நீதிபதி ஆனந்த வெங்கடேஷ் சூமோட்டோ செல்லும்: உச்ச நீதிமன்றம் அதிரடி-பொன்முடிக்கு பின்னடைவு!

Published On:

| By Aara

Supreme Court praises Ananda Venkatesh

சொத்துக்குவிப்பு வழக்கிலிருந்து அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது மனைவி விடுவிக்கப்பட்டதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்கை விசாரிப்பதை தடுக்க முடியாது என்று இன்று (நவம்பர் 6) உச்ச நீதிமன்றம் திட்டவட்டமாக தெரிவித்துவிட்டது. Supreme Court praises Ananda Venkatesh

Supreme Court praises Ananda Venkatesh

ADVERTISEMENT

தமிழ்நாடு உயர் கல்வித் துறை அமைச்சர் பொன்முடி மீதான சொத்துக் குவிப்பு வழக்கில் விடுதலை செய்து வேலூர் நீதிமன்றம் அளித்த தீர்ப்பை கடுமையாக விமரிசித்த உயர் நீதிமன்ற நீதிபதி ஆனந்த வெங்கடேஷ், தாமாக முன் வந்து இதுகுறித்து மீண்டும் விசாரிப்பது என முடிவு செய்தார்.

கடந்த ஆகஸ்டு 10 ஆம் தேதி  நீதிபதி ஆனந்த வெங்கடேஷ் இதை அறிவிக்க, தமிழ்நாடு அரசியல் வட்டாரம் அதிர்ந்தது.

ADVERTISEMENT

அதன் பின் பொன்முடியைப் போலவே அமைச்சர்கள் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ஆர்., தங்கம் தென்னரசு ஆகியோர் மீதான சொத்துக் குவிப்பு வழக்கு விடுதலைத் தீர்ப்பையும் மறு ஆய்வுக்கு எடுத்துக் கொண்டார் நீதிபதி. திமுகவைச் சேர்ந்தவர்கள் விடுதலையை மட்டும்தான் நீதிபதி மறு ஆய்வுக்கு எடுத்துக் கொள்வாரா என்ற விமர்சனங்களுக்குப் பிறகு… ஓபிஎஸ், வளர்மதி போன்ற அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மீதான சொத்துக் குவிப்பு வழக்கு விடுதலைத் தீர்ப்புகளும் மறு ஆய்வுக்கு உட்படுத்தப்படும் என்று அறிவித்தார்.

இந்த நிலையில் நீதிபதி ஆனந்த வெங்கடேஷ் சூமோட்டோவாக இதை எடுத்துக் கொண்டது குறித்து முதலில் உயர் நீதிமன்றத்தில் பொன்முடி முறையிட்டார். அப்போது நீதிபதி ஆனந்த வெங்கடேஷ், ‘நீங்கள் என்னிடம் ஏன் வருகிறீர்கள்? உச்ச நீதிமன்றம் செல்லலாமே?’ என்று கூறினார். இந்த நிலையில்  உச்ச நீதிமன்றத்தில் அமைச்சர் பொன்முடி, அவரது மனைவி விசாலாட்சி ஆகியோர் மேல் முறையீடு செய்தனர்.

ADVERTISEMENT

அந்த மனுவில், “அரசியல் காழ்ப்புணர்ச்சியின் காரணமாக சொத்துக்குவிப்பு வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் எங்களுக்கு தொடர்பில்லை. சொத்துக்குவிப்பு வழக்கில் முழு விசாரணையும் முடிந்து நாங்கள் விடுதலை செய்யப்பட்டுள்ள நிலையில் இந்த வழக்கு மீண்டும் ஏன் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட வேண்டும். தனி நீதிபதி தாமாக முன்வந்து எடுத்த வழக்கை ரத்து செய்ய வேண்டும்” என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

Supreme Court praises Ananda Venkatesh

இந்த மனு இன்று (நவம்பர் 6) தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தபோது- மனுதாரரான பொன்முடி, அவரது மனைவி சார்பில் மூத்த வழக்கறிஞர் கபில் சிபல் ஆஜராகியிருந்தார். அவரிடம் தலைமை நீதிபதி சந்திரசூட், இந்த வழக்கு உயர் நீதிமன்றத்தின் சிங்கிள் பெஞ்சில் நிலுவையில் உள்ளதை சுட்டிக்காட்டிய தலைமை நீதிபதி சந்திரசூட், மனுதாரர்கள் தங்கள் சட்டப்பூர்வ ஆதாரங்களை அங்கு எழுப்பலாம் என்று கூறினார்.

மேலும் பொன்முடி மீதான சொத்துக் குவிப்பு வழக்கின் விசாரணை விழுப்புரம் மாவட்ட நீதிமன்றத்தில் இருந்து வேலூர் மாவட்டத்துக்கு மாற்றப்பட்டது குறித்தும் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி கவலை தெரிவித்தார்.

“உயர் நீதிமன்றங்களில் ஆனந்த் வெங்கடேஷ் போன்ற நீதிபதிகள் இருப்பதற்கு கடவுளுக்குதான் நன்றி சொல்ல வேண்டும். தலைமை நீதிபதி விசாரணையை ஒரு மாவட்டத்திலிருந்து மற்றொரு மாவட்டத்திற்கு மாற்றுகிறார்.  விசாரணையை மாற்ற நிர்வாக அதிகாரம் இல்லை.  அதாவது சொத்துக் குவிப்பு வழக்கு வேறு மாவட்டத்துக்கு மாற்றப்பட்டு விசாரணை அவசரமாக நடந்து விடுதலை என தீர்ப்பளிக்கப்படுகிறது. இந்த விவகாரத்தில் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷின் அவதானிப்புகள் முற்றிலும் சரியானது” என்று தலைமை நீதிபதி கூறினார்.

மேலும், “ நீதிபதி ஆனந்த வெங்கடேஷ் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு நோட்டீஸ் மட்டுமே அனுப்பியுள்ளார். இந்த வழக்கு இன்னும் உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கிறது”என்பதையும் சுட்டிக் காட்டினார்.

அப்போது குறுக்கிட்ட மூத்த வழக்கறிஞர் கபில் சிபல், “உயர் நீதிமன்ற நீதிபதி ஆனந்த வெங்கடேஷ் தனது அப்சர்வேஷனில் பொன்முடி மீது மிகக் கடுமையான, அவருக்கு பாதகமான கருத்துகளை தெரிவித்த நிலையில்… இந்த விவகாரத்தில் அவர் நடத்தும் விசாரணை பயனற்றது” என்று  தெரிவித்தார்.

மேலும், “விசாரணை நீதிமன்றத்தின் தீர்ப்பை அவர் ரத்து செய்துள்ளார் என்பது மட்டுமல்ல… வழக்கு விசாரணையை மாற்றம் செய்த உத்தரவு என்பது விசாரணை நீதிமன்றத்தின் தீர்ப்பை ரத்து செய்வதற்கு எப்படி வழிவகுக்கும்? இதுபோன்ற நிர்வாக உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருக்கக் கூடாது என்று அவர் கூறுகிறார். அதற்கு நாங்கள் என்ன செய்ய முடியும்?” என்று கேள்வி எழுப்பினார் கபில் சிபல்.

இதையடுத்து உயர் நீதிமன்ற நீதிபதி ஆனந்த வெங்கடேஷின் உத்தரவின் செயல்பாட்டுப் பகுதியைச் சுட்டிக்காட்டிய தலைமை நீதிபதி சந்திரசூட்,

“உயர்நீதிமன்றத்தின் தனி நீதிபதியின் முன் இந்த வழக்கு நிலுவையில் உள்ளதால், அனைத்து வாதங்களையும் நீங்கள் அங்கே சென்று எழுப்பலாம்” என்று கூறினார்.

Supreme Court praises Ananda Venkatesh

பொன்முடி மனைவி விசாலாட்சி சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் முகுல் ரோத்தகி, “இந்த வழக்கு ஒரு மாவட்டத்தில் இருந்து மற்றொரு மாவட்டத்திற்கு மாற்றப்பட்டதற்கும் எங்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை. தலைமை நீதிபதியின் ஒப்புதலுடன் நிர்வாக நீதிபதி இடமாற்றம் செய்தார்” என்றார்.

அப்போது தலைமை நீதிபதி சந்திர சூட், “நீதிபதி ஆனந்த  வெங்கடேஷின் இந்த உத்தரவில் எந்த தவறும் இல்லை. நான் ஏற்கனவே கூறியது போல் ஆனந்த வெங்கடேஷ் போன்ற நீதிபதிகள் நீதித்துறைக்கு கிடைத்தமைக்கு கடவுளுக்கு நன்றி” என்று மீண்டும் கூறினார்.

இந்த நிலையில் இவ்வழக்கில் தன்னை இடையீட்டு மனுதாரராக பதிவு செய்திருந்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷண், “குற்றம் சாட்டப்பட்டவர்களுடன் மாநில அரசு ஒத்துழைக்கிறது. இந்த சொத்துக் குவிப்பு வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட பொன்முடி அமைச்சராக இருப்பதால் சிறப்பு அரசு வழக்கறிஞர் அல்லது அமிக்ஸ் கியூரியை நியமிக்க உச்ச நீதிமன்றமே உத்தரவிட வேண்டும்” என்று கோரிக்கை வைத்தார். Supreme Court praises Ananda Venkatesh

இந்த விவகாரத்தில் உயர்நீதிமன்றம் உரிய விசாரணை நடத்தும் என்று தலைமை நீதிபதி தெரிவித்தார்.

இதன் பின் தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வில் இடம்பெற்ற நீதிபதிகள் ஜே.பி. பர்திவாலா மற்றும் மனோஜ் மிஸ்ரா ஆகியோர் அடங்கிய அமர்வு, பின்வரும் உத்தரவை பிறப்பித்தது:

“தற்போதைய நிலையில் மனுக்கள்.மனுதாரர்கள் தங்களது தகுந்த அத்தனை முறையீடுகளையும் உயர் நீதிமன்ற தனி நீதிபதியிடம் வலியுறுத்தலாம். இப்போது நாங்கள் இந்த மனு மீது தெரிவித்த ஆட்சேபனைகள் குறித்து தனி நீதிபதி தகுதிகளின் அடிப்படையில் தன் சொந்த முடிவை எடுக்கலாம். எங்களின் கருத்துகள் இதில் தாக்கத்தை ஏற்படுத்த தேவையில்லை” என்று அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு அரசின் லஞ்ச ஒழிப்புத் துறையும் நீதிபதி ஆனந்த வெங்கடேஷ் தீர்ப்புக்கு எதிராக மேல் முறையீடு செய்திருந்தது. ஆனால் அந்த மனு இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவில்லை.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

வேந்தன்

தெலுங்கு நடிகருடன் மிருணாள் தாக்கூர் திருமணம்?

பாஜக தலையீடு… ஸ்டாலின் உரை புறக்கணிப்பு?: இலங்கை அரசு விளக்கம்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel

Comments are closed.

Share