சொத்துக்குவிப்பு வழக்கிலிருந்து அமைச்சர் தங்கம் தென்னரசு விடுவிக்கப்பட்டதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்த வழக்கில் நவம்பர் 28-ஆம் தேதி முதல் இறுதி விசாரணை தொடங்க உள்ளது.
2006-11 காலகட்டத்தில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சராக இருந்த தங்கம் தென்னரசு வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக விருதுநகர் மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை தங்கம் தென்னரசு மற்றும் அவரது மனைவி மணிமேகலை மீது 2012-ஆம் ஆண்டு வழக்குப்பதிவு செய்தது. இந்த வழக்கிலிருந்து 2022-ஆம் ஆண்டு டிசம்பர் 13-ஆம் தேதி தங்கம் தென்னரசு மற்றும் அவரது மனைவி மணிமேகலை ஆகிய இருவரையும் விடுவித்து ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
லஞ்ச ஒழிப்புத்துறை மேல்முறையீடு செய்யாததால் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் தாமாக முன்வந்து வழக்கை மறு விசாரணைக்கு எடுத்துக்கொண்டார். இந்த வழக்கு நீதிபதி ஜெயச்சந்திரன் முன்பாக இன்று விசாரணைக்கு வந்தது.
தங்கம் தென்னரசு தரப்பில், “இந்த வழக்கை மறு ஆய்வுக்கு எடுத்தது தொடர்பாக எந்த முரண்பாடான முடிவுகளையும் எடுக்கவில்லை. வழக்கில் தங்களுக்கு சாதகமான முடிவுகளை நீதிமன்றத்தில் தெரிவிப்பதற்கு கால அவகாசம் வழங்க வேண்டும்” என்று கோரிக்கை வைக்கப்பட்டது.
இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதி ஜெயச்சந்திரன் வழக்கின் இறுதி விசாரணையை நவம்பர் 28-ஆம் தேதி முதல் தொடங்க உத்தரவிட்டார்.
செல்வம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
தீபாவளி பண்டிகை: ரேஷன் கடைகளுக்கு விடுமுறை அறிவிப்பு!
கார்த்தியின் ‘ஜப்பான்’… இணையத்தில் வெளியிட தடை: உயர்நீதிமன்றம்!
