தஞ்சை கலைஞர் பல்கலை. மசோதா: ஆளுநர் ரவியை சாடிய முதல்வர் ஸ்டாலின்!

Published On:

| By Minnambalam Desk

CM MK Stalin

தஞ்சாவூரில் கலைஞர் பெயரிலான புதிய பல்கலைக் கழகம் அமைப்பதற்கான சட்ட மசோதாவுக்கு 40 நாட்கள் ஆகியும் ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் கொடுக்காததை முதல்வர் ஸ்டாலின் கடுமையாக விமர்சித்துள்ளார். Thanjavur Kalaignar University Bill

தஞ்சாவூரில் இன்று ஜூன் 16-ந் தேதி நடைபெற்ற அரசு விழாவில் முதல்வர் ஸ்டாலின், ரூ.325. 96 கோடி செலவில் 2461 முடிவுற்ற பணிகளை திறந்து வைத்தார். மேலும் ரூ.309.48 கோடி மதிப்பீட்டில் 4127 புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார். 2,25,383 பயனாளிகளுக்கு ரூ.558. 43 மோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளையும் முதல்வர் ஸ்டாலின் வழங்கினார்.

நானும் டெல்டாக்காரன்

இந்த நிகழ்ச்சியில் முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது: காவிரி பிரச்சனையில் தமிழ்நாட்டின் உரிமையை நிலைநாட்டியது முத்தமிழறிஞர் கலைஞரின் தலைமையிலான தி.மு.க அரசுதான். தஞ்சையையும்-கலைஞரையும் பிரிக்கமுடியாது. அந்த வரிசையில்தான் நானும் டெல்டாக்காரன் என்ற உணர்வோடு இன்றைக்கு இங்கு வந்து இருக்கிறேன்.

டெல்டா அல்லாத விவசாயிகளுக்கும் சிறப்பு தொகுப்பு திட்டம்

டெல்டா அல்லாத மாவட்டங்களில் நெல் சாகுபடி விவசாயிகளுக்காக கார்- குறுவை – சொர்ணவாரி பருவத்துக்கான சிறப்புத் தொகுப்புத் திட்டம் செயல்படுத்தப்படும். மேலும் தமிழ்நாட்டில் உள்ள 8 லட்சம் விவசாயிகளுக்கும் இந்த சிறப்புத் தொகுப்பு திட்டம் வழங்கப்படும்.



தினமும் புலம்பும் எடப்பாடி பழனிசாமி

திராவிட மாடல் அரசின் திட்டங்களால் மக்கள் எவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கிறார்கள் என்பதை நீங்கள் கொடுக்கும் வரவேற்பை பார்க்கும் போது நன்றாக தெரிகிறது. இதை பொறுத்துக்கொள்ள முடியாத எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி தினமும் புலம்பிக் கொண்டு இருக்கிறார்.

கூட்டணி பிரச்சனையை மறைக்க அறிக்கை

தனது உட்கட்சி, கூட்டணி பிரச்சனையை மறைப்பதற்காக தினமும் அறிக்கை வெளியிட்டு அரசியல் செய்து வருகிறார் பழனிசாமி. இந்த அறிக்கையையாவது, உண்மையான நிலவரங்களை தெரிந்து கொண்டு வெளியிடுகிறாரா? என்றால் அதுவும் இல்லை. ’உங்கள் தொகுதியில் ஸ்டாலின்’ என மக்களிடம் பெறப்பட்ட மனுக்கள் என்ன ஆனது என்று கேட்கிறார்.

அரைவேக்காட்டுத்தனமாக அறிக்கை

உங்கள் தொகுதியில் முதலமைச்சர் துறையின் கீழ் 100 வது நாளில் 32,000 பேருக்கு பட்டா, 30,000 பேருக்கு ஓய்வூதியம்,10,000 குடும்பங்களுக்கு வீடுகள் வழங்கப்பட்டது. இது குறித்து அரசு சார்பில் பத்திரிக்கை செய்தி வெளியிடப்படுகிறது. பத்திரிகை, TV செய்திகளில் வருகிறது. சமூக ஊடகங்களில் வருகிறது. அப்போதும் செய்திகளை படிக்க மாட்டேன், பார்க்க மாட்டேன் என அடம் பிடித்துக் கொண்டு அரைவேக்காட்டுத்தனமாக அறிக்கை வெளியிட்டு வருகிறார் எடப்பாடி பழனிசாமி.

ஜூலை 15 முதல் ‘உங்களுடன் ஸ்டாலின்’

மக்களின் குறைகளை தீர்க்க, தமிழ்நாடு முழுவதும் ஜூலை 15 தொடங்கி ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டத்தின் கீழ் 10,000 முகாம்கள் தமிழ்நாடு முழுவதும் நடத்தப்படும். கலைஞர் மகளிர் உரிமைத் தொகைத் திட்டத்தில் விடுபட்ட தகுதியுள்ள பெண்களும் ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம்களில் விண்ணப்பிக்கலாம்.

உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு பின்னரும் மாறாத ஆளுநர் ரவி

தஞ்சாவூரில் கலைஞர் பெயரிலான புதிய பல்கலைக் கழகம் அமைப்பதற்கான சட்ட மசோதாவுக்கு 40 நாட்கள் ஆகியும் இன்னும் ஆளுநர் ஒப்புதல் கொடுக்காமல் இருந்து வருகிறார். உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு பிறகாவது ஆளுநர் மாறி இருப்பார் என்று பார்த்தால் அவர் இன்னும் மாறவில்லை.

உயர் கல்வி அமைச்சருக்கும் நேரம் தராத ஆளுநர்

உயர் கல்வி அமைச்சருக்கும் நேரம் கொடுக்க மறுக்கிறார். நேரம் கொடுத்தால் ஏதாவது கேட்பார்கள் என்பதற்கு பயந்து அவர் நேரம் கொடுக்க மறுக்கிறார். இதைவிட ஒரு ஆளுநருக்கு வேறு என்ன வேலை இருக்கிறது என தமிழ்நாட்டு மக்கள் கேள்வி கேட்கிறார்கள். இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் பேசினார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share