சொத்துக்குவிப்பு வழக்குகளில் இருந்து அமைச்சர்கள் கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன் மற்றும் தங்கம் தென்னரசு ஆகியோர் விடுவிக்கப்பட்டதற்கு எதிரான சென்னை உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துக்கொண்ட வழக்கில் இன்று (ஆகஸ்ட் 7) நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் தீர்ப்பளிக்கிறார்.
2006-2011ஆம் ஆண்டு திமுக ஆட்சிக்காலத்தில் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக தொடரப்பட்ட வழக்கில் இருந்து அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரனை கடந்த 2023-ஆம் ஆண்டு ஸ்ரீவில்லிபுத்தூர் முதன்மை அமர்வு நீதிமன்றம் விடுதலை செய்தது.
அதேபோல 2006-2011 காலகட்டத்தில் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக தொடரப்பட்ட வழக்கில் இருந்து அமைச்சர் தங்கம் தென்னரசு மற்றும் அவரது மனைவியை ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றம் 2022-ஆம் ஆண்டு விடுவித்தது.
இந்த உத்தரவுகளை மறு ஆய்வு செய்யும் வகையில் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், அமைச்சர்கள் கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன் மற்றும் தங்கம் தென்னரசு ஆகியோருக்கு எதிராக தாமாக முன்வந்து வழக்குப்பதிவு செய்தார்.
இந்த வழக்கில் அமைச்சர் தங்கம் தென்னரசு சார்பில், மூத்த வழக்கறிஞர் ரமேஷ் ஆஜராகி, “ஆட்சி மாற்றத்துக்கு பின் பழிவாங்கும் நோக்கில் இந்த வழக்குப்பதிவு செய்யப்பட்டது. ஆதாரங்களை புறக்கணித்துவிட்டு வழக்கு தொடரப்பட்டுள்ளது. இதை எப்படி நியாயமான விசாரணையாக கருத முடியும்.
வழக்கில் முதல் புலன் விசாரணை அதிகாரி சேகரித்த ஆதாரங்களை மாற்றாமல், கூடுதல் ஆதாரங்களை சேர்ப்பது மறு விசாரணை கிடையாது. அது, மேல் விசாரணை ஆகும். இந்த விசாரணை காவல் கண்காணிப்பாளரின் ஒப்புதல் பெற்றே நடைபெற்றது.
மேல் விசாரணைக்கு பின், குற்றம்சாட்டப்பட்டவர்களுக்கு எதிரான குற்றச்சாட்டுக்களுக்கு ஆதாரங்கள் இல்லை என வழக்கை முடித்து அறிக்கை தாக்கல் செய்தால், சம்பந்தப்பட்ட நீதிமன்றம் குற்றம் சாட்டப்பட்டவர்களை விடுவிக்கலாம். அதற்கு சம்பந்தப்பட்ட நீதிபதிக்கு எந்த தடையும் இல்லை” என்ற வாதத்தை முன்வைத்தார்.
அமைச்சர் ராமச்சந்திரன் தரப்பில், “தான் விடுவிக்கப்பட்ட ஒரு வழக்கை தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுக்க எந்த ஒரு அடிப்படை காரணமும் இல்லை. தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுக்க வேண்டும் என்றால் அனைத்து வழக்குகளையும் விசாரணைக்கு எடுக்க வேண்டும். அமைச்சர் என்பதால் உள்நோக்கத்துடன் மறு ஆய்வு செய்யக்கூடாது” என்று வாதிடப்பட்டது.
அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில், இந்த வழக்கில் இன்று காலை 10.30 மணிக்கு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் தீர்ப்பளிக்கிறார்.
செல்வம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
Olympic 2024: இந்தியாவுக்கு பதக்கம் உறுதி… வினேஷ் போகத் புதிய வரலாறு!
டாப் 10 நியூஸ்: கலைஞர் நினைவு நாள் பேரணி முதல் கேகேஎஸ்எஸ்ஆர், தங்கம் தென்னரசு வழக்கு தீர்ப்பு வரை!