வன்முறை திரைப்படங்களை குழந்தைகள் பார்ப்பதால் அழிந்தே போகிறார்கள் என்று இயக்குனர் தங்கர் பச்சான் தெரிவித்துள்ளார்.
தமிழ் சினிமாவில் சமூகம் சார்ந்த மக்களுக்கான படங்களை இயக்குவதும், அந்தப் படத்தை தயாரிக்க தயாரிப்பாளரை முதலீடு செய்ய வைப்பதும் பெரும் போராட்டமாக இருக்கிறது என்று இயக்குநர்கள் காலங்காலமாக புலம்பி வருகின்றனர்.
அதனை ஒட்டுமொத்தமாக நேற்றையதினம் கொட்டித் தீர்த்தார் இயக்குநர் தங்கர்பச்சான். மண் சார்ந்த திரைப்படங்களையும், மசாலா படங்களையும் இயக்கி வெற்றி கண்ட மூத்த இயக்குநர் பாரதிராஜா, மசாலா படங்களை மட்டுமே இயக்கி வெற்றி பெற்ற கெளதம் வாசுதேவ் மேனன், ஆர்.வி.உதயகுமார் ஆகிய மூவரும் இருந்த திரைப்பட விழா மேடையில் மசாலா படங்களையும், அதனால் எதிர்கால சந்ததி கெட்டுப்போகும் என்பதுடன் இது போன்ற படங்களின் வசூல் விபரங்களை சாதனைகளாக வெளியிடுவது என்ன மனநிலை என கேள்வி எழுப்பியுள்ளார் தங்கர்பச்சான்.

இயக்குநர் தங்கர் பச்சான் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் “கருமேகங்கள் கலைகின்றன”. பாரதிராஜா, கவுதம் வாசுதேவ் மேனன், அதிதி பாலன், யோகிபாபு, எஸ்.ஏ.சந்திரசேகர் ஆகியோர் முதன்மை வேடங்களில் நடித்திருக்கும் இந்தப் படத்துக்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார். படத்தின் பாடல்களை வைரமுத்து எழுதியிருக்கிறார். ஒளிப்பதிவு என்.கே ஏகாம்பரமும், படத்தொகுப்பை பி.லெனினும் மேற்கொண்டுள்ளனர். படத்தினை டி.துரை வீரசக்தி தயாரித்துள்ளார். இந்த படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில்( 23.08.23) நேற்று நடைபெற்றது.
இதில் கலந்துகொண்டு பேசிய படத்தின் இயக்குநர் தங்கர் பச்சான், “இது ஒரு துணிச்சல் மிக்க காரியம். என் எதிரில் ஒரு லட்சம் பேர் நிற்கிறார்கள். அவர்கள் கையில் ஆயுதங்கள் உண்டு. என்னிடம் ஒன்றுமேயில்லை. நான் எப்படி எதிர்கொள்ள முடியும். நான் கடந்து போய் தான் ஆகவேண்டும். இப்படியான துணிச்சலை நான் ஒவ்வொரு படத்திலும் எதிர்கொள்கிறேன்.
ஒரு பெரிய நடிகர் நடிக்கும் படத்துக்கான வியாபாரம் உடனே நடந்து முடிந்துவிடுகிறது. மக்களும் அதை பார்க்க தயாராக உள்ளனர். இது என்ன மனநிலை. முழுவதும் வன்முறை இருக்கும் அந்தப் படத்தை குழந்தைகளுடன் சென்று பார்க்கிறோம். கண் முன் 100 பேரை கொல்வதை பார்க்கும் குழந்தைகள் என்னவாக வளரும்?. படத்தில் நடிப்பவர்களுக்கு இந்த அறிவு இருக்காதா? கலைஞனுக்கு பொறுப்பும், கடமையும் உண்டு. 10 மசாலா சினிமாவை காட்டினால் ஒரு குழந்தை அழிந்தே விடுவான். அதில் ஒன்றுமேயில்லை. தீபாவளி போன்ற விழாக்களின்போது எவ்வளவு மது விற்பனையாகிறது என செய்தி வெளியிடுவது போலத்தான் மசாலா படங்களுக்கான வசூலை வெளிப்படுத்துவதும். இரண்டுக்கும் என்ன வித்தியாசம்?”
“பாராதிராஜா அண்ணனின் படங்களை பார்த்து வளர்ந்த நான், அவருடைய 84 வயதில், அவரை முதன்மை கதாபாத்திரமாக வைத்து எடுத்திருக்கும் படம் இது.
ஒரு கதையை, சமூகம் எதை கேட்கிறதோ, அந்த கதையை அந்த சமயத்தில் உருவாக்க வேண்டியிருக்கு. ஒரு தயாரிப்பாளரை தேடி, அலைய வேண்டியிருக்கு, அவரை சம்மதிக்க வைக்க வேண்டியிருக்கு. அதற்கு ஹீரோ பிடிக்க வேண்டியிருக்கு. அதன் பிறகு எடுத்து முடிப்பதற்குள், சொல்ல முடியாது.

எடுத்த பிறகு, விற்கப் படும் பாடு இருக்கே.. அது விவரிக்கவே முடியாது. அதன் பிறகு, மக்களை அதை பார்க்க வைக்கிறது இருக்கே? இந்த பிரச்சனை எல்லாமே நல்ல படத்திற்கு தான் வரும். மக்கள் உடனே வரக்கூடிய படம் இருக்கே, அந்த படத்தில் என்ன கதை இருக்கு? ஏதோ ஒரு தலைப்பு வைக்கிறார்கள்.
அந்த நடிகர் படத்தில் ஏதோ ஒரு நடிகை நடிப்பார். அந்த நடிகை நடிக்கிறார் என்பதை வெளியிடும் செய்தி இருக்கிறதே, அதை ஒரு நல்ல திரைப்படத்திற்கு கொடுப்பதில்லை. கொடுத்திருந்தால் அந்த திரைப்படம் மக்களிடம் போய் சேர்ந்திருக்கும். அழகி படத்தை 40 படங்களுக்கு ஒளிப்பதிவு செய்த பின், ஒரு தயாரிப்பாளரை பிடித்து எடுத்தேன். அதை வெளியிட என்னபாடு பட்டேன் என்று உங்களுக்கு தெரியும். முடியாது என்று தூக்கி எறிந்துவிட்டோம். ஒரு ஆள் அதை வாங்கவில்லை. மக்களிடம் போன பின் அது வெற்றி பெற்றது. மக்களிடம் போய் சேர இங்கு பயங்கர தடை இருக்கு.
நீங்க எல்லா படங்களிலும் நடிங்க, ஆனால் இரண்டு ஆண்டுக்கு ஒரு முறை 30, 40 நாள் ஒதுக்கி, நல்ல படங்களில் நடிக்க வேண்டும் என்று நடிகர்கள் முடிவு செய்ய வேண்டும். அங்கே தான் தடை நிற்கிறது. சமூகத்திற்கான தடை அது. 500 கோடி, 600 கோடி என்று கொண்டாடுகிறீர்களே, அதில் என்ன பெருமை இருக்கு? அந்த பணம் யாரிடம் போகிறது? உழைக்கும் மக்களின் பணம் யாரிடம் போகிறது? அந்த பணம் திரும்ப என்னவா வரும்? திரும்ப அதே மாதிரியான படமாக தான் வரும். சமூகத்தை சீரழிக்கும் படமாக தான் அது வரும். ஆனால், அதே செலவில் நல்ல சினிமா, பத்து உருவாக்க முடியும்” என்றார்.
இராமானுஜம்
கட்டாய இந்தி தேர்வு: ஸ்டாலின் கண்டனம்!
