, மல்லேஷ் ஆகிய இருவரை போலீசார் தேடி வருகின்றனர்.
மோனிஷா
