கிச்சன் கீர்த்தனா: தட்டைப்பயறு இளங்குழம்பு

Published On:

| By admin

செட்டிநாட்டு சமையலில் இளங்குழம்புக்குத் தனியிடம் உண்டு. இளங்குழம்பில் கொஞ்சமாகப் பயறு அல்லது பருப்பு சேர்த்துச் செய்வதால், அது சாம்பார் போன்று கெட்டியாகவும் இருக்காது; ரசம் அளவுக்கு நீர்த்தும் இருக்காது. ருசியோ குழம்பு போலவே இருக்கும். அதனால்தான் ‘இளங்குழம்பு’ என்று பெயர். இந்த தட்டைப்பயறு இளங்குழம்பு அனைவருக்கும் ஏற்றது. எளிதில் ஜீரணமாகக் கூடியது.

என்ன தேவை?

  • தட்டைப்பயறு – ஒரு கப்
  • சின்ன வெங்காயம் – 10
  • தக்காளி – ஒன்று
  • பூண்டு – 4 பல்
  • சாம்பார் பொடி – ஒரு டேபிள்ஸ்பூன்
  • புளி – சிறிய நெல்லிக்காய் அளவு (கரைத்துக் கொள்ளவும்)
  • உப்பு, எண்ணெய் – தேவைக்கேற்ப

தாளிக்க…

  • கடுகு, சீரகம், உளுந்து – தலா அரை டீஸ்பூன்
  • கொத்தமல்லி, கறிவேப்பிலை – சிறிதளவு

எப்படிச் செய்வது?

தட்டைப்பயறை வெறும் வாணலியில் நன்கு வாசனை வரும் வரை மிதமான சூட்டில் வறுத்து, குக்கரில் மூன்று விசில் வரும்வரை வேகவைத்துக் கொள்ளவும். ஒரு வாணலியில் எண்ணெய்விட்டு வெங்காயம், தக்காளி சேர்த்து வதக்கவும். வேகவைத்த தட்டைப்பயறு, புளிக்கரைசல், உப்பு, சாம்பார் பொடி, 2 கப் தண்ணீர் ஊற்றி, பூண்டை தட்டிப்போட்டுக் கொதிக்கவிடவும். பருப்பு நன்கு வெந்ததும் மற்றொரு வாணலியில் மீண்டும் எண்ணெய்விட்டு, தாளிப்புப் பொருள்களைத் தாளித்துக் கொதிக்கும் இளங்குழம்பில் சேர்த்து, கொதிக்கவைத்து கொத்தமல்லித்தழையைக் கிள்ளிப் போட்டு இறக்கவும்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share